Search
siva

காரைக்கால் அம்மையின் தரிசனம்

கொங்கைதிரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண்வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கிசிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர்நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கியலறி யுலறு காட்டில்
தாழ்சடைஎட்டுத் திசையும் வீசி
அங்கங்குளிர்ந்தன லாடும் எங்கள்

அப்பனிடந்திரு ஆலங் காடே.

—காரைக்கால் அம்மையார்

 

முலைகள் வற்றிசரிந்து, நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி பசியினால் ஒட்டிய வயிறு, பரந்ததலைமுடி சிவந்து பற்கள் நீண்டு, பரந்த துயருடன் பெண்பேய்கள் அலறியும் உலறியும்திரியும் காட்டில் – சிண்டு விழுந்த சடைகள் எட்டுதிக்கும் பரவி வீசி அங்கம்குளிர்ந்து நெருப்பில் ஆடும் எங்கள் அப்பனாகிய சிவன் உள்ள இடமே திருஆலங்காடு.

காரைக்கால் அம்மையாரின் பாடல்களே இது. இவர் வாழ்ந்தவரலாற்றையும் பின்னணியையும் தெரிந்து கொண்டால் இப்பாடல்களுக்கு இன்னும் உச்சம்கூடும். காரைக்காலில் செழிப்பான வணிகரின் ஒரே மகள் புனிதவதி. மிக செல்லமாகவளர்க்கப்பட்டாள். அக்காலத்தில் சைவம் ஓங்கியிருந்த்தால் சிவபக்தை. பருவம்வந்த்தும் மகளை திருமணம் செய்வித்தார். ஒரே மகள் வேறு ஊருக்கு அனுப்ப பிடிக்காமல்தனது மருமகனுக்கு அதிக பொன்னும் பொருளும் கொடுத்து அவ்வூரிலேயே வணிகம் செய்வித்தார்.மிகவும் சிறப்பாகவே மருமகனும் வணிகம் செய்துவந்தான். ஒருமுறை அவரை பார்க்க வந்தவர்இரண்டு மாம்பழங்களை கொடுத்தார். அதனை வேலையாளின் மூலம் வீட்டிற்குகொடுத்தனுப்பினார். வீட்டில் ஒரு பரதேசி வந்து உணவு கேட்க உணவு அப்போது தயாராகாதகாரணத்தால் மாம்பழங்களில் ஒன்றை அரிந்து அளித்தாள் புனிதவதி. மதியம் கணவர் உணவிற்குவீடு திரும்பியதும் மீதம் உள்ள பழத்தை அரிந்து கொடுத்தார். அதை உண்ட கணவன் மிகவும்ருசியாக இருக்கிறது இன்னொரு பழத்தையும் அரிந்து வா என்று பணித்தார். அவரும் ஏதும்கூறதோன்றாமல் சரி என்றுமட்டும் சொல்லி சமயலறையில் வந்து என்ன செய்வது என்றுதெரியாமல் கடவுளை வேண்டினார். அவரது கையில் ஒரு பழம் வந்த்து. அதை அரிந்து விரைவாககணவனுக்கு அளித்தாள். அதை உண்ட கணவன் ஆகா இதுபோன்று நான் இதுவரை சாப்பிட்ட்தேஇல்லை அவ்வளவு ருசியாக இருக்கிறது. இருந்தாலும் இது அந்த பழம் இல்லை. இது வேறுமாதிரியாக இருக்கிறது என்று கூற புனிதவதியும் நடந்த்தை கூறினாள். அதை கேட்டகணவனுக்கு அதிர்ச்சி. நம்பாமல் மீண்டும் இதைப்போன்று இன்னொன்றை கொண்டுவா என்று பணித்தார்.அவளும் சென்று வேண்டி கொண்டுவந்து கணவனது கையில் கொடுத்தாள். கையில் வாங்கியமறுகணமே அது மறைந்த்து. அன்றே கணவன் முடிவெடுத்தான் என் மனைவியானவள் சாதாரணமானவள்இல்லை, இவளுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று. அவன் மறு நாளே கப்பலில்தூரதேசம் சென்று வாணிபம் செய்யப் போவதாக கூறி அவளை விட்டகன்றான். பாண்டியதேசத்திற்கு சென்று அங்கேயே இன்னொரு பெண்ணை மண்ந்து பிள்ளைகள் பெற்று தங்கிவாழ்ந்து வரலானான். புனிதவதியை மறந்தான்.

புனிதவதியும் வருடங்களாக காத்திருந்தாள். வியாபார நண்பர்கள் வந்து தனது மருமகன்பாண்டியதேசத்தில் பார்த்த்தாக கூற, அதை தீர விசாரித்து தனது மகளை அழைத்துக்கொண்டுபுறப்பட்டான். புனிதவதியை கண்ட கணவன் அவளது காலில் விழுந்தான் உனக்கேற்றவன் நான்இல்லை என்றான். அவளது மனைவியையும் குழந்தைகளையும் அவளது காலில் விழுக வைத்தான்.புனிதவதி அதிர்ச்சி அடைந்து அங்கேயே பேய் உருவை வேண்டி அடைந்தாள். அங்கிருந்துதிரு ஆலங்காட்டில் அலைந்து திரிந்தாள். பின்னர் கைலாயத்திற்கு சென்று சிவனைதரிசிக்க கிளம்பினாள். தலையாலேயே நடந்து கைலாயத்தை கடந்து சிவனை அடைந்தாள்.சிவனும் இவளை அம்மையே என்றழைத்ததனால் இவளுக்கு அவளது ஊரின் பெயருடன் “காரக்கால்அம்மையார்என்று அடையாளப் படுத்தப்பட்டாள்.

புராணக்கதைகளில் மிகைத்தன்மை சேர்க்கப்பட்டு அதீதமாக்கப்படுவது இயல்பு. நாம் அமானுஷ்ய கதை கலப்புக்களை சற்று விலக்கி அதனை கண்டாலும், காரைக்கால் அம்மையாரின் கதை மிகுந்தஉணர்ச்சிப்பூர்வமானது. கணவன் அவளைவிட்டு விலக அவளது தெய்வத்தன்மையால் என்று கதைகூறுகிறது. அதுவும் அந்த மாம்பழ நிகழ்ச்சியை வைத்து. நாம் அதை விலக்கி விடுவோம். (இறுதியில்தலையால் கைலாயத்தை கடந்த்தையும் மறந்துவிடுவோம்)

மனைவியின் மிகுந்த அறிவுக்கூர்மை காரணமாக இருந்திருக்கலாம், அல்லது கண்ணகியைப்போன்று செல்வ செழிப்பு மிக்க பேதையாக இருந்திருக்கலாம், அல்லது வேறு கருத்துவேறுபாடாக கூட இருந்திருக்கலாம். ஆனாலும் புனிதவதி தனது கணவனின் மேல் மிகுந்தகாதலாகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே அவள் தனது தகப்பனுடன் கணவனை காணசென்றிருக்க வேண்டும். அங்கே அவள் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நட்த்திகுழந்தைகள் பெற்று இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றிருக்க வேண்டும். எவ்வாறு மிகுந்தஅடக்கமாக உலகமறியா பெண்ணாக இருந்த கண்ணகி தனது கணவனே உலகம் என்றிருந்த கண்ணகிகணவன் கொலையாகப்பட்டான் என்ற செய்தி வந்தவுடன் அவளுள் எழுந்த அந்த எழுச்சி, அந்தஒட்டுமொத்த மாற்றம், சீற்றம், Total transcendent ஒரு கூட்டுப்புழுவிலிருந்து பட்டாம்பூச்சிபிறப்பதுபோல் உருமாற்றம் நிகழ்ந்த்துபோல புனிதவதிக்கும் அக்கணத்தில்நிகழ்ந்திருக்கும். என்ன ஒரு உணர்ச்சிப் பிழம்பாக மாறியிருப்பாள். சுற்றத்தைதுறந்து, இளமையை துறந்து பசியால் வாடி பேய் போன்று உருகொண்டு திரு ஆலங்காட்டில்திரிந்திருப்பாள். பின்னர் ஆதாரத்திற்கு சிறுவயதிலிருந்து பயின்ற சிவபக்தியைகைகொண்டிருப்பாள். சிவனையே பற்றினாள். வேறெதையும் நினைக்கவில்லை.

அவ்வாறாக உருமாற்றம் அடைந்த அம்மை, எழுதிய பாடல்களின் வீச்சு மலைக்க வைக்கிறது.இந்த பின்னணியுடன் இப்பாடலை பார்க்கும்போதே அது அமைகிறது. இல்லையென்றால் இதுவும்சைவபாடல் தொகுப்பில் ஒன்றே என்று தோன்றச்செய்யும்.

 

இங்கே நான் கண்ட “Goya’s Ghosts” என்கிற 2006ல் வந்த ஆங்கில திரைப்படம் சட்டென்றுஞாபகத்திற்கு வருகிறது. அதில் ஒரு அழகான பெண் தனது கணவனால்(?!) இறுதியில்பைத்தியக்காரியாக மாறுவது கதை. 18ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் நடக்கும் கதை.அக்காலகட்டத்தில் கிறிஸ்த்துவம் பாகன் வழிபாட்டாளர்களை சூனியக்காரிகள் என்றுவேட்டையாடினார்கள். அக்காலகட்ட்த்தில் ஒரு பெருவணிகரின் செல்லமகள் அவ்வாறுசூனியக்காரி என்று அடையாள படுத்தப்பட்டு ஒரு பாதிரியாரால் சிறையில் தனிமையில்தொடர்ந்து வேட்டையாடப்படுகிறாள். அவளது குடும்பமும் கலைந்து அழிந்து போகிறது. அவள்அங்கேயே பாதிரியாரால் குழந்தையும் பெற்றுக் கொள்கிறாள். தனிமை சிறையில் புத்திபேதலிக்கிறது. குழந்தையை பாதரியார் பிரித்து கொண்டுபோகிறார். அவள் குழந்தைநினைப்பாக இருக்கிறாள். 15வருடங்களுக்கு பிறகு பிரிட்டிஷ் போரில் வெற்றி பெற்றுஉள்ளே நுழைகிறது. கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். பாதரியார் நடு முச்சந்தியில்தண்டனை அளிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறான். இந்த பைத்தியக்காரி அந்த கூட்ட்த்தில்இருக்கிறாள். இறுதியில் அப்பாதரியாரின் உடலை ஒரு வண்டியில் வைத்து எடுத்துக்கொண்டுபோகும் போது இவளும் அந்த பிணத்தின் பின்னாலேயே செல்கிறாள்….. அந்தகாட்சியில் கண்ணீர் சொரிய பார்த்துக் கொண்டிருந்தேன்.

கண்ணகி மதுரையை எரித்தபின் துறவுபூண்டு திரிந்து சேர நாடு ஏகி ஆங்கே அமைந்ததையும், ஒளவையார் தனது இளமையை துறந்து முதுமை அடைந்து திரிந்ததையும் நாம் காரைக்கால் அம்மையாரின் நிகழ்வுடன் நினைவு கூறத்தக்கது. சைவத்திற்கு காரைக்கால் அம்மையார் என்றால் வைணவத்திற்கு ஆண்டாள் நம் கண்முன் தெரிகிறார். வேறெந்த சமூகத்திலும் இல்லாது பெண்கள் தம்போக்கில் வாழ்ந்து கடைத்தேற தமிழ் சமூகத்தில் இடமிருந்திருக்கிறது. இன்றைக்கும் நாம் கன்னியாகுமரியில் வாழ்ந்த மாயம்மாவை பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

சாகித்ய அகடாமி பதிப்பில் வெளியிடப்பட்ட ”காரைக்கால் அம்மையார்” என்கிற புத்தகத்தைபடிக்கும்போது முதலில் நான் மிகுந்த தாக்கத்திற்கு உள்ளானேன். புராண கதை கலப்புக்களை நீக்கி ரத்தமும்சதையுமாக காரைக்கால் அம்மையாரின் வாழ்வை இன்றைய பார்வையில் படித்தாலும் அது மிகுந்தஉணர்ச்சிப்பூர்வமானது. அவரது பாடல்களை படிக்கும்போது உடலில் பெட்ரோல்ஊத்தப்பட்டு கொழுத்தப்பட்ட்துபோல் “குப்பென்றுஉணரவைக்கக்கூடியது. தன்னை சிவனின் பேய் கணங்களில் ஒன்றாக பாவித்து அனைத்தையும் கடந்துசெல்ல அம்மையால் முடிந்திருக்கிறது. அம்மையின் சிவ தரிசனம்மயிர்கூசச் செய்வது. அந்த காரைக்கால் அம்மையைவணங்குகின்றேன்.

 

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்

முடிபேரின்மாமுகடு பேருங்- கடகம்
மறிந்தாடும்கைபேரில் வான்திசைகள் பேரும்;

அறிந்தாடும்ஆற்றா தரங்கு.

காரைக்கால் அம்மையார்.

உமதுஅடிகள் பெயர்ந்தாடுவதால் பாதாளம் உடையும். முடி பரந்து ஆடுவதால் அண்டத்தின் உச்சி உடையும்.காப்பணிந்த கைகள் உடுக்கை ஒலியில் அசைந்தாடும்போது வான் திசைகள் உடையும். இந்த அரங்கு உம்மைத் தாங்கஇயலாது. எனவே மெதுவாக ஆடுக.
One thought on “காரைக்கால் அம்மையின் தரிசனம்

Leave a Reply