Search

அது என்ன… காதல்!

காதல்

யார பார்த்தாலும் நான் அவள காதலிக்கிறேன், இவன காதலிக்கிறேன் என்று சொல்றாங்க. ஆனா.. எனக்கு இந்த காதல் மட்டும் ஒரு புரியாத விஷயாமாகவே இருக்கு. ஏன் எரிச்சலா கூட தான் இருக்கு? இத சொன்னா என்னை இதயம் இல்லாதவன் என்று சொல்றாங்க.

சரி காதல் என்ற வார்த்தைக்கு இலக்கண இலக்கியத்தில் பொருள் தேடி, ஓலைச் சுவடி எல்லாம் கூட ஒன்றிரண்டு புரட்டினேன். காதல் என்பது பெரும்பாலும் வினைச் சொல்லாகவும்(Verb), சில இடத்தில் பெயர்ச் சொல்லாகவும்(Noun) உபயோகிக்கப் படுகிறது.

ஓடுபவன் -ஓடுகிறவர்களை குறிக்கின்றது. சாப்பிடுகிறவன் – சாப்பிடுபவர்களை குறிக்கின்றது. காதலன் -காதலிப்பவர்களை குறிக்க வேண்டும் அல்லவா.. ஆனால்? “அவன் தான் என் காதலன்” என்றல்லவா சொல்கிறோம். சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் படியுங்கள். “அவன் தான் என் சாப்பிடுகிறவன்/ஓடுபவன்” என்பது எவ்வளவு முட்டாள் தனமான வாக்கியமாக படுகிறது. “நான் தான் காதலன்/காதலி” என்று சொல்லுவது தான் சரியான பதம்.

சரி.. ‘காதலித்து தொலையட்டும்’ விடலாம் என்று பார்த்தால், காதலிப்பவர்களின் கூத்தை தாங்க முடியவில்லை. எவ்வளவு சுயநலம்? காதலிக்கிறோம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் பெரிய அயோக்கியர்கள் என்று நான் சொன்னால், சாலையில் நடமாட என்னை உயிருடன் விட மாட்டார்கள். அதனால் நான் எதுவும் சொல்லவில்லை. “வாடிய பயிரை கண்ட போதெல்லாம்….” என்று செடிகளின் மீதெல்லாம் காதல் கொண்டு உருகினாரே அவர் சிறந்த காதலன். தொழு நோயாளிகளை காதலோடு அணைத்து அரவணைத்தாரே அவர் சிறந்த காதலி. மற்றவர்கள்? அழகான பெண்ணை காதலிப்பவர்கள், பணக்காரனை காதலிப்பவர்கள், நல்ல குணம் படைத்தவளை காதலிப்பவர்கள், குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பவனை காதலிக்கிறவர்கள்…. இப்படி ஏதாவதொரு சுயநல காரணத்தோடு ஏற்படுவதின் பெயர் காதலா? சற்றே யோசியுங்கள்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் காதலன் தான். சூரியன் ஓளியினை சுற்றி உள்ள அனைத்தின் மீதும் படர விடுவது போல, ஒவ்வொரு மனிதனும் சுற்றி உள்ள அனைவரையும் காதலிக்க வேண்டியவன். ஆனால் பண்பட்ட சிலராலே அது இயலுகிறது. மற்றவர்களால் பண்பட முடியவில்லை, காதலின் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூட பரவாயில்லை. காட்டாறு போன்ற ஒரு விஷயத்தை உள்ளங்கையில் அடங்கும் சிறிய துளியாக்கி அதையும் கிடைத்தற்கரிய ஒன்றாக ஏந்து ஏந்து என்று ஏந்துகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுக்கும் புத்திசாலிதனத்தை (சுயநலத்தை) “காதல்” என்று சொல்லி சிறுமைப் படுத்துவதா? சரி இந்த பாழும் சுயநலத்திலாவது ஒரு ஒழுங்கு இருக்கிறதா? பசி, தாகம், காமம் போன்று காதலும் ஒரு உணர்வு என்று சொல்லுகிறார்கள். இயற்கையாக எழும் உணர்வினை வெளிப்படுத்த “காதலர் தினம்” வரை காத்திருக்கிறார்கள். அந்த தினத்தில் மட்டும் தான் காதல் மனதில் எழுமோ! மற்ற தினத்தில்?

ஒன்றுமே புரிய மாட்டேங்குது. தயவு செய்து யாராவது எனக்கு புரிய வையுங்களேன்.

– தினேஷ் ராம்




Leave a Reply