Search
Kamal

“என் மூலதனம்” – கமல்

Taramani single video song

தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

“நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த ஒரு நடிகைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு லகர, ளகர உச்சரிப்பு சரியா வராது. ஆனா ஆண்ட்ரியா அச்சரம் பிசகாம உச்சரிக்கிறாங்க. முதல்முறையாக ஒரு ஆர்டிஸ்டுடன் வேலை செய்த திருப்தி கிடைத்தது.

Taramani Andreaஷூட்டிங்கின் பொழுது மொபைலில் ஏதோ கேட்டுட்டே இருப்பாங்க. என்னன்னு கேட்டப்ப.. அது அவங்களே எழுதி இசையமைத்த ஆங்கிலப் பாடல்னு தெரிந்தது. எங்க படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிப்பதாக இருந்தது பாடல் வரிகளும் இசையும். பாடலை ஷூட் செய்யலாமா எனக் கேட்டேன். சரின்னாங்க. கம்மியான ஒளியில், தேனி ஈஸ்வர் அஞ்சாறு மணி நேரத்தில் அற்புதமாகப் பாடலை ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்பாடலை வெளியிட அனுமதித்த யுவனுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

என்ன நா.முத்துக்குமார் தான் பாடலில் என் வரிகள் இல்லையே என வருத்தப்பட்டார். ஆங்கிலத்தில் இருப்பதால் இப்பாடலைப் படத்தில் வெளியிட முடியாம போயிடுச்சு” என்றார் இயக்குநர் ராம்.

“எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். ஆனா பேசுறதில்தான் சொதப்பிடுவேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. என் லேப்டாப்பில் இது போல் நிறைய பாடல்கள் இருக்கு. நானும் என் ஃப்ரெண்ட்சும் கேட்டிருக்கோம். முதல்முறையாக வேறொருவர் கேட்டு அங்கீகரித்தது இதான் முதல்தடவை. தேங்க்ஸ் ராம் சார். நிஜமான தேங்கஸ் இது. யுவனுக்கும் ரொம்ப தேங்க்ஸ். ஒரு மெஸ்சேஜ்தான் அனுப்பினேன். அதை மதித்து வந்த கமல் சாருக்கும் தேங்க்ஸ்” என்றார் ஆண்ட்ரியா.

“என் படத்தில் கண்டிப்பாக குழந்தைகள் இருப்பார்கள். ஏன்னா குழந்தைகளின் உலகத்தோட நான் நெருங்கியிருக்கிறவன். இந்தப் படத்திலும் ஒரு பொடியன் இருக்கான். ஏன் பொடியன் எனச் சொல்றேன் என்றால்.. இலங்கை பையனிவன். இப்போ கனடாவில் வசிக்கிறான். பெயர் ஏட்ரியன்” என்றார் இயக்குநர் ராம்.

Adrian Taramaniமேடைக்கு வந்த ஏட்ரியன், “என் வயசென்னத் தெரியுமா? ஒன் நாட் ஃபைவ். நூத்தஞ்சு” எனச் சொல்லிவிட்டு, சொல்ல வந்ததை மறந்து விட்டான் பொடியன். அது படத்தில் வரும் வசனம் போல! படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என இயக்குநர் ராம் சொன்னதை அப்படியே சொன்னவனைத் தூக்கி தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார் கமல். ஏதோ கேட்ட கமலை, பொடியன் முறைத்துப் பார்க்க அரங்கில் அனைவருமே சிரித்து விட்டனர்.

“அனைவரும் இவரை அப்பான்னு கூப்பிடுவாங்க. எனக்கொரு நல்ல அப்பா இருப்பதால், நான் அண்ணன்தான் இவரைக் கூப்பிடுவேன்” என பாரதிராஜாவைப் பேச அழைத்தார் இயக்குநர் ராம்.

“நமக்குக் கிடைச்சிருக்கும் பொக்கிஷம் கமல். அவருக்கு பனுமுகத் திறமை இருந்தாலும், அவரை நண்பர்னு சொல்றதுதான் எனக்கு நெருக்கமாக இருக்கு. நாங்க இரண்டு பேரும் 35.. இல்ல 40 வருஷமா நண்பர்கள். சினிமாவின் எல்லாத் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எழுதுவார். நிறைய படிப்பார். நம்மைத் தாண்டிச் சிந்திக்கக் கூடியவர். சிலசமயம் அவர் பேசுறது புரியாது. அதே மாதிரி தான் ராம் பேசுறதும் சிலசமயம் புரியாது. அஞ்சாறு வருஷத்துக்கு முன் அவன் என்னிடம் கதை சொல்றப்ப, அந்த narration உலக சினிமாக்கு நிகரா இருந்தது. ‘தங்க மீன்கள்’ இயக்குநர் ராமின் potentialஇல் கொஞ்சம்தான். One fine morning உலக இயக்குநர்களில் ஒருவனாகப் புகழப்படுவான். கேமிரா மேன், தேனி ஈஸ்வர். எங்க ஊர்க்காரன். என்ன அருமையா இருக்கு இந்த வீடியோ அந்த பிளாக் அண்ட் வொயிட் எஃப்க்ட்ல! இவன் எங்க ஊர்ல ரொம்ப ஃபேமஸான ஆளு. என் ஃபேமிலி ஃபோட்டோஸ்லாம் 10 வருஷமா இவன்தான் எடுக்கிறான். ஒரு புல்லைப் பூவாகக் காட்டுவான்; பூவைப் புல்லாகக் காட்டுவான். இயக்குநர் ராம் இவனைக் கண்டெடுத்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ராம் ஒரு கிளாஸ். ஈஸ்வரும் அப்போ கிளாஸ்தான்.

ஆண்ட்ரியாக்கு தமிழ் தெரியும்னே இன்னைக்குதான் தெரியும். ராம் சொல்றப்ப, அக்மாரக் தமிழ்ப் பொண்ணுன்னு சந்தேகத்தைத் தீர்த்து வச்சுட்டான். அற்புதமான வாய்ஸ். தமிழ் ஹீரோயின் என்பது எங்கோ ஒன்றிரண்டு அபூர்வமாகத்தான் தோன்றுறாங்க. என்ன காரணம்னு தெரில! ஒருவேளை நம்ம புள்ளைங்க நடிக்க வரமாட்டாங்கறாங்களா அல்லது நம்ம ரசனையே அப்படியான்னு தெரில!

என்னால் ‘என் இனிய தமிழ் மக்களே’ தாண்டி, ‘என் உலக மக்களே’ என வரமுடியாது. இப்ப இண்டஸ்ட்ரி ரொம்ப broad ஆயிடுச்சு. தமிழ்ப் படத்துல ஆங்கிலப் பாடல் தாராளமாக வைக்கலாம். ஆனா அப்பவே ‘நாடோடி’ படத்துல “ஆல் தி டைம்”னு இங்கிலீஷ் பாடல் வச்சேன். இப்ப ஏன் வைக்கக் கூடாது? அதற்கான சீன் உன்னால் க்ரியேட் பண்ணி பாடலைச் சொருகிட முடியும்.

என்னப் பெயர்? (யேட்ரியன்) வாயிலயே நுழையலை. ‘களத்தூர் கண்ணம்மா’வில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கமல் பாடுறப்ப.. அந்தக் கண்ணில் உயிர் இருந்துச்சு. ஆனா இந்தப் பையன் பார்வையில் ஒரு டெரரிசம் இருக்கு. என்ன ஊர் சொன்ன? (பின்னாடி இயக்குநர் ராமிடம் திரும்பி). அதான்.. கமலை எப்படி முறைச்சான் பார்த்தீங்க இல்ல!

Vasanth Ravi taramani நான் அறிமுகப்படுத்துறேன் என வசந்த்கிட்ட சொல்லி ஏத்தி வச்சிருந்தேன். ரொம்ப நல்ல பையன். செம மெட்டாலிக் வாய்ஸ். இவன் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர். என் ஃப்ரெண்டோட பையந்தான். உள்ளுக்குள்ள கனன்றுகிட்டு இருந்திருக்கான். என்ன பெருசா நடிச்சிடப் போறான்னு ஒருநாள் நடிக்கச் சொன்னேன். அதுவரை பார்த்த வசந்த் வேற. நடிக்க ஆரம்பிச்சதும் பார்த்த வசந்த் வேற! நல்ல எதிர்காலம் இருக்கு” என்றார் பாரதிராஜா.

“சினிமாவிற்காக அனைத்தையும் அடமானம் வைக்கும் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் அவர்கள்தான் எங்களை இயக்கிக் கொண்டு இருக்கார்” என கமலைப் பேச அழைத்தார் ராம்.

“40 வருஷமா நாம ரெண்டு பேரும் நண்பர்களென மேடையில் இங்கிதமில்லாம சொல்லணுமா? நீங்க பரவாயில்லை இயக்குநர். நான் இன்னும் ஆண்ட்ரியா கூட பாட்டு பாடி ஆடிட்டுதானா இருக்கேன். சரி விடுங்க. நட்புக்காக மன்னிச்சுடலாம்.

நான் அடமானம் வச்சுட்டேன் என சொன்னார். அதெல்லாம் ஒண்ணுமில்லை. வர்றப்ப என்ன கொண்டுட்டு வந்தேன்? எந்த பின்புலமும் இல்லை. நான் தான் என்னுடைய மூலதனம். எனக்கான சம்பளம் எப்பவோ கிடைச்சுடுச்சு. இப்ப கிடைப்பது எல்லாம் போனஸ்தான். இந்த கைதட்டல் உட்பட! போனஸில் இருந்து படம்பண்ணுவதெல்லாம் ஒரு விஷயமா?

யாருமே அவங்க பாட்டைக் கேட்கலைன்னு ஆண்ட்ரியா பொய் சொல்லிட்டாங்க. விஸ்வரூபம் ஷூட்டிங்கின் பொழுது நான் கேட்டிருக்கேன். அப்ப விட இப்ப இன்னும் நல்லா தமிழ் பேசுறாங்க. நாங்க சொல்லிக் கொடுத்தோம்னு சொல்லலை. அவங்க கத்துக்கிட்டாங்க. அதுதான் உண்மை.

என்னப்பா டையலாக் மறந்துட்டியா.. மூணாவது டேக் போலாமான்னு அந்தப் பையனைக் கேட்டேன். அதுக்குதான் அவன் முறைச்சான். என்ன இப்படி பொதுவில் அசிங்கப்படுத்துறீங்க என அதுக்குப் பொருள். அது கலைஞர்கள் பாஷை. எங்களுக்குத்தான் புரியும்.

இந்தியாவில் இருந்து களவாடப்பட்டு அமெரிக்காவில் வைக்கப்பட்ட சென்னை தான் ‘தரமணி’ படத்தின் கதை என்றார் ராம். எல்லா ஊருமே அப்படிதான் ஒருவகையில் களவாடப்பட்டிருக்கு. ஆங்கிலப் பாடல் படத்தில் ஏன் வைக்கக் கூடாது?

நீங்க பேசும் பொழுது பிரமோஷன், கேமிரா, கேமிரா மேன் என ஆங்கில சொல்தான் உபயோகிக்கிறாங்க. தமிழ் மொழியின் பலமே அதுதான். தன் மீது அனைத்தையும் போட்டுக் கொண்டு, நிறம் மாறாமல் தரம் மாறாமல் இருக்கக் கூடிய மொழி ‘தமிழ்’. ஆங்கிலமும் அப்படிதான். லத்தீன் உட்பட அனைத்து மொழியையும் தனக்குள்ள வாங்கிகிட்டு வளரும். ஜாக்கிரதையாக இருன்னு சொல்றோம். ஜாக்கிரதை தமிழ் வார்த்தைன்னு நினைச்சுட்டிருக்கோம். இப்ப பஸ், கிஸ்ன்னு பேசினாலாம் கிராமத்தில் இருக்கிறவங்களுக்குப் புரியும். 

‘அந்தப் பொண்ண கிஸ் அடிச்சுட்டானாம்யா அவன்!’ என பரமக்குடி பக்கம் சொல்வாங்க. எல்லா கிஸ்சும் கிஸ்சில் வராது. கெட்ட கிஸ் மட்டுந்தான் கிஸ்ல வரும்.  உடனே என் மேல அதுக்கு பழி சுமத்தாதீங்க!

Taramani Single Track Audio Release

வந்ததும் நா.முத்துக்குமாரின் வார்த்தைகளைப் பார்த்தேன். அதுல காதல் இருந்தது. எனக்கும் பாரதிராஜாவுக்கும் நடுவுல அது இருந்தது. அந்தக் காதல் தான், நாயகன் வசந்த் மேலயும் பாரதிராஜாக்கு இருக்கு. என் மேல அப்போ பாலசந்தருக்கு இருந்தது. பாரதிராஜா ஒருவரை திறமைசாலின்னு கை காட்டினாருன்னா நானும் அதை நம்புறேன். இந்த வீடியோவும் அதை உறுதி செய்கிறது. இது போன்ற எண்ணற்ற திறமைசாலிகள் இங்கிருக்காங்க. அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே என்பதுதான் என் பயம்.

இங்ககூட பிரசாத் லேப்பில், இந்தப் பையன் (ஏட்ரியன்) போல சுருட்டை முடியோடு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் ஒரு கதை சொன்னார். அப்போ நான் தொடர்ந்து ஷூட்டிங்கில் நடித்துவிட்டு, வாந்தி எடுத்துட்டுப் படுத்திருந்தேன். என் வயிற்றைத் தடவிக் கொண்டே மயிலுன்னு ஒரு கதையை சொன்னார். மயிலுதான் ‘பதினாறு வயதினிலே’ன்னு படமாக வந்தது. மயிலு கதை மனதில் அப்படியே பதிஞ்சுடுச்சு. அப்போ இவரிடம் நாலைந்து கதைகள் இருந்தது. மீண்டும் கொஞ்சநாள் கழித்து என்கிட்ட கதை சொல்ல வந்தார். மயிலு கதையான்னு கேட்டேன். ஆச்சரியமா உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்டார். அந்தக் கதையின் பாதிப்பு அப்படி. இந்த மாதிரி திறமைசாலிகளுக்கு எல்லாம் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்க வேண்டும். இவர்கள் அடுத்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முனைப்பில் இருக்கும் பொழுது வருவேன். ராம் அதை செய்யக்கூடியவர்” என முடித்தார் கமல்.