Search

ராஜா ராணி விமர்சனம்

raaja raani
எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லியின் முதல் படம். எனினும் பெரிய படங்களுக்கு ஒப்பான விளம்பரத்தினை தயாரிப்புக் குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்விக்கு பின்பும் காதலும்/வாழ்க்கையும் உண்டு என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை.

ஏர்வாய்ஸ் கம்பெனியின் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் டெலிகாலர் சூர்யாவாக ஜெய். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படத்தில் அதே போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். பயந்த சுபாவத்துடனும் கொச்சையான ஆங்கில உச்சரிப்புடனும் படத்தின் முதல் பாதி கலகலப்பிற்கு உதவுகிறார். நயன்தாராவிற்குக் கோபமாக ஃபோன் செய்து அழும் பொழுது, ‘எங்கப்பாக்கு மட்டுந்தாங்க பயப்படுவேன். மத்தபடி ஐ லவ் யூங்க’ என நயன்தாராவிடம் சொல்லும் பொழுது என பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். 

ரெஜினாவாக நயன்தாரா. செப்டம்பர் 2010 இல் வந்த பாஸ் (எ) பாஸ்கரன் படத்திற்குப் பிறகு, மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் கதாநாயகி நடித்திருக்கிறார். சில காட்சிகளில் நயன்தாராவை விட ஜெய் இளமையாகத் தோன்றுகிறார். அதே போல், நயன்தாரா அழும் காட்சிகளிலும் ரொம்பவே முகத்தை சுழிக்கிறார். மற்றபடி நயன்தாரா படம் முழுவதும் அழகாக வியாபிக்கிறார். கல்லூரியில் அவர் செய்யும் குறும்புகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், அவரை விட அவரது தோழி அதிகமாகவே கவனத்தை ஈர்க்கிறார். நயன்தாராவின் டார்லிங்காக வரும் சத்யராஜ் சில காட்சிகளில் தான் வந்தாலும், பொறுப்பான தந்தையாக வலம் வருகிறார். 

ஜானாக ஆர்யா. நஸ்ரியாவுடனான ப்ளாஷ்-பேக் காட்சிகளில் கொஞ்சம் துறுதுறுவென இருக்கிறார். ஆனால் ஜெய் கவர்வது போல் இவர் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆர்யா, சந்தானம் இணைந்தும் கூட ஜெய் அளவுக்கு காட்சிகளைக் கலகலப்பாக்க  அவர்களால் இயலவில்லை. எம்.பி.ஏ. படித்தவராக வரும் கோட் சூட் போட்ட ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் தன் பங்கிற்கு அசத்துகிறார். அடிக்கடி அவர் சொல்லும் ‘ஃபன்னி கைஸ்’ ரசிக்க வைக்கிறது. 

கீர்த்தனாவாக ‘நேரம்‘ நஸ்ரியா. முதல் பார்வையிலேயே காதலில் விழும் யாருமே இல்லாத அநாதை நாயகி. நாயகனை அலைய வைத்து, பின் தனது காதலை ஒப்புக் கொண்டு, கல்யாணம் என அனைத்துக் கிறுக்குத் தனங்களையும் மிக அழகாய் செய்கிறார். ‘ஐ’ என்பது போல அவர் கொடுக்கும் ரியாக்ஷன் ஒரு சிறு சான்று. ஆனால் சுலபமாக யூகிக்க முடிந்த ஒரு கதாபாத்திரத்தில் வந்து மறைகிறார்.

முதல் பாதியில் ஒரு காதல் கதை. இரண்டாம் பாதியில் ஒரு காதல் கதை. படத்தின் முடிவில் ஒரு காதல் ஆரம்பம். எல்லாம் சரி படத்தின் கருவாகச் சொல்லப்படும் ‘காதல் தோல்வி’ படத்தில் எங்குள்ளது? இரண்டு நண்பர்களில் ஒருவர் இறந்து விட்டால் அது “நட்பு தோல்வி”யாகி விடுமா என்ன?

படத்தை இன்னும் கொஞ்சம் கிரிஸ்ப்பாகக் கொடுத்திருக்கலாம். யூகிக்க முடிந்த முடிவு என்பதால், காட்சிகள் நீண்டு கொண்டே இருக்கிறதோ என எண்ண வைக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதி. ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் இருவருக்கு கல்யாணம் ஆகிவிடுகிறது. அதை மற்றவர் மேல் வன்மமாக தான் காட்ட வேண்டுமா? (1986 லேயே ‘மெளன ராகம்’ ரேவதிக்கு இதே பிரச்சனை தானே!!) பெரிய ஹால். பெரிய சோஃபா. ஒரே அறையில் ஒரே கட்டிலில் படுத்துக் கொண்டு அழுது கொண்டேயிருக்கிறார் நயன்தாரா. அதுவும் அவர் அழுதால் அவரது கண்ணீரில் அவரது கருப்பு மையும் சேர்ந்தே கரைகிறது. எந்தவித காரணங்களுமின்றி கல்யாணம் நடந்த நொடி முதலே எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.   அவர்கள் இருக்கும் பிளாட்டுக்கு இரண்டு சாவிகள் இருக்காதா? வேண்டாத கணவன் குடித்து விட்டு வந்தால்.. பாவம்  நயன்தாரா தான் நொந்து கொண்டே தினமும் வீட்டைத் திறக்கிறார். 

முத்துராஜின் ‘ஆர்ட்’ படம் முழுவதும் பளீச்செனத் தெரிகிறது. அறிமுக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நீரவ் ஷாவின் அசோசியட் என்பது குறிப்பிடத்தக்கது. கதாபாத்திரங்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்துக் கலக்கியுள்ள இயக்குநர் அட்லி, அதே போல் திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். 




Leave a Reply