Search
Osthee

ஒஸ்தி விமர்சனம்

Osthee

ஒஸ்தி – மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் “ஓஸ்தி வேலன்” ஆக உள்ளது.

நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் இறக்க, மாற்றாந்தகப்பன் மற்றும் அவன் தம்பியுடனுனான உறவில் மேலும் சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல்களை நாயகன் எவ்வாறு கலைகிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

சந்தானம் இல்லாத தமிழ்ப் படம் நமுத்து போன பஜ்ஜி ஆகி விடும் போல. படத்தின் கலகலப்பிற்கு காரணமாக உள்ளார். வையாபுரி, மயில்சாமி, தம்பி இராமையா என நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சந்தானம் மட்டுமே தனித்து தெரிகிறார். வில்லனின் அடியாளாக வரும் ஒருவரும் ஆடி, பயந்து ரசிக்க வைக்கிறார். வி.டிவி கணேஷ் நாயகியின் தந்தையாகவும், உத்தமக் குடிக்காரராகவும் தோன்றியுள்ளார். மகளின் திருமணத்திற்காக குடிக்கும் பழக்கத்தை விட முடியாமல் உயிரையே மாய்த்துக் கொண்டு தியாகம்(!?) செய்கிறார்.

மயக்கம் என்ன‘ படத்தைத் தொடர்ந்து நாயகியாக நடித்துள்ளார் ரிச்சா கங்கோபாத்யாய். நெடுவாலி என்னும் பெயரில் தோன்றியுள்ள ரிச்சாவிற்கு பாடல் காட்சிகளில் கூட நிற்பதே வேலை. அவர் தோன்றும் காட்சிகளின் முடிவுகளில் கொஞ்சமாக சிரிக்கிறார். இவற்றை ஈடு செய்வதற்காகவே ‘கலா சலா கலா சலா..’ பாடலிற்கு மல்லிகா ஷெராவத்தை ஆடி வைத்து விட்டனர் போலும். நாயகி பேசாமடந்தையாக இருந்திருந்தால் கூட ஒன்றும் பெரிய பாதகம் வந்துவிட போவதில்லை. ஆனால் நாயகி பேசிய ஒன்றிரண்டு வசனங்களில், “அறைக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்.. அன்புக்கு தான் பயப்படுவேன்” என்று ஒரு குத்து வசனம் வருகிறது. ஏன் நாயகி அன்புக்கு பயப்படணும் என்று புரியவில்லை. ஆனால் குடிக்கார தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவராக உள்ளார். அன்பைக் கண்டு பயப்படுபவர் ஏன் நாயகனை மணம்புரிகிறார் என்றும் தெரியவில்லை. எதை வேண்டும் ஆனாலும் வசனமாக பேசலாம் என்ற கலாச்சாரம் நாயகனோடு ஒழிந்தால் தேவலாம்.

‘ஒஸ்தி வேலன்’ ஆக எஸ்.டி.ஆர். இளம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீசை இல்லாமலேயே திரையில் தோன்றுகிறார். கைவசம் வைத்துள்ள ‘ஒஸ்தி’ சண்டையில் எத்தனைப் பேர் வந்தாலும் அடிக்கிறார். குண்டுகளுக்கு நடுவில் சீறிப் பாய்ந்து எதிரிகளை துவம்சம் செய்கிறார். வேட்பாளரிடம் கைப்பற்றிய பணத்தைக் கொண்டு “போலீஸ் ஜீப்(!?)” ஒன்று வாங்கிக் கொள்கிறார். மாவட்ட ஆட்சியர் கைப்பற்றிய பணத்தைப் பற்றி விசாரிக்கிறாரே தவிர புது ஜீப்பைப் பற்றி எல்லாம் கேள்விக் கேட்க மாட்டேங்கிறார். தூங்கும் பொழுது கூட பெரிய கருப்பு நிறக் கண்ணாடியைக் கழட்டவே மாட்டேங்கிறார். படத்தின் முடிவில் தன் தாயைக் கொன்றது வில்லன் தான் எனத் தெரிந்ததும், “ஹல்க்” போல நாயகனின் தசைகள் முறுக்கேறி அணிந்திருக்கும் சட்டையைக் கிழிக்கிறது. ஜித்தன் ரமேஷ் நாயகனின் தம்பியாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக சரண்யா மோகன். நாயகனின் மாற்றாந்தகப்பன் ஆக நாசரும், தாயாக ரேவதியும் நடித்துள்ளனர். அவதாரம் படத்திற்கு பிறகு அனைவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

2008ல் வந்த குருவி படத்திற்கு பிறகு தமிழில் மீண்டும் படத்தை இயக்கியுள்ளார் தரணி. ‘டபாங்’ என்னும் இந்திப் படம் பெற்ற வெற்றியை நம்பி.. அப்படத்தை ரீ-மேக் செய்து.. தில், தூள், கில்லி போன்ற தனது வெற்றிப்பட வரிசையில் சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் எடுத்துள்ளார். தமனின் இசையும், கோபிநாத்தின் ஒளிப்பதிவும், வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் இயக்குனரின் நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதாய் உள்ளன. டி.ஆர். பாணியில் அரசியல் பற்றி அழகம்பெருமாள் பேசும் வசனம் நன்றாக உள்ளது. ‘பாக்சர் டேனியல்’ என்னும் பெயரில் வில்லனாக வரும் சோனி சூட் நாயகன் போலவே உள்ளார். படத்தின் தொடக்கம் முதலே அவரின் கட்டுக்கோப்பான உடலைக் காட்டுகின்றனர். படத்தின் முடிவில் எஸ்.டி.ஆரின் சிக்ஸ்-பேக்கைப் பார்த்ததுமே, “அப்ப எனக்கு இருக்கிறதுக்கு பேர் என்ன!?” என்ற அதிர்ச்சியில் பாதி இறந்து விடுகிறார். தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதற்கு பதிலாக எழுத்தாளராக மாறி காலம் பூரா தமிழ்ச் சூழலை நொந்து சாவது தேவலாம் என வில்லன்களை எல்லாம் பார்க்கும் பொழுது பரிதாபம் தோன்றுகிறது.
Leave a Reply