Search
Akkarai

அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

 

கல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் தாயகம் திரும்புகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நிதர்சனம். படிக்க வந்தவர்கள் வேலை தேடி செட்டிலாகிறார்கள். வேலை கிடைத்தவர்கள்  மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் உழல ஆரம்பித்து,  இன்னும் சில வருடம் சில வருடம் எனத்  தள்ளிப் போட ஆரம்பித்து, திருமணம் முடியட்டும் எனக்  காத்திருந்து,  பிறகு குழந்தை, அப்பா, அம்மா, மாமனார், மாமியார் விஜயம் எல்லாம் முடிந்த பிறகு, சரி! ஊருக்குப் போய் விடலாம் என நினைக்க ஆரம்பிக்கும் போது , எனக்கு இங்கு தான் பிடித்திருக்கிறது  என கலங்கும் அன்பு மனைவியின்  கண்களை காணச் சகிக்காமல் அமைதியாக செட்டிலாகி விடுகிறவர்கள் ஒரு பக்கம், இப்படி வெளிநாட்டுச் சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டோ அல்லது அடிமையாகியோ செட்டிலாகி விடுகிறார்கள்.

 

இப்படி செட்டிலானவர்கள் அனைவருமே வெளிநாடு  கிளம்புவதற்கு முன்னர், தமது நட்பு மற்றும் சுற்றத்தாரிடம் மறக்காமல் ஒரு வசனம் பேசியிருப்பார்கள்.‘படிப்பு  முடிந்த கையோடு ஓரிரு வருடங்கள் வேலை செய்து விட்டு ஊருக்கு வந்து விடுவேன். அந்த ஊர் எனக்கு  செட் ஆகாது’  என்றோ, ‘ஓரளவு கை நிறைய சம்பாதித்து விட்டு ஊரைப் பார்க்க வந்துருவேன். ஒரு வாய்சோறு.. அது கூழோ கஞ்சியோ நம்ம ஊர்ல குடிக்கிற  மாதிரி  வருமா?’  என உணர்ச்சி  வசப்பட்டிருப்பார்கள்.

 

உலகின் மிகப் பழைமையும், சிறப்பும் வாய்ந்த ஒரு கலாச்சாரத்தில் பிறந்து, அதில் ஊறித் திளைத்து  வளர்ந்தவர்கள் தங்களின்  கல்வி மற்றும் வேலை நிர்பந்தங்களுக்காக வெளிநாடு வந்து கொஞ்ச நாளில் தாய் மண்ணை மறந்து இங்கேயே செட்டிலாகி விட நினைப்பதன் பின்னால் என்னக் காரணம் இருக்கும்? வெறும் பகட்டும், படாடோபம் மட்டும் தானா? இல்லை தன் தாயகத்தில் கிடைக்காத அல்லது நினைத்தே பார்க்க முடியாதவைகள் கிடைப்பதினாலா?

 

முதன் முதலில் வெளிநாடுகளுக்கு வரும்பொழுது, விமானத்தில் இருந்து கீழே பார்க்க, ஒரே மாதிரியான நேர்த்தியான வீடுகள், தெருக்கள், காடுகள், ஆறுகள் என்று, இது வரை நாம் சினிமாவில் மட்டுமே பார்ந்திருந்த காட்சிகளை நேரில் பார்க்கும் போது மனம் ‘விர்’ரென பறக்க ஆரம்பிக்கும். வந்து இறங்கியவுடன் நம்மை வரவேற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள், பெரிய பெரிய சாலைகள், அதில் வழுக்கிச் செல்லும்  கார்கள், சாலை விதிகளை மீறாத ஓட்டுனர்கள் என…அந்த புதிய சூழல் நமக்கு பதட்டத்தை தந்தாலும், அதையும் மீறி மனம் ஊஊலல்லா என்று ஜதி போடத்தான் செய்கிறது. குண்டும் குழியுமான சாலை,  அதன் நெடுகே குப்பை கூளங்களைப் பார்த்தே  வளர்ந்து விட்டவர்களுக்கு,  உட்கார்ந்து மண் சோறு சாப்பிடலாம் என்கிற அளவிற்கு சுத்தமான சாலைகளைப் பார்க்கும் போது, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப்  பார்த்த கதைதான் நினைவுக்கு வரும்.

 

சாலையில் நடந்து போனால் துளி சத்தமில்லை; அலற அலற ஹாரனை அடித்து ஆளை  மிரட்டும்  அட்டகாசமில்லை; தூசியில்லை; முந்திக் கொண்டு செல்பவர் கூட்டமில்லை. ‘வீட்ல சொல்லிக்கினு வந்தியா கசுமாலம்?’ என்று  எவன் வாயிலும் விழ  வேண்டிய  அவசியம் இல்லை. நட்ட நடுவில் குறுக்கே பாயும் ஆட்டோ, ஸ்கூட்டர், சைக்கிள் என்று பயமுறுத்துவோர் இல்லை, சொன்னால் சொன்ன நேரத்திற்கு வரும் பேருந்துகள், பஸ்ஸில் ஒட்டி உரசி இடித்துக் கசக்கும் கூட்டம் இல்லை என்று கனவுலகம் போல் இருக்கும் இடத்தில் புழங்க  யாருக்குத் தான் கசக்கும்?

 

நமக்கென்று குடியிருக்கப் போகும் அபார்ட்மெண்ட்டைப் பார்த்தவுடன் மீண்டும் ஒரு பெருமூச்சு. சமையலறை, சாப்பிடும் இடம், பெட்ரூம், பாத்ரூம் வசதிகள்,  ,குழாயைத் திறந்தால் சுடுதண்ணீர் வேண்டுமென்றால் சுடுதண்ணீர், குளிர்ந்த நீர் வேண்டுமா குளிர்ந்த நீரென்று குழாயை திருப்பித் திருப்பி ஆனந்தப்படுவதில் ஆரம்பிக்கும் இந்த ஆனந்தம், சமையல் அறையில்  காஸ் சிலிண்டர் இல்லாமல் காஸ் அடுப்பு  அதுவும் நான்கு பர்னர்கள் கொண்ட ஸ்டவ், எலெக்ட்ரிக் அடுப்பு  என்று  திக்கு முக்காடும் அந்த நேரங்களில் அப்பாடா எப்ப காஸ் சிலிண்டர் வரும், என்று காஸ் தீரும் என்று காலெண்டரை பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மனம் போடும் தாளத்தில்…

 

முதன்முதலில் காய்கறிகள் வாங்க கணவருடன் கைக் கோர்த்துப் போகும் வேளைகளில் பிரம்மாண்ட கடைகளையும் கண்விரியப் பார்த்துக் கொண்டே நுழைய ஆரம்பிக்கும் பொழுதே  இதுக்குத் தான் மக்கள் அடித்துக் கொள்கிறார்களா என்று நினைக்கத் தோன்றும் வேளையில்…

 

அங்கே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண பழங்கள், மெழுகு தேய்த்து மொழுமொழுவென்று மின்ன, அப்போது தான் பறித்தது போல் காய்கறிகளும், விதவிதமான ரொட்டிவகைகளும், மீன், கோழி என்று இறைச்சி வகைகளும், டின்னில் விதவிதமாக விற்கப்படும் பதப்படுத்திய உணவுகளும், கொறிக்க என்று இனிப்பு, உப்புரொட்டிகளும், பலவித பாஸ்டா வகைகளும், வீட்டிலேயே எளிதில்செய்ய கேக்மிக்ஸ்களும், ப்ரோசன் காய்கறிகளும், அங்கேயே அரைத்துக் கொண்டு மணமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் காபி பொடி தயாரிக்கும் வசதியும், தயிர், மோர் , ஐஸ்கிரீம் என்று எல்லாவற்றையும் ஒரே  இடத்தில் பார்க்க  அந்தப்  பிரம்மாண்டம் கண்ணிலேயே இருக்க , ஒரு ஈ எறும்பு இருக்கா, எவ்வளவு பளிச்னு இருக்கு தரையெல்லாம் என்று அனுபவம் புதுமை மனம் பாட…

 

அரிதான ஒரு சில நிகழ்வுகளைத்தவிர, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை வெறித்துப் பார்க்கும் பொறுக்கிகள் கூட்டம் இல்லை, இடித்துக் கொண்டு, இடுப்பைக் கிள்ளும் பொறம்போக்குகள் கூட்டம் இல்லை, குடித்து விட்டு நடு ரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூடத்தெரியாமல் அவன் எடுத்த வாந்தியிலேயே புரளும் குடிக்கார கூட்டம் இல்லை எனும் போது..

 

தனக்குப் பிடித்த தலைவருக்கு ஓட்டுப் போடும்சுதந்திரம், எந்த ஒரு கரை வேட்டிக்கும், அவனை சுற்றி இருக்கும் தாடி வைத்துக்கொண்டு அலையும் தண்டங்களுக்கும் பயப்படத் தேவை இல்லை.  தலைவர்கள் பெயரை சொல்லிக் கொண்டு ஊர்வலம், பாலாபிஷேகம்  என்ற  கூச்சல் குழப்பங்கள் இல்லை, சுதந்திரமாக எங்கும் போய் வர முடியும் எனும் போது…

 

அரசியல்வியாதிகள் கூட்டம், மேடை, கூச்சல், பாலபிஷேகம், பந்தோபஸ்து என்ற இரைச்சல் பொது மக்களை அலைக்கழிக்காததைப்  பார்க்கும்போது…

 

பருவ நிலைக்கேற்ற  உடைகள் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விட்டு, ஒவ்வொரு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு  தனித்தனி  உடைகளும், காலணிகளும் என்று  உள்ளம் கொள்ளைப்  போக ஆரம்பிக்கும் அதே வேளையில்…

 

குழந்தை பிறப்பு, மருத்துவ சிகிச்சை என  என்று ஆஸ்பத்திரிகளில் இருக்கும் மருத்துவ  வசதியும், அலட்சியம் இல்லாத கவனிப்பும் என்று…

 

குழந்தைகள் விளையாட, படிக்க என்று பொது நூலகங்களில் இருக்கும் புத்தகங்களையும், அனைத்து  வயதினருக்கும் படிக்க வசதியாக இருக்கும் இடத்தை  ஒரு  பெருமூச்சுடன்…
 
குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்து, கணினியில் விளையாட, படிக்க, வயலின், பியானோ, நடனம், படிப்பு ,டென்னிஸ் என்று  தனக்குக்  கிடைக்காத வாய்ப்புக்கள் கிடைக்கும் பொழுது.. 

 

பணக்காரக்  குழந்தைகளுக்குத் தான்  நல்ல  கல்வி  வசதி என்ற நிலை, பல இடங்களிலும் கிடையாது. அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி எனும் பொழுது…

 

ஐந்து நாள்வேலை, வார விடுமுறையில் நண்பர்களுடன் பார்ட்டி கலாச்சாரம், விடுமுறைகளில் ஊர் சுற்றுவது என்று ஆரம்பித்து இந்த வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிக்கும் போது…

 

கார் லைசென்ஸ் வாங்கப்  போனால் எந்த தரகரிடமும் கையூட்டு தர தேவை இல்லை. போனோமா, படிவங்களை நிரப்பினோமோ, கார் ஓட்டிக் காண்பித்தோமா, வீடு தேடி வரும் லைசென்ஸ். ஆஹா! இதைக்  கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா  நம் தாய்நாட்டில், எட்டு எட்டா எட்டாயிரம் தடவைப்  போட்டுக் காட்டினாலும் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தால் தானே நம் ஊரில் காரியமாகிறது. அடிபட்டவனுக்குத் தானே அந்த வலி தெரியும்?

 

வேலைக்குப் போனால், வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது போல், திறமை இருந்தால் சீனியாரிட்டி, ஜுனியாரிட்டி என்ற பாகுபாடு இல்லாமல்பல இடங்களிலும் திறமைக்கேற்ப  வேலை நிச்சயம் எனும் போது…

 

வீடு வாங்கணுமா? பத்திரம் முறையாக வீடு தேடி வரும். பட்டா வாங்க நாயா பேயா  அலைய  வேண்டிய  நிர்ப்பந்தம் இல்லை. வீடு விற்றால் எந்த லோக்கல் ரௌடிக்கு  எவ்வளவு கொடுக்க வேண்டுமோ என்கிற  பயம் இல்லை எனும்  பொழுது…

 

சாதாரண மனிதன் நடை முறை  வாழ்வில் லஞ்சம்  என்றெல்லாம் பயப்படத் தேவை  இல்லை என்ற எண்ணமே எத்தனை சுகமாய் இருக்கிறது?

 

வெளிநாடுகளில் இயற்கையின் திருவிளையாடல்களைக் காணும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்…

 

வெளிநாட்டில் இருப்போருக்கு  உள்ளூரில் கிடைக்கும் ராஜ மரியாதையில் மயங்கும் போதெல்லாம்…

 

புகுந்த வீட்டில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடமிருந்து தப்பித்தோம் என்ற பெருமூச்சில்… 

 

சம்பாத்தியத்தில் பெற்றோரையும்,  உடன்பிறந்தோரையும் ஓரளவு  நல்ல வசதிக்குக் கொண்டு வரமுடியும் பொழுது…

 

இது மாதிரி நீளும் லிஸ்டுகள் தான் வெளி நாட்டு வாழ்க்கையில் உள்ள பல பிரச்னைகளையும் மறக்கச் செய்து  அக்கரைச்சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே , புதுமையிலே மயங்கி நின்றேன்…  லாலா..லாலா…லலலா… என்று பலரையும் வசியம் செய்து விடுகிறது.

 

ஆனால்,  இதையெல்லாம் மீறி  சொந்த நாட்டிற்குப் போகும் பல நல்ல உள்ளங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

 

– லதாLeave a Reply