Search
Saaru01

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

Exile– அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை

இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்ற வெறுப்பு சாருவிற்கு. சாரு நிவேதிதா இதை பலமுறை புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி விட்டார். போன ஆண்டை விட இந்த முறை காமராஜர் அரங்கில் கூடிய கூட்டம் அதிகம். ஆனா சாருவிற்கு வந்தவர்களை விட வராதவர்களைப் பற்றியே அக்கறை. இதுவே கேரளமாக இருந்தால் அவ்வளவு பேர் வந்திருப்பாங்க. இங்க சினிமாக்காரன் பின்னாடி தான் போவீங்க என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். என்னமோ இப்ப மட்டும் தான் தமிழ்நாட்டுல எழுத்தாளர்களை மதிக்காத மாதிரியும் அதுவும் சாருவை மட்டுந்தான் மதிக்காத மாதிரியும் பேசுறாரே என டின்னுக்கு வருத்தம். அந்தக் கால புலவர்கள் தொடங்கி பாரதியார், புதுமைப் பித்தன், தி.ஜா. என எழுத்தாளர்கள் வறுமையில் உழலும் போக்கு தமிழ்ச்சூழலின் சாபமாகவே உள்ளது. சாருவாகவே இந்த ஜீப்பில் ஏறீட்டு ஏன் இதையே புலம்பிக்கிட்டு இருக்கணும் என டின் என்னிடம் கேட்பான். (பைஜாமாவில் அழுது வடியாத பளபளக்கிற கோட், சூட், டை எல்லாம் போட்டிருக்கும் ஏழை எழுத்தாளன். ஐ சிம்ப்ளி லவ் சாரு – சிக்காக்கோ).

 

 

ஆட்டோ-ஃபிக்ஷன் தமிழுக்குப் புதுசாம். தமிழ்ல ‘சுய புனைவு’-ன்னு சொல்லலாமாம். சுய சரிதையை மூன்றாம் ஆள் பார்வையில் புனையறதுக்கு பேர் தான் ஆட்டோ-ஃபிக்ஷனாம். சாரு தான் ‘மீ த ஃபர்ஸ்ட்’ன்னு ஆரம்பிச்சு வைக்கிறார்னு டின் யாருகிட்டயோ சொல்லிக்கிட்டு இருந்தான். ஒரு பெண்ணைத் தன் கைகளால் தூக்கிவிட வேண்டும் என்பது தான் அந்நாவலின் பிரதான கதாபாத்திரமான உதயாவின் லட்சியம், குறிக்கோள் இன்னபிற எல்லாம். தொடக்கத்திலேயே முடிவைச் சொல்லி விடுகிறார். முப்பத்திரண்டு வயதான அஞ்சலியைத் தூக்கி விடுகிறார். பிறகு அறுபது வயதில் அவருக்கு அது எப்படிச் சாத்தியப்பட்டது என்பதை நிறுவ முயல்கிறார். இதை தான் 60 வயதிலும் 20 வயது இளைஞனாக இருப்பது எப்படின்னு விளம்பரப்படுத்தி இருப்பார் போலன்னு என்னைப் பார்த்து கண்ணடித்து சிரிச்சான் டின். சரியான ராஸ்கல்.

 

காதல் கடிதம் எழுதி விட்டு நடுவில் பொண்ணே, மணியே, பொண்மணியே சேர்ப்பது போல சாருவும் தன் முந்தைய நாவல்கள் போன்றே இந்த நாவலையும் எழுதிட்டு நடுவில் கருவூரார், அகத்தியர், ஐயன் திருமூலன் என சேர்த்துட்டார் என டின் தனது பதிவு ஒன்றில் எழுதிக் கொண்டிருந்தான். நான் டின் எழுதுவதை எட்டிப் பார்த்து விட்டு அவனிடம் புத்தகம் நல்லா இல்லையா எனக் கேட்டேன். நல்லா இருக்கா, இல்லையான்னுலாம் ஒன்னும் இல்லை. தொய்வில்லாமல் வேகமா சுவரசியமாகப் போகுது. ‘அது போதாதா?’ என என்னைத் திருப்பி கேள்வி கேட்டான். நான் எதுவும் சொல்லவில்லை. மனசை அப்படியே நிப்பாட்டிடணும். அது தான் இலக்கியம்னு முன்ன எப்பவோ சொன்னான். ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான் டின். ஆங்கிலேயர் வரவால் காணாமல் அடிக்கப்பட்ட இந்திய ஆன்மிக மரபின் சாரத்தை – தமிழ் சித்தர் மரபின் சாரத்தை நம் கைமேல் எடுத்து தருகிறது எக்சைஸ் என அதில் எழுதி  இருந்தது. அந்தத் துண்டுப் பிரசுரத்தை நவம்பர் 25ஆம் தேதி அன்று எஸ்.ரா.வின் ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ பற்றிய உரை முடிந்ததும் ரஷ்ய கலாச்சார மையத்தில் இருந்து வாங்கிட்டு வந்து வீட்டில் போட்டு வைத்திருந்தான். அதை தான் எங்கிருந்தோ தேடி எடுத்துப் படிக்க சொல்லி இருந்தான். அப்பவும் வயாக்ராவிற்கு மாற்றாக தான் இவருக்கு சித்தர் மரபு தேவைப்பட்டிருக்கு பாரேன் என்றான். கோபமாகச் சொல்றானா, கிண்டலாகச் சொல்றானா என அவன் முகத்தைப் பார்த்து யூகிக்க முடியவில்லை. (இதுக்கு டின் பேசாம.. “சித்தர் இலக்கியம்” – மீ.ப.சோமு, அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு புத்தகம் வாங்கியிருக்கலாம்! – சிக்காக்கோ).

 

இதே மாதிரியே டின் எழுதிக் கொண்டே போனால்.. தலைப்பைப் பற்றி எழுதாமல் போய் விடுவான் என ஞாபகப்படுத்தினேன். வர வர டின் உண்மைத் தமிழன் போல் எதையும் பெரிதாக எழுத ஆரம்பிச்சுட்டான். அதைப் பற்றி அவனிடம் சொன்னேன். குழந்தை மாதிரி சிரிச்சான். நாவலில் சாரு ஓர் இடத்தில் தோழி என்பவரை தனது மானசீக குரு என்று குறிப்பிட்டுள்ளார். டின்னுக்கு அதைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சி.

 

 

 

உடனே டின் தனது இலங்கை சினேகிதியான “தோழி” என்பவரிடம் இது பற்றிக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினான்.

 

தோழி

உங்களை ‘மானசீக குரு’ என சாரு தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எக்ஸைல்’ நாவல் பற்றிய என் புரிதலைப் பகிர ஒரு பதிவு போடப் போகிறேன். அப்படியே உங்கள் கருத்துகளையும் அறிந்து பதியலாம்னு யோசனை. எனக்குக் கொஞ்சம் கேள்விகள் இருக்கு. அதற்குப் பதிலளிக்க முடியுமா? பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் கேள்விகளையும் அனுப்பி வைத்துள்ளேன்.

 

*சாரு தனது நாவலில் உங்களை மானசீக குருவாகக் குறிப்பிட்டுள்ளாரே!! தெரியுமா உங்களுக்கு?

 

*சாருவை உங்களுக்கு எத்தனை நாளாகத் தெரியும்? அவருடன் chat செய்ததுண்டா!?

*இப்படி சாரு எழுதியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

*பத்து வருடமாக அவர் இந்தத் துறையில் ஆராய்ச்சி புரிகிறார். நீங்க பத்து வருடங்களுக்கு முன் பள்ளி மாணவியாக இருந்திருப்பீர் என நினைக்கிறேன். அத்தகை தேடல உள்ளவருக்கு நீங்க எப்படிக் குருவாக முடியும்? புரியல்லயே!!

 

*உங்கள் தளத்தில் இருந்து எந்திரம் எடுத்துப் போட்டுள்ளதாகச் சொல்லியுள்ளாரே!! உங்களுக்குத் தெரியப்படுத்தினாரா!?

டின்

டின்

கடந்த இரு தினங்களாக உங்களைப் போல சில நண்பர்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலமாகவே இந்த மானசீக குரு பற்றி அறிந்து கொண்டேன். தவிர அவரைப் பற்றி எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. ஒரு முறை மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் எனது முயற்சியினைப் பாராட்டியும், வாழ்த்தியும் செய்தி அனுப்பியிருந்தார். நன்றி தெரிவித்து பதில் அஞ்சல் அனுப்பினேன்.அதைத் தாண்டிய எந்த ஒரு தகவல் பகிர்வும் அவருடன் எனக்கு இல்லை.

 

அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது பற்றி முழுதும் அறியாமல் கருத்துச் சொல்வது அத்தனை நல்லதாகத் தோன்றவில்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு யந்திரம் பற்றியும் அவர் என்னிடம் கேட்கவும் இல்லை, நான் கொடுக்கவும் இல்லை. அது நமது தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை பார்த்தால் மட்டுமே கூறிட முடியும்.

 

மானசீக குரு என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை, அந்த வார்த்தைக்கு நான் எவ்விதத்திலும் தகுதி இல்லாதவள். நான் தேடலின் துவக்க நிலையில் இருக்கும் மிகச் சாதாரண சிறுமியே! இப்படியான வார்த்தைகளுக்கு நான் தகுதியற்றவள்.

தோழி

 

 

 

 

என்னத் தவம் செய்தனை தோழி..

பின் நவீனத்துவ எழுத்தாளர் சாருவிற்கு

மானசீக குரு ஆக?

என கட்டுரை இறுதியில் ஏதோ கிறுக்கி வைத்திருந்தான். இது நல்லா இல்ல போலயே.. எடுத்திடவா என என்னைக் கேட்டான். அப்படியே நான் சொல்வதை செய்வது போலவே எப்படித் தான் டின்னால் கேட்க முடிகிறதோ தெரியவில்லை.

 

தினேஷ் ராம்
Leave a Reply