Search
Aii-fi

ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார்.

தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை.

அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர்.

Ai Tamil reviewதியாவாக எமி ஜாக்சன். ஷங்கர் படத்தில் நாயகிகள் என்னச் செய்வார்களோ, அதைக் குறைவாக்கி நிறைவாகத் தோன்றியுள்ளார் எமி. அவரது முகம் அந்நியமாக இருந்தாலும், அக்மார்க் தமிழ்ப்பட நாயகி போல் ஹீரோ போடும் சண்டையில் ப்ளாட் ஆகி காதலில் விழுகிறார். க்ளைமேக்ஸ் படி கதையைச் சுமக்க வேண்டியவர் நாயகிதான். ஆனால் அவரது பாத்திரம் மனதில் ஒட்டவேயில்லை. தியாவுக்கும் லீக்குமான காதலில் அழுத்தமோ பிடிப்போ இல்லை. அந்த மேஜிக்கைச் செய்யத் தவறிவிட்டார் ஷங்கர்.

படத்தின் நாயகன் என்றே பி.சி.ஸ்ரீராமைச் சொல்லலாம். படத்தை இவருக்காக மட்டுமாவது கண்டிப்பாக திரையில் காணவேண்டும். ஒவ்வொரு ஃப்ரேமும் கொள்ளை அழகு. சீனப் படங்களில்கூட சீனாவை இவ்வளவு அழகாகக் காட்டியிருப்பார்களா என்பது ஐயமே! வழக்கமாகவே பாடல் காட்சிகளுக்காக லோக்கேஷன்களிலும் செட்களிலும் மிகுந்த சிரத்தை எடுப்பவர் ஷங்கர். அதை பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் காண்பது மகத்தான அனுபவமாக உள்ளது.

ரோம் நகரம் பற்றியெரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அப்படியொரு பாத்திரத்தில் வருகிறார் சந்தானம். ஐஸ் வண்டி மிதிக்கும் பொழுது மட்டும் ஈர்க்கிறார். படத்தின் நீளம் மூன்று மணி நேரம். கதைக்குத் தேவைப்படாத நீண்ட கால அளவு எனினும், தன் மனதில் உதித்தவற்றை விஷூவலாக்க ஷங்கருக்கு இந்தக் கால அளவு தேவைப்பட்டிருக்கிறது. படத்தின் போக்கிற்கோ கதைக்கோ திருப்பத்துக்கோ உதவாதவரான பவர் ஸ்டார் வரும் காட்சிகளை படத்தின் நீளம் பொருட்டாவது கத்தரித்திருக்கலாம்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கவனித்து வாகாகப் பயன்படுத்தும் ஷங்கர், மாறி வரும் கதை சொல்லும் பாணியிலும் அதே கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். சுஜாதா இல்லாத குறை வேறு வசனங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஓஸ்மா ஜாஸ்மின் எனும் திருநங்கை பாத்திரத்தை மிக மலிவான நகைச்சுவைக்குப் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர். முக்கியமான நடிகரொருவரை அட்மாஸ்ஃபியர் ஆள் போல் உபயோகித்து, திடீரென அவரை வில்லனாக மாற்றுவது அரத பழைய டெக்னிக். ரசிகர்கள் யூகிக்க முடிந்த ஒன்றை இழுத்து வைத்து நிதானமாகச் சொல்லியுள்ளார் ஷங்கர்.

Ai vimarsanam