MOU202475

ஆவிகளின் கோட்டை

லண்டனில் ‘லண்டன் டவர்’ வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாகக் கூறுகின்றன.இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில் ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதாக கடந்த 700 ஆண்டுகளாக பல நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. அரண்மனை போன்ற இந்தக் கோட்டைக்குள் ஏராளமான பெரிய பெரிய அறைகள் உள்ளன.

நீதிமன்றம், தண்டனை வழங்கும் கொலைக் களம், அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று பல பிரிவுகள் உள்ளன. இந்தக் கோட்டையை ஆரம்பத்தில் பழுது பார்ப்பதற்காகச் சிதிலான இடங்களை இடித்தார்கள். அங்கே புதிய சுவர்களைக் கட்டினார்கள்.

அப்போது, ஒரு பூதாகரமான பாதிரியார் உருவம் ஓடி வந்து அந்தச் சுவரை இடித்தது. அந்தப் பாதிரியாரின் மிருக பலத்தால் சுவர் பொலபொலவென்று இடிந்து விழுந்தது. கோட்டையின் சுவர் கட்டும் பணியில் அங்கே இருந்த ஒரு சூப்பர்வைசர் அந்தப் பாதிரியாரை உற்றுப் பார்த்தார். எங்கோ சரித்திர புத்தகங்களில் அந்தப் பாதிரியாரைப் பார்த்த ஞாபகம் சூப்பர்வைசருக்கு வந்தது. பிறகு, துப்புத் துலக்கியபோது, 200 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோட்டையில் வாழ்ந்த செயின்ட் தாமஸ் பெக்கட் தான் அவர் என்பது புலனாயிற்று.

அவர் ‘Constable of the Power’ என்ற பதவியில் இருந்ததாகவும், பிறகு எதிரிகளால் கொலை செய்யப்பட்டதாகவும், வரலாற்றுச் செய்திகளிலிருந்து தெரியவந்தது.

அடுத்து, அந்தக் கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சி வழக்கு மன்றத்துக்கே வந்தது. அந்தக் கோட்டைக்கு இரவுக் காவலாக ஒரு ராணுவ வீரனை அரசாங்கம் நியமித்திருந்தது. அவன் அதிகாலையில் தூங்கிக் கொண்டு தன் கடமையைச் சரிவரச் செய்யாமல் இருந்ததாக மேலதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டான். நீதிபதி அவனைப் பார்த்து, ‘இரவு காவலாளியான நீ தூங்கியது உண்மையா?’ என்று கேட்டார்.

அதற்க்கு அவன், ‘நான் தூங்கவில்லை, சுய நினைவு இழந்து கிடந்தேன்’ என்றான்.

‘எப்படி நீ சுய நினைவு இழந்தாய்?’

‘நான் அன்று அதிகாலை 4 மணிக்கு கோட்டையில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தேன். மதில் சுவருக்குப் பக்கத்தில் ஒரு பெண் உருவம், ராஜா காலத்து உடையுடன் நடந்து வந்தது. என்னைக் கோபத்துடன் பார்த்து, ‘யார் கழுத்தை வெட்டுவதற்காக இன்னும் இங்கே துப்பாக்கியோடு நிற்கிறாய்?’ என்று கேட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘யார் நீ… யார் நீ?’ என்று கத்தினேன்.

‘என்னை உனக்கு அடையாளம் தெரியாதா? மன்னனின் மனைவியான ஆன் போலினையே உனக்கு அடையாளம் தெரியாமல் நீ எப்படி ராணுவத்தில் இருக்கிறாய்? என் தலையை கில்லெட்டில் வைத்து வெட்ட வந்த துரோகி நீதான்’ என்று மூர்க்கமாக என்னைத் தாக்க வந்தாள். நான் குழப்பத்தோடு நின்றேன். ஆனால், அவள் என்னை அடித்து வீழ்த்திவிடும் அளவு ஆக்ரோஷமாக என்னை நோக்கி ஓடிவந்தாள். நான் பாதுகாப்புக்காக, என் துப்பாக்கியை எடுத்து நீட்டினேன். அதன் முனையில் நீட்டிக் கொண்டிருக்கும் கத்தி என்னை நோக்கி ஓடிவந்த அவள் உடலில் குத்தியது. ஆனால் அவளுக்குக் காயம் ஏற்படவில்லை. அடுத்த கணம், அந்த இடத்தில் ஒரு தீப்பொறி கிளம்பியது. உடனே நான் சுயநினைவு இழந்துவிட்டேன்’ என்று காவலாளி கூறினான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி காவலாளியிடம், ‘அந்தப் பெண் தன் பெயரை என்னவென்று சொன்னாள்?’ என்றார். ‘ஆன் போலின் என்று தன் பெயரைக் கூறினாள்’ என்றான் காவலாளி. நீதிபதி அந்தப் பெயரைக் குறித்துக் கொண்டார். அந்தக் கோட்டையின் பழைய செய்திகளை எடுத்து நீதிபதி ஆராய்ந்தார். பல குறிப்புகள் கிடைத்தன.

‘ஆன் போலின்’ எட்டாம் ஹென்றியின் ஆறாவது மனைவியாக இருந்ததாகவும், அவள் கோட்டையின் முதல் மாடியில் வசித்து வந்ததாகவும், அவள் மேல் சந்தேகப்பட்ட ஹென்றி அவளைத் தீர விசாரிக்காமல் ஒரு சிப்பாயை அனுப்பி தலையை வெட்டச் சொன்னதாகவும், அவள் துடி துடித்து அந்த கோட்டையில் இறந்ததாகவும் செய்திகள் கிடைத்தன.

நீதிபதியே அபூர்வமாக தேடித் பிடித்த செய்திகள் காவலாளிக்கு நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. எனவே காவலாளி எட்டாம் ஹென்றியின் மனைவியின் பெயரைத் தெரிந்து வைத்துக்கொண்டு பொய் சொல்ல வாய்ப்பே கிடையாது. அந்தப் பெண் ஆவியாக வந்து, காவலாளி சுய நினைவு இழக்க வாய்ப்பு இருக்கிறது என்று காவலாளியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தச் செய்திகளைப் பார்த்தவர்கள் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். காவலாளி நீதிபதியிடமே தப்பிக்கச் சாதுர்யமாகப் பொய் சொல்லிவிட்டான் என்று பேசினார்கள். ஆனால் அதை அடுத்து நடந்த நிகழ்ச்சிகளால் இந்தக் கோட்டை உலகப் பிரசித்தி பெற்றது.

இரவு நேரங்களில் கோட்டையின் மத்திய பகுதியில் அடிக்கடி சில சத்தங்கள் கேட்டன. சில ஆவி ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியில் மறைவாக நின்று என்ன நடக்கிறது என்று கவனித்தார்கள்.

ஒரு பெண் மரண ஓலத்துடன் அந்த இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆராய்ந்ததில் கோட்டையில் மத்திய பகுதியான அந்த இடம், தண்டனை வழங்கும் கொலைக் களமாக இருந்தது தெரியவந்தது. அதுமுதல் அந்தக் கோட்டைக்கு ஆவிகள் கோட்டை என்றே பெயர் வந்தது. இந்த விசித்திரமான சரித்திரக் கோட்டையைக் காண உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஹெலன் என்ற பெண் 1970 ஆம் ஆண்டு பகல் நேரத்திலேயே ஓர் ஆவியைப் பார்த்ததாகச் சொன்னாள்.

கோட்டையைச் சுற்றிப் பார்க்கும்போது ஒரு ஜன்னலருகே ஹெலன் திடிரென்று ஸ்தம்பித்து நின்றாள். கருப்பு நிற பட்டு உடையில் நீளமான தங்கச் சங்கிலியை அந்த உருவம் அணிந்திருந்தது. ஹெலனுக்கு முதலில் அது ஆவி என்பது தெரியவில்லை. யாரோ ஒரு பெண் இங்கே தனியாக நிற்கிறாளோ என்று அருகில் போனாள்.

அப்போது ஹெலனுக்கு மூச்சு அடைத்தது. சிறிது நேரத்தில் அந்த உருவம் மாயமாக மறைந்துவிட்டது. அதற்குப் பிறகே அது யாருடைய ஆவி என்பதும் அதன் உருவத் தோற்றத்தை ஹெலன் வர்ணித்ததில் இருந்து தெரியவந்தது. ‘சீமாட்டி ஜென் கிரே’ என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவளின் ஆவிதான் அது என்பதும், அவள் அந்த கோட்டையில் ஒரு காலத்தில் மிகச் செல்வாக்குடன் வாழ்ந்த விபரங்களும் தெரியவந்தன. இந்தச் செய்தி லண்டன் நியூஸ் பேப்பர்களில் பரபரப்பாக வெளியானது.

அந்தக் கோட்டையில் மனித உருவங்கள் மட்டுமல்ல. கரடி போன்ற ஆவி உருவங்களையும் சந்தித்ததாகப் பல செய்திகள் வந்துள்ளன.

ஆவிகள் எதோ ஒரு காரணத்தால் அந்தக் கோட்டையில் கூட்டமாக வாழ்ந்ததாகவும், இப்படி உலகத்திலேயே வேறு ஏங்கும் அதிகமான ஆவிகள் ஒரே இடத்தில் இருப்பதாகத் தகவல்கள் இல்லை என்றும் ஆவி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக எட்டாம் ஹென்றி என்ற மன்னன் பலரை அநியாயமாக அந்தக் கோட்டையில் கொன்றதாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் அந்தக் கோட்டையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கு இரவு நேரம் காவல் காக்க காவலாளிகள் பயப்பட்டதால், நூற்றுக்கணக்கான பேர் கூட்டமாக நின்று காவல்காக்க ஏற்பாடு செய்தார்கள். இதற்க்கு முக்கிய காரணம், அந்தக் கோட்டையில் ‘நான் ஆவியைப் பார்த்தேன்’, ‘நீ ஆவியைப் பார்த்தாய்’ என்று தனிப்பட்ட முறையில் சிலர் சுய விளம்பரத்துக்காகப் பொய் சொல்லி வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்ற கருத்தும் நிலவியதைத் தவிர்க்கவே இரவு காவலாளிகளை கூட்டமாக நியமித்தனர்.

ஓர் இரவு நேரம் அந்தக் கோட்டையைத் தன் நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க வந்த டேவிட் என்பவர் கோட்டைச் சுவரின் உயரமான மதில் பகுதியில் ‘ப்யூகாம் டவர்’ என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ‘டேவிட்!’ என்று அவரது பெயரைச் சொல்லி யாரோ அழைத்தார்கள். டேவிட் திரும்பிப் பார்த்தான். கோட்டைச் சுவரில் உயர்வான அந்த இடத்தில் காற்றில் மிதந்தபடி ஒரு தலை மட்டும் டேவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. முகம் வீங்கி வெளிறியிருந்தது. உதடுகளில் ரத்தம் சொட்டியது. கண்கள் திறந்திருந்தன. டேவிட்டுக்கு அந்தத் தலை யாருடையது என்பது ஒரே நொடியில் புரிந்து விட்டது. அந்தக் கோட்டையை ஆண்ட எட்டாம் ஹென்றி என்ற பிரசித்தி பெற்ற மன்னனது தலை தான்.

ஏராளமான பேரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த அந்த எட்டாம் ஹென்றியின் தலையைக் கோரமான வடிவத்தில் பார்த்ததும் டேவிட் அலறிவிட்டான். உடனடியாகத் தனக்கு பேராபத்து நடக்கப் போகிறது என்று எண்ணி அந்த இடத்தை விட்டு ஓடினான். கொஞ்ச நேரத்தில் கூட்டமாக காவலாளிகள் ஓர் அறைக்குள் நின்று கொண்டிருப்பது டேவிட்டுக்கு தெரிந்தது. அவர்கள் எதோ ஒரு பாட்டை உரக்கப் பாடித் தூக்கம் வராமல் இருக்கக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆரவாரத்தில் டேவிட் பயத்தால் அலறியது அவர்கள் காதில் விழவில்லை.

டேவிட் விழுந்தடித்துக் கொண்டு ஓடி தன் நண்பர்களிடம் தான் எட்டாம் ஹென்றியின் தலையைப் பார்த்ததாகவும், அது தன் பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், மூச்சு வாங்கக் கூறி முடித்தான்.

எல்லோரும் டேவிட்டை கிண்டல் செய்தனர். எட்டாம் ஹென்றியால் கொலை செய்யப்பட்ட ஆவிகளைப் பற்றித்தான் புரளியாகப் பலர் கதை கட்டி விட்டார்கள். இப்போது நீ எட்டாம் ஹென்றியையே பார்த்ததாக மிரட்டுகிறாயா என்று கேலியாகச் சிரித்தனர். ஆனால் அடுத்த நொடி அவர்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் திக்கித் திணறி நின்றுவிட்டன.

எல்லோரது முகத்திலும் அதிர்ச்சியும் பயமும் பரவியது. காரணம் இப்போது டேவிட்டின் நண்பர்கள் அனைவரும் டேவிட்டுக்குப் பின்னால் எட்டாம் ஹென்றியின் தலை காற்றில் மிதந்து வருவதைக் கண்டனர். டேவிட் வர்ணித்தது போலவே, தலை கண்ணைச் சிமிட்டாமல் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தது. எல்லோரும் அலறினார்கள். அப்போது அந்த அறையில் பிரகாசமாக எரிந்த விளக்குகள் அணைந்தன. சிலர் மூர்ச்சித்து விழுந்தனர். சில வினாடிகளில் தானாக மீண்டும் விளக்குகள் பிரகாசித்தன. இப்போது அந்தத் தலையைக் காணவில்லை.

இந்த நிகழ்ச்சியால் அதுவரை லண்டன் அரசாங்கம் கோட்டையில் ஆவிகள் இருப்பதாகச் சிலர் சொல்வது வெறும் வதந்திதான் என்று செய்த பிரசாரம் கேள்விக்குறியானது. ஏனென்றால் டேவிட் மட்டுமல்லாமல் அவரோடு வந்த கூட்டமான பிற நண்பர்களும் ஒரே மாதிரி சாட்சி சொன்னார்கள். ஆவிகள் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்த நிகழ்ச்சியால் பூர்வ ஜென்மம் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது.

இன்றும் லண்டன் டவர் வளாகத்தில் உள்ள இந்தக் கோட்டை ஆவி ஆராய்ச்சியாளர்களின் பரிசோதனைக் கூடமாக, விசித்திரமான இடங்களைப் பார்க்க விருப்பப்படும் டூரிஸ்ட்களின் விமர்சிக்கத்தகுந்த இடமாகத் திகழ்கிறது.

திரு. சஞ்சீவி அவர்களின் ‘பேய்’ என்ற நூலில் இருந்து…

–  தமிழ் ப்ரியா

Comments

comments
2 thoughts on “ஆவிகளின் கோட்டை

  1. foot pain guide

    We’re a group of volunteers and starting a brand new scheme in our community.
    Your website offered us with helpful info to work on. You have
    performed a formidable process and our whole
    group will likely be grateful to you.

Leave a Reply

Your email address will not be published.