Search
virakthi

இப்படிக்கு விரக்தி

இந்த உலகத்தில் யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. ஆனால் காதலின் மிகுதி காரணமாக நான் அனைவரையும் தழுவிக் கொள்கிறேன். இப்படி தான் திருவிழாவில் குச்சி ‘ஐஸ்’ வேண்டும் என அடம்பிடித்த ஏழு வயது தம்பியின் தலையை தட்டி அழைத்து சென்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் சிலம்பரசன். அந்த ஏழு வயது சிறுவன் தான் எத்தனை அழகு!! உடனே அவனது வதனத்தில் போய் குடியேறி விட்டேன். தம்பியின் மீது அதிக அக்கறை சிலம்பரசனுக்கு இல்லை எனினும் எனக்கு சிலம்பரசன் மீது நிறையவே இருந்தது. அவன் வாங்கி தந்த கண்ணாடி வளையல்களை அவனது ஆள் ரெட்டை ஜடை ஜோதிலட்சுமி ஆசையாக போட்டு பார்த்து விட்டு, ‘அப்பா வைவாரு’ என அவனிடமே கழட்டிக் கொடுத்து விட்டாள். தம்பியை அதட்டுவது போல் ஜோதியை அதட்டுவது சிரமம் என்றபடியால் சிலம்பரசனையும் ஆட்கொள்ள எனக்கு காரணம் கிடைத்தது. தம்பிக்கு  குச்சி ‘ஐஸ்’சாவது வாங்கி தந்திருக்கலாம் என்று நினைத்தான் சிலம்பரசன். காலம் கடந்து இவர்களுக்கு ஞானம் ஏற்படும் வரை என் காதல் பார்வையில் இருந்து இவர்கள் தப்புவது கடினம் தான்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திருவிழாவை வெறுத்தவாறு சிலம்புவும் அவன் தம்பியும் மெதுவாக நடந்துக் கொண்டிருந்தனர். கண்ணாடி வளையல்களை பிரயாசையோடு தூக்கி எறிந்தான் சிலம்பு. ஓடிப் போய் அதை எடுத்துக் கொண்டு வந்த அவனது தம்பி, கைகளில் போட்டுக் கொண்டு ஒன்று ஒன்றாக கழட்டி முடிந்த அளவு தூள் தூளாக உடைத்துக் கொண்டிருந்தான். இரண்டாய் உடைந்த ஒரு கண்ணாடி வளையல் மேலும் உடைய மறுத்து திமிறியது. சிலம்புவின் தம்பி முகத்தில் மேலும் படர அவ்வளையல் துண்டு உதவி செய்தது. பணம் கொடுக்காத அண்ணனின் விரல்களை உடைப்பதாக நினைத்துக் கொண்டு பல்லை கடித்துக் கொண்டு முயல, கண்ணாடி வளையல் உடைந்து தம்பியின் கையை பதம் பார்த்து விட்டது. இதுவரை தம்பியின் மேலுள்ள காதலை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காத சிலம்புவின் கண்களிலிருந்து காதல் கண்ணீராய் வெளிப்பட்டது.

ஏன்டா முண்டம்.. அறிவில்ல. இப்படியா பண்ணிப்ப?” என்று தழுதழுத்த குரலில் தம்பியை திட்ட முயன்றான்.

சிலம்புவின் தம்பிக்கு வலியை விட பயம் அதிகமாக தோன்றியது. கையில் அணிந்திருந்த வளையல்களை உதறி விட்டுக் கொண்டு வலிக்கவில்லை என்பது போல் சிரிக்க முயன்றான். நிலம் தொடும் குருதியின் அளவு சற்றி மிகுதியாகவும், வேகமாகவும் இருந்தது. சிலம்புவிற்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டு விட்டது. கைக்குட்டையால் தம்பியின் இரத்தத்தை நிறுத்த முயன்ற யோசனை சிலம்புவிற்கு தமிழ்ப் படங்களால் கிடைத்த உபயம். அந்த யோசனையின் பலன் பெரிய அளவில் இல்லை.

என்னடா ஆச்சு.. ஐயோ கடவுளே!! இரத்தம் இப்படி ஊத்துதே? என்னங்க இங்க வந்து உங்க சின்னப் பிள்ளைய கொஞ்சம் பாருங்களேன்” என்று பிள்ளை மேலிருந்த காதலில் கலங்கினாள் சிலம்புவின் தாய்.

முழுக் கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டு, கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவிக் கொண்டிருந்த சிலம்புவின் தந்தை நிதானமாக வந்தார். மனைவியின் குரல் தொனியை கேட்டதும் சிலம்புவின் தந்தையையும் நான் பிடித்துக் கொண்டேன். தன் மகனின் ரத்தத்தை சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பயப்படறதுக்கு ஒன்னுமில்லன்னு நினைக்கிறேன். எல்லாம் கிளம்பிட்டிருப்பாங்க. நான் தலைவர பார்த்துட்டு, அவர் ஆசீர்வாதத்த வாங்கிட்டு வர்றேன்” என்று ஒரு லட்ச ரூபாய் இருந்த தோள் பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டார். குடும்பத்தின் கடைசி நபரான சிலம்புவின் தாயையும் ஆட்கொள்ள அந்த உதாசீன வார்த்தைகள் எனக்குப் போதுமானதாக இருந்தது.

பணமாவது கொடுத்துட்டுப் போங்க” என்றாள் சிலம்புவின் தாய்.

அடியே.. இதுக்கு கவர்மென்ட் ஆஸ்பித்திரி வைத்தியமே போதுன்டி” என்று செருப்பு மாட்டினார்.

சிலம்புவின் தந்தை முகத்தில் இருந்த அலங்கார வெள்ளை அலங்கோலப் பூச்சு அவரது மனைவி வயிற்றினை மேலும் எரிய செய்தது. அதில் எழுந்த வெப்பத்தில் எனக்கு குளிர் காய ஏதுவாக இருந்தது. இப்படி ஒரு குடும்பம் முழுவதையும் அரவணைக்கும் பேறு கிடைப்பது எனக்கு ஒன்றும் பெரிதில்லை. இருப்பினும் சிலம்புவின் தந்தையை சரியாக பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் மட்டும் கொஞ்சமாக இருந்தது. அதனால் திருவிழாவில் பிடித்த சிலம்புவையும், அவன் தம்பியையும் விட்டு விட்டு அவர்களது தந்தையை தொடர ஆரம்பித்தேன்.

தலைவர் பிறந்த பிறகு, சூரியனை பூமி அறுபது முறை சுற்றி வந்து விட்டதாம். அதனை தனது கட்சி தொண்டர்களுடன் கொண்டாடி மகிழ்கிறார் தலைவர். 113வது வட்ட சார்பாக அன்பளிப்போடு காத்திருந்தார் சிலம்புவின் தந்தை. அவரது மூன்று வருட ஆசை தலைவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அவரது முறை வந்ததும் பணத்தை பவ்யமாக நீட்டு விட்டு இருபத்தி நான்கு பற்களைக் காட்டி சிரித்தார்.

என்ன கணமாவே இல்ல?” என்று தலைவரும் வேறு ஒருவருடன் புகைப்படத்திற்கு முகம் கொடுத்தவாறு சிரித்தார்.

அடுத்ததாக புகைப்படம் எடுக்க தலைவர் பக்கத்தில் பவ்யமாக போய் சிலம்புவின் தந்தை நின்ற சமயத்தில், “ஜெருகண்டி.. ஜெருகண்டி” என்றொரு தெலுங்கு பேசும் காவல்காரன் சிலம்புவின் தந்தையை வாசலை நோக்கி தள்ளி விட்டான்.

ஐயாவோடு ஒரு போட்டோ..” என்று தடுமாறி இழுத்தார் சிலம்புவின் தந்தை.

மேலிடத்துல என் பாதுகாப்புக்காக தம்பிய போட்டிருக்காங்க. தம்பி இவங்க எல்லாம் என் உயிரினும் மேலான உடன்பிறப்புங்க. கூட்டம் அதிகமா இருக்குன்னு போக சொல்றத மென்மையா சொன்னாலே உடன்பிறப்புங்க புரிஞ்சுப்பாங்க” என்று கணமான பெட்டி கொடுத்தவருடன் சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். யாராவது சிலும்புவின் தந்தை முகத்தைப் பார்த்திருந்தால் நான் வந்த வேலை நிறைவாக முடிந்தது என தெரிந்திருக்கும்.

தொங்கன கொடுக்கு. இவ்ளோ ‘மணி’ய என்ன பண்ணுவான்?‘ என மனக் குரல் கேட்டதும் என் வேலை முடியவில்லை போல் என சோர்வாக இருந்தது. பொதுவாக பணம் என் வேலையை சுலபமாக்கி விடும். பணத்தின் இயல்பு அது பணத்தோடு மட்டுமே சேரும். அதனால் ஏழைகளுக்கு வறுமையும், விரக்தியும்; பணக்காரர்களுக்கு பணத்தை பாதுக்காக்க முறை பற்றிய அச்சமும், விரக்தியும் பணம் ஏற்படுத்தி விடும். பணத்தின் சுயபால் விழைவு தான் கருப்புப் பண பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது. ஓரினச் சேர்க்கைகளில் பணத்திற்கு மட்டுமே விரக்தி அடையும் குணம் உள்ளது. பணம் தன் இன உணர்வை விடுத்து உழைப்பை காதலிக்க ஆரம்பிக்கும் வரை நானும், என் காதலும் வாழ்வாங்கு வாழ்வோம்.

விரக்தி.