Search

ஆத்மா

ஆத்மா என்று எதுவும் கிடையாது என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானத்தால் மனிதனின் எண்ணங்கள் எதில் இருந்து பிறக்கின்றது என்பதை கண்டு பிடிக்கமுடியவில்லை.

பருப்பொருளிலும் விசையிலும் (Matter and Force) இருந்து மனிதனின் பிரக்ஞை பிறப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை. விசையில் இருந்து விசை பிறக்கிறது. மூளை அணுக்கூறுகளின் அசைவிலிருந்து புலஉணர்வோ அறிவோ பிறப்பதில்லை. அவை விஞ்ஞானத்தைக் கடந்த ஒருசக்தியில் இருந்து பிறக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. மூளை மனிதனின் புலன் உணர்வுகளுக்குத் துணை போகும் ஒரு கருவியேயொழிய அது அவனுடைய உணர்வுகளுக்குக் காரணியான உறுப்பு அல்ல.

சடப்பொருளுக்கும் உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கும் உள்ள வித்தியாசம், உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற அறிவு இருப்பதே. சூரியன் இருப்பதை சூரியப் பிரகாசம் வெளிப்படுத்துவதுபோல் சீவன் உயிரோடு இருப்பதற்கு சான்றாக அச்சீவனின் அறிவு இருக்கிறது.

‘நான் இருக்கிறேன்’ என்ற இந்த அறியுந்தன்மையை (Cognition) ஆத்மா (Soul) என்றும், ஆவி (Spirit) என்றும், தன்முனைப்பு (Ego), என்றும் உளம் (Psyche) என்றும், உயிர் என்றும், மனசு என்றும் தத்துவ ஞானிகள் அவரவர் கண்ணோக்கில் விவரிக்க முற்படுகின்றனர்.

அவ்வளவு சுலபமாக விவரிக்கக் கூடியதல்ல ஆத்மன். ஆத்மனையும் அதற்கு பிரம்மத்தோடு உள்ள தொடர்பையும் புரிந்துகொள்வதையே பரமஞானம் எனப்படுகிறது. இந்து மதமே பிரம்ம – ஆத்ம தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளது. இத்தத்துவத்தை இந்து வேதங்களும் வேதாந்தமும் நன்கு விளக்கியுள்ளன. இவ்விளக்கங்களை பாஷ்யக்காரர்கள் த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று கண்ணோக்குகளில் எடுத்தாளுகின்றார்கள்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஜகத்தையும், இந்த ஜகத்தில் வாழ்ந்திருக்கும் ஜீவர்களையும் ஆள்வது பரம்பொருள். தங்கள் உபாதிகளால் ஜகத்தில் கட்டுண்டு கிடக்கும் ஜீவன்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுத்து, தங்கள் கர்மாவுக்கேற்ப மேல்நிலைக்குச் செல்கிறார்கள் அல்லது கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். பரம்பொருளைச் சார்ந்திருந்து ஜீவர்கள் விடுதலை பெறுவதையே முக்தி எனப்படுகிறது. இத்தத்துவம் மூன்று பாஷ்யக்காரர்களுக்கும் பொதுவானது. ஆனால் த்வைதம், ஜகம், ஜீவன், பரம் ஆகிய மூன்றும் அனாதியிலிருந்து வெவ்வேறானவை. ஜீவன் பரத்தினுடைய கருணையினால் ஜகத்திலிருந்து விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி. முக்திநிலையிலும் பரம் வேறு, ஜீவன் வேறு என்கிறது த்வைதம். விசிஷ்டாத்வைதம் பெருமளவுக்கு அத்வைதத்தைச் சார்ந்திருப்பது, கடவுள் ஒருவர்தான் இருக்கிறார், அவருக்கு உடலாயிருப்பது ஜகம். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த்தத்துவங்களாக இருப்பது ஜீவராசிகள். ஜீவன் பரத்திடம் சரணாகதியடைந்து தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று உணர்ந்திருப்பதுதான் முக்தி என்கிறது விசிஷ்டாத்வைதம். அத்வைதம் என்பது இரண்டற்றது என அர்த்தப்படுகிறது. ஜகம் வேறு, ஜீவன் வேறு, பரம் வேறு அல்ல. உள்ளது ஒன்றே. அங்கு இங்கு எனாதபடி நீக்கமற பிரபஞ்சம் எங்கும் மறைநுட்பமாக இருந்துகொண்டு முழு இயக்கத்துக்கும் ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாயிருக்கும் பரம்பொருள் அகண்ட சத் – சித் – ஆனந்தம். தனது மாயா சக்தியினால் தன்னை ஜகம் ஆகவும் ஜீவனாகவும் காட்டிக் கொள்கிறது.

பிரம்மமும் பிரமத்தினுடைய சக்தியும் வேறுவேறல்ல. எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் எப்படி எப்படி எல்லாமோ பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருந்து எல்லாவித சக்திகளாகவும் இயங்கி வருகின்றது. ஆதிசங்கரர் புகட்டிய இந்த அத்வைத வேதாந்தமே இன்றைய சமுதாயத்திற்கு ஏற்புடையதாகவுள்ளது. பகுத்தறிவுவாதிகளையும் கவர்ந்திழுப்பது அத்வைதமே. 

மனிதனுடைய நிஜ சொரூபம் ஆத்மன். சரீரத்தின் மூலம் ஆத்மாவானது தன்னை வெளிப்படுத்திக்கொண்டு உபாதிகளால் கட்டுண்டு கிடக்கையில் ஜீவாத்மா எனப்படுகிறது. ஆத்மன் பரமாத்மனில் இருந்து வேறுபட்டதல்ல. சமுத்திரத்தின் அலைகள் எவ்வாறு சமுத்திரத்திலிருந்து வேறுபடாதவையோ அதேபோன்று ஆத்மாவும் பரமாத்மாவின் அம்சமே, அலைகளுக்கு தனித்துவம் இல்லாததுபோல ஆத்மனுக்குப் பரமாத்மனை விட்டு நீங்கிய தனித்துவமில்லை. ஆத்மனுக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. அதற்கு உருவமுமில்லை, தோற்றமுமில்லை. கால, இட, காரண, காரியங்களுக்கு அது அப்பாற்பட்டது. ஆனால் ஜீவாத்மா கால, இட, காரண, காரிய இயல்புகளுக்குக் கட்டுண்டு கிடப்பது. அது மாயை (பிரகிருதி) என்னும் அடிமைத் தளையில் சிக்குண்டு இருப்பது. உடல் உள்ளம் ஆகிய உபாதிகளால் மறைக்கப்பட்டிருக்கிறது.

தனது செயல்களுக்கெல்லாம் தானே கர்த்தாவென்ற தன் முனைப்பு இருக்கும் வரையில் உலக ஆசைகளில் உழலும் வரையில், பிரகிருதியிலிருந்து விடுதலை பெறவும் கர்மாவை அறவே இல்லாதொழிக்கவும் ஜீவாத்மாவினால் இயலாது. ஆசைகளைக் கடந்த நிலை பரிபூரண நிலை எனப்படுகிறது. ஆசையை முற்றும் கடந்த நிலையில் ஜீவாத்மா தனது (ஆத்மாவின்) சுயநிலையாகிய சத் – சித் – ஆனந்தம் என்ற முக்தி நிலையை எய்திவிடுகிறது.




Leave a Reply