Search

அம்மா கணக்கு விமர்சனம்

Amma kanakku thirai vimarsanam

பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மகளின் கணக்குப் பிரச்சனையை அம்மா எப்படிக் கணக்கு போட்டே தீர்க்க முயல்கிறார் என்பதுதான் படத்தின் கரு.

ஓட்டுநரின் மகன் ஓட்டுநராகவும், வேலைக்காரியின் மகன் வேலைக்காரியாகவும் தானே போகப் போகிறார்கள்; அதற்கு ஏன் அநாவசியமாகக் கஷ்டப்பட்டுப் படிக்கணும் என்கிறாள் பத்தாம் வகுப்பு மாணவி. மேலும், “வேலைக்காரியான உனக்கு என்னைப் படிக்க வைக்க தகுதியுமில்ல; பணமுமில்ல” எனத் தனது தாயைக் காயப்படுத்தவும் செய்கிறாள். இந்த விஷ விதையைத் தன் மகளின் மனதிலிருந்து அகற்ற அமலா பால் போடும் கணக்கு தான் அம்மா கணக்கு. 

காக்கா முட்டை போல் மீண்டுமொரு படத்தைத் தயாரித்துள்ளார் தனுஷ். ஆனால், அப்படத்தின் அழகான கவிதை போன்ற முடிவு காக்கா முட்டையை மறக்கவியலா திரையனுபவமாக மாற்றியது. அம்மா கணக்கு அந்த மேஜிக்கல் கணங்களைத் தவற விட்டதாகத் தோன்றுகிறது. ஆனாலும், தந்தையற்ற மகளுக்கும் அவளது அம்மாவுக்குமான உறவை மையப்படுத்தி வந்திருக்கும் மிக முக்கியமான படமிது. தொலைக்காட்சிக்கு அடிமையாகியும், எடுத்தெறிந்து பேசும் பதின்ம வயது மகனோ/மகளோ மிகுந்த விட்ட தலைமுறையை எண்ணிக் கவலை கொள்ளா பெற்றோர்கள் மிகச் சொற்பமே! அப்புள்ளியை உணர்வுபூர்வமாய்க் கச்சிதமாகத் தொடுகிறது படம். ஆனால், அதற்கான தீர்வாய்ச் சொல்லப்படும் சென்ட்டிமென்ட் க்ளைமேக்ஸ் தான் மனதில் ஒட்டாமல் படத்தை நீர்த்துப் போகச் செய்கிறது.

ஹெட் மாஸ்டராகவும், கணக்கு வாத்தியாராகவும் வரும் இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரை தன் நடிப்பில் பிரதியெடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது உடல்மொழியில் வலிந்து திணிக்கப்பட்ட உடல் மொழி தெரியவே செய்கிறது. அதற்கு இதுவரை அவர் ஏற்றிருந்த பாத்திரங்கள், பார்வையாளர்கள் மனதில் தங்குவது காரணமாக இருக்கலாம். படத்தில் ரேவதி மிக முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். ஆனால், படம் முழுவதும் அமலா பால். பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு அம்மாவாக தாய்மை பொங்க நடித்துள்ளார். தன் மகள் நன்றாகப் படிக்க வேண்டுமே என்ற பரிதவிப்பைப் படம் முழுவதும் சுமந்து வருகிறார்.

படத்தை அழகாக்குவது யுவஸ்ரீ. தூக்க கண்களுடன் அறிமுகமாகும் யுவஸ்ரீயின் முக பாவனைகள் அற்புதம். வசனம் பேசும் தொனியும் கலக்கல். அவள் பேசும், செய்யும் எல்லாமே வம்பு என்றாலும், அமலா பால் அளவுக்குப் பார்வையாளர்களுக்கு யுவஸ்ரீ மேல் கோபம் வருவதில்லை. பதின்மத்தின் மத்தியில் ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தைத் தனத்தின் கடைசி எச்சங்களை யுவஸ்ரீ முகத்தில் காணலாம்.

இயக்குநர் விக்ரமனன் பாணி க்ளைமேக்ஸில் வந்திருக்கும் ஓர் அரை யதார்த்த படமென அம்மா கணக்கைச் சொல்லலாம். ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற இந்திப் படத்தை இயக்கிய அஷ்வினி ஐயர் திவாரியே, அப்படத்தைத் தமிழிலும் மறு உருவாக்கம் செய்துள்ளார் (ஒருநாளில் இரண்டு பெண் இயக்குநர்களின் படம் (ராஜா மந்திரி, அம்மா கணக்கு) வந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இது கண்டிப்பாக சினிமாவை ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச் செல்லும்). பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வலுவான திரைக்கதை இல்லாவிட்டாலும், முழுப் படத்தையும் சுணக்கம் ஏற்படாமல் பார்க்க முடிவது கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவாலேயே!