Search
iniyavathu oru vithi seyvoam

இனியாவது ஒரு விதி செய்வோம்!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி, இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஒருவரின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுகள், விலைவாசி உயர்வு, மற்றும் இன்ன பிற செலவீனங்களை சமாளிப்பது கடினம் என்றாகி விட்டதால் கணவன் மனைவி என இருவருமே வேலைக்குப் போக வேண்டிது அவசியமாகிறது. 

இப்படி வேலைக்குப் போகும் பெண்களில் இரண்டு வகையினர். ஒரு சாரார் தாங்கள் கற்ற கல்வியின் பயனை அடைய வேண்டி, தாங்களே விரும்பி வேலைக்குச் செல்பவர்கள், மற்றவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்பந்தங்களுக்குப் பணிந்து வேலைக்குச் செல்கிறவர்கள். எது எப்படி இருந்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் கடினமானவையே.

என்ன தான் கிடுகிடுவென்று காலம் மாறி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் கூட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் நிறமும் தரமும் மாறியிருக்கிறதே ஒழிய அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பலரும் வாய் மூடி மௌனியாக மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

துணிக்கடைகள், நகைக்கடைகள், பஜார்கள் என்று பல்வேறு இடங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் படிப்பை தொடர வசதிவாய்ப்பில்லாமல் குடும்பப் பாரத்தை சுமக்க வேண்டி வேலைக்கு வந்தவர்கள்தான். மெலிந்த தேகத்துடன் கண்களில் ஒரு வித ஏக்கம், கவலை தோய்ந்த இந்த முகங்களுக்குப் பின்னால் இருக்கும் நெருக்கடி, நிர்பந்தங்களை நம்மில் பலரும் கவனிப்பதில்லை. அதற்கான நேரமும் நமக்கு இருப்பதில்லை.

இந்தப் பெண்களின் குடும்பச்சூழல் தெரிந்த கடைக்காரர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. இது ஒரு பக்கம்தான், கடைக்கு வாடிக்கையாளர்களாய் வரும் பல பெண்களே, இவர்களை ஏதோ தங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல எகத்தாளம் பேசுவது கொடுமை. அதிலும் துணிக்கடைகளில் இத்தகைய ஈவிரக்கம் இல்லாத காட்சிகளை நாம் சர்வசாதாரணமாய்ப் பார்க்கலாம்.

படிக்க வாய்ப்பில்லாத பெண்களின் நிலமைதான் இப்படி என்றால், ஓரளவு படித்து டிகிரி வாங்கி வேலைக்குப் போனவர்களின் நிலைமையாவது நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், எல்லோருக்கும் அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை. வெகு சில பெண்களுக்கு மட்டும் தான் நல்ல வேலைச்சூழல் அமைகிறது. 

அதாவது தகுதிக்கு ஏற்ற அங்கீகாரம், சம்பளம், தங்களில் ஒருவராய் நடத்திடும் அக்கறை, மனித நேயமுள்ள நல்ல நட்புகள் எல்லாம் அமைகிறது. வேலைக்கான நேர்முகத்தேர்வின் போதே இம்சைகள் ஆரம்பித்துவிடும். இன்றும் பெண்கள் என்றால் கல்யாணம் ஆயிடுச்சா, எப்ப கல்யாணம்? அப்போ அடிக்கடி லீவு எடுப்பீங்க, குழந்தை இருக்கா, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு, அதனால் வேலை கிடைக்காமல் போனவர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

பெரும்பாலான இடங்களில், பெண் என்பதாலும், அதிகம் எதிர் பேச்சு பேசாதவர் என்பதாலும், முடிந்தவரை தங்கள் வேலைச் சுமையை பெண்கள் தலையில் ஏற்றி விட்டு, நிம்மதியாக அரட்டை அடித்துக் கொண்டும் ஊர் வம்பை பேசிக் கொண்டும் திரியும் ஆண்களை நாம் சர்வ சாதாரணமாய் பார்க்கலாம்.

மேலதிகாரிகளின் அதிகாரப் போக்கு, அத்துமீறல், கூட வேலை செய்யும் ஆண்களின் வக்கிரப் பேச்சுக்களையும், பார்வையையும், எதிர்க்க முடியாமல்நித்தம்நித்தம் மௌனமாய்ப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய சம்பளப் பணத்தை நம்பி அங்கு ஒரு குடும்பமே வாழ வேண்டியிருக்கும். 

இன்றைய கால கட்டத்தில் இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் பல பெண்களுக்கு. அம்மாக்களுக்கும் தூக்கமும் தொலைந்து போய் விட்டது. காந்தி கண்ட கனவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நனவாகியதா என்ன? 
அரிதாய் சில வில்லங்கமான பெண்கள் இருக்கலாம். தவறுகள் நிகழலாம். ஆனால் அதையே எல்லோருக்கும் பொதுவானது என நினைத்துக் கொள்ளும் ஆண்கள் வேலை இடங்களில் தயவு தாட்சண்யமில்லாமல் சக பெண் ஊழியர்கள் மீது நிகழ்த்தும் பாலியல் தொந்தரவுகள், மெத்த படித்த கூட்டத்தின் வக்கிரப் பார்வைகள், கிண்டல், கேலிப்பேச்சுக்கள் என்று நித்தம் நித்தம் விடியலைத் தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம்.

சரி, நல்ல படிப்பு படித்தால் உயர் பதவிகளுக்குப் போகலாம் என்று கனவுடன் படிக்கப் போகும் பெண்கள் மீது நிகழ்த்தப் படும் அசிங்கங்களை வெளியே சொல்லவே நா கூசும். எல்லோருக்கும் இப்படி நடக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலனவர்கள் இத்தகைய அவலங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது.

அதிலும் M.Phil , Ph.D போன்ற படிப்புகளுக்குச் செல்லும் பெண்களுக்கு அமையும் வழிகாட்டி நல்லவராய், பண்பாளராய் அமைந்திட அந்தப் பெண்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிலருடைய மோசமான நடவடிக்கைகளைத் தெரிந்த சூட்டிகைப் பெண்கள்த ப்பித்தார்கள். இல்லையென்றால், படித்த மனிதர்கள் என்ற போர்வையில் நடமாடி வரும் இந்த மிருகங்களிடம் மாட்டிக் கொண்டுவெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களின் கதைகளைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும். 

திருமணமான பெண்கள் வெளியில் சென்று வேலை செய்வது மட்டுமல்லாமல், வீட்டிற்கு வந்தால் மலை போல் குவிந்திருக்கும் வீட்டு வேலைகளையும் செய்தே ஆக வேண்டும்! கொஞ்சம் ஆறுதலான விஷயம், இப்போது பல வீடுகளில் ஆண்களும் பெண்களின் வேலைச் சுமைகளை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இந்தக் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

புகுந்த வீட்டில் பெண்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த உறவுகள் அமைந்து விட்டால் பிரச்சினை இல்லை. தன் மகன் மனைவிக்கு ஒத்தாசை செய்வதை ஏதோ கொலைக் குற்றம் போல ஊதிப் பெருக்கி பிரச்சினையாக்கும் மாமியார்களும், நாத்தனார்களும் அமைந்து விட்டால், ஏண்டா பெண்ணாகப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் ஊமை அழுகை அழும் கோடிக் கணக்கான பெண்களை தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அலுவலகத்திலும், வீட்டிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட சமாளித்து விடலாம் போலிருக்கிறது, ஆனால் தெருவில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அளவில்லாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

காதலுக்கும், காமத்திற்கும் வித்தியாசம் தெரியாத கழிசடை கவிஞர்களின் மனவிகார சினிமாப் பாடல்களை, உருப்படாத தெருப் பொறுக்கிகள் வயது வித்தியாசம் பாராமல் பாடிப் பெண்களை ஒரு கையாலாகாத நிலைக்கு இன்றும் தள்ளிக் கொண்டு தான் இருக்கிறார்கள். யாராவது வந்து தனக்கு வக்காலத்து வாங்கி விட மாட்டார்களா என்கிற ஏக்கம் அனுபவித்தே உணரக் கூடிய வலி. 

இது மாதிரிச் சூழலில் மாட்டிக் கொள்ளும் விவரம் தெரியாத சிறு பெண் குழந்தைகள், பயத்தில் ஒன்றும் சொல்லத் தெரியாத இளம் மொட்டுக்கள், இளம் பெண்கள் என்று பல இடங்களிலும் பல தொல்லைகளுக்கும் ஆளாகிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஆசிட் வீச்சுக்கும் பலி ஆகிக் கொண்டுமிருக்கிறார்கள். பல பஸ்களில் டிக்கெட் கொடுக்கிறேன் பேர்வழி என்று கண்டக்டர் உருவில் பொறுக்கிகள். பெண்களை இடிப்பதற்கென்றே பிறந்திருக்கும் ஈன ஜென்மங்கள். வண்டிகளில் பெண்கள் போனால் தொடர்ந்து சென்று அவர்களை வம்பிழுக்கும் கூட்டம். இந்தக் கூட்டங்களுக்கு படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.

இதை எல்லாம் யாரிடம் போய் சொல்ல முடியும்? நம்பிக்கையாக காவல்துறை உங்கள் நண்பன் என்று போட்டிருக்கிறேதே என்று பெண்கள் தனியாகப் போய் கம்ப்ளைண்ட் பண்ண எத்தனை பெண்களுக்கு தைரியம் இருக்கிறது. அப்படியே போனாலும், எத்தனை பெண்களுக்கு நீதி கிடைக்கிறது? முதல் கேள்வியே அவளைத் தாழ்த்தும் விதத்தில் தான் இருக்கும். 

இப்படி, வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் கடந்து ஒவ்வொரு பெண்ணும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறாள். அதைக் கண்டு பொறாமையுடன் அவளுடைய கற்புக்கு களங்கம் பண்ணும் முதலைகளை அதகளப்படுத்திக் கொண்டு தானிருக்கிறாள்.

வேலை செய்வதால் தான், படிக்கப் போவதால் தான் பெண்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் என்று கண்மூடி விதாண்டாவாதமாக பேசாமல் அவர்களை தன்னம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொடுக்கும் பொறுப்புப் பெற்றவர்களுக்கும், அவளைச் சார்ந்த சமூகத்திற்கும் உண்டு.


பெண்களுக்கு கல்வி தந்திருக்கும் சுதந்திரம் நல்ல வழியில் அவர்களை மென்மேலும் கொண்டு செல்லும் வகையில் குடும்பங்களும், உற்றார், உறவினர்களும் உற்சாகப்படுத்த வேண்டும்.

ஒரு மகத்தான் உண்மையை நாம் இந்த இடத்தில் மறந்து விடக் கூடாது.ஒரு பெண் படித்தால் அவளும் அவள் குடும்பமும் எதிர் வரும் சந்ததி என அனைவரும் உயர்வர். ஒரு நல்ல, படித்த, உயர் சிந்தனை நோக்கங்களை கொண்ட சமுதாயம் உருவாகப் பெண்களை மதிப்போம்.

இனி வரும் காலங்களிலாவது நம் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கவும், பண்புடன் நடத்தவும் கற்றுக் கொடுப்போம்.

– லதாLeave a Reply