Search
LORD_KRISHNA

கீதை கொலைகார நூலா…?

உலகில் இன்று நிலைத்து நிற்கும் மதங்கள் அனைத்திற்கும் புனித நூல்கள் உண்டு. அப்படி புனித நூல்கள் இல்லாத மதங்கள் அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல் விரைவில் அழிந்துவிடும். புனித நூல்கள் இல்லாத மதங்கள் மட்டுமல்ல புனித நூல்களைப்பற்றி விழிப்புணர்வு இல்லாத மக்களை தன்னகத்தே கொண்டுள்ள மதங்கள் கூட காலச் சுழற்சியில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி அழிந்து மறைந்துவிடும். அந்த வகையில் நமது இந்து மதத்திற்கு புனித நூல்களை பற்றிய பஞ்சம் ஒருபோதுமே இருந்ததில்லை ஆனால் புனித நூல்கள் பற்றிய விழிப்புணர்வு இந்து ஜனங்களுக்கிடையில் சில நூற்றாண்டுகளாக கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது விழிப்புணர்வு என்பதை கூட ஒரு பக்கத்தில் ஒதுக்கிவிட்டாலும் தனது மதத்திற்கு எது புனித நூல் என்றும் புனித நூல்கள் என்பது இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்து மக்களிடையே அறியாமை இருள் பரவியுள்ளது.

இத்தகைய பரிதாபகரமான அறியாமை நமது மக்கள் மத்தியில் பரவி இருப்பதற்கு காரணம் நமது மதபோதகர்களும், குருமார்களுமே ஆகும். தங்களை வெளிச்சப்படுத்திக் கொள்ள விரும்பாத அல்லது தகுதியற்ற மதபோதகர்களும் ஆச்சார்யர்களும் நிறைந்துவிட்டநிலையில் தகுதி உடைய மதகுருமார்கள் தங்களது மக்களை பற்றியும் மதத்தின் நிலை பற்றியும் கவலைபடாதபோது இந்த நிலை நமக்கு இருப்பதற்கு ஆச்சர்யம் என்பது ஒன்றுமில்லை ஜனங்களின் மனது எப்போதுமே எளிமையானதையும், கவர்ச்சியானதையும் கிரஹிக்கக்கூடியதாகவே இருக்கிறது. பண்டிதகர்வமுடைய ஆச்சார்யர்கள் எளிமையையும் அழகுனர்ச்சியையும் மறந்து உபதேசிக்க ஆரம்பிப்பதனால் அவர்கள் கையில் கிடைத்து புனித நூல்கள் படாதபாடுபடுகிறது. அத்தகையவர்களின் வித்தைகள் தொடர்ந்து அலுப்பையும், சலிப்பையும் தருவதனால் மக்களும் புனித நூல்களை புறம் தள்ளுகிறார்கள் அல்லது நுனிப்புல் மேய்கிறார்கள்.ஆனால் வித்தைகர்வமும் எந்த விஷயத்தையும் ஒளித்து மறைத்து பேசும் சுபாவம் இல்லாத யோகி ஸ்ரீ ராமானந்த குரு போன்ற சைதன்ய ஆத்மாக்கள் தங்களிடம் வரும் ஞானாத்தாகம் எடுக்கும் சின்னஞ்சிறு ஆத்மாக்களை தாகம் தனியவைப்பதோடு அல்லாது மீண்டும் அவர்களுக்கு தாகம் என்பதே தோன்றாதவாறு முழுமைபடுத்தி விடுகிறார்கள் எனவேதான் அவரிடம் இந்து மதத்தின் புனித நூல் எது என்ற கேள்வியை வைத்தேன் அதற்கு அவர் பொதுவாக நமது மதத்தின் புனித நூல்கள் எது என்றால் வேதங்கள்தான் என்று சொல்ல வேண்டும் ஆனால் சகல மக்களும் சதுர் மறையின் கருத்துக்களை உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்ள முடியாது எனவே அந்த வேதங்களுக்கு விளக்கம் கூற எழுந்த உபநிஷதங்கள் பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம், பகவத் கீதை இந்த மூன்றையும் இணைத்து பிரஸ்தானத்திரயம் என்று அழைப்பார்கள் இந்த பிரஸ்தானத்திரத்தையே இந்து மதத்தின் புனித நூல்கள் என்றும் பலர் கருதுகிறார்கள் அது உண்மையானதாக இருந்தாலும்கூட மக்களுடைய பயன்பாடு என்று வரும் போது இம்மூன்று நூல்களையும் படித்து புரிந்து அதன் வழி நடப்பது என்பது இயலாத காரியம் ஆகும். வேதங்களின் கருத்துக்களை எளிமையாக்கி கூற வந்தவைகள் தான் உபநிஷதங்கள் ஆகும். இந்த உபநிஷதங்களின் நோக்கம் என்ன என்பதை விளக்க வந்ததுதான் பிரம்மசூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரமாகும். வேதங்கள், உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றின் சாராம்சத்தை முடிந்த முடிவை அவைகளுக்குள் உள்ள ஜீவனை அப்படியே தன்னகத்திற்குள் கொண்டு பிரகாசிப்பது பகவத் கீதை ஆகும். எனவே இந்து மதத்தின் புனித நூல் கீதை என்று எங்கேயும் எந்த சூழலிலும் எவர் இடத்திலும் துணிந்து கூறலாம்.

கேள்வி: ஐயா! வேதங்கள் முனிவர்கள் தங்களது ஞானக்கண்களால் பார்த்து அறிந்து எழுதியது ஆகும். உபநிஷதங்கள் ரிஷிகளால் உருவானதாகும். பிரம்மசூத்திரம் வியாசரால் எழுதப்பட்டது ஆகும். கீதை பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சுணனுக்கு சொன்னதாகும். உண்மையாகவே கீதை கண்ண பெருமானால் சொல்லப்பட்டதா? அல்லது மகாபாரதம் எழுதிய வேதவியாசர் கீதையை தானே எழுதி கிருஷ்ணனின் பெயரால் பேசுகிறாறா?

குருஜி: வியாசர் எழுதினாரா கிருஷ்ணன் சொன்னாரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் இவர்கள் இருவருமே இல்லாது மூன்றாவதாக வேறொருவர் கீதையை எழுதி மகா பாரதத்தில் இடைச்செருகலாக திணித்து விட்டார் என்ற ஒரு வாதமும் அறிஞர்களிடத்தில் இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் இந்த வாதம் என்னை பொறுத்தவரையில் விதண்டாவாதம் என்பேன். இதிகாசங்கள் என்ற வரிசையில் உலகில் உள்ள நூல்கள் அனைத்திலும் பெரியதும், பிரம்மாண்டதுமானதும் மகாபாரதம் ஆகும். இந்த மகா பாரதத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் பகவத்கீதை என்ற அறிய பொக்கிஷம் 18 அத்தியாயங்களாக 700 சுலோகங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது. மகாபாரதத்தை முடி முதல் அடிவரை ஆதியோடு அந்தமாக படிப்பவர்களுக்கு எழுத்து நடையில் எந்த மாறுபாடும் தெரியாது ஒரே மாதிரியான பாணிதான் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தனித்தனி எழுத்து நடையுண்டு என்பதை நீ அறிவாய் பாரதி, கண்ணதாசன் போன்றோர்களின் புத்தகங்களில் அவர்கள் பெயர்கள் அச்சிடப்படாமல் இருந்தால் கூட நூலை படித்தவுடன் இதை இன்னார்தான் எழுதி இருக்க வேண்டும் என்பதை திறமையான வாசகன் நிமிடத்தில் கண்டுபிடித்துவிடுவான் இந்த இருவரின் எழுத்துக்களுக்குள் மறைமலை அடிகளின் எழுத்துக்களை புகுத்தினால் அது தனியாக மொட்டை தலையில் பூவை வைத்ததுபோல் துருத்திக்கொண்டு தெரியும். எனவே மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் வியாசரின் எழுத்து நடையே துவக்கம் முதல் முடிவு வரையில் பரிணமிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த அகச்சான்று ஒன்றே பகவத்கீதையை எழுதியது வியாசர்தான் என்பதை அடித்துக் கூறிவிடும். பகவத் கீதையை எழுதியது வியாசராக இருக்கலாம். ஆனால் அதன் கருத்துக்கள் வியாசருக்கு சொந்தமானது அல்ல. தனக்கு சொந்தம் என்று அதை வியாசர் ஒருபோதும் சொல்லவில்லை. கீதையை முழுமையாக ஆழ்ந்து படிப்பவர்கள் அதில் உள்ள தெய்வீகத் தன்மையை சாதாரண மனிதனால் சிந்திக்க முடியாது என்பதை நன்கு அறிவார்கள். எனவே கீதை என்பது பரிபூரண அவதாரமான பரந்தாமன் கிருஷ்ணன் சொன்னதை சஞ்சயன் கேட்டு வியாசர் எழுதியது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

கேள்வி: ஐயா! மகாபாரதத்தில் கீதை உபதேசிக்கப்படவேண்டிய் சூழ்நிலைகள் பல இருந்தும் அங்கெல்லாம் அது உபதேசிக்கப்படாமல் போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டிருப்பது எதனால்?

குருஜி: எந்த ஒரு புனித நூலுக்கும் இல்லாத சிறப்பு கீதைக்கு இருப்பதற்கு காரணம் அது உபதேசிக்கப்பட்ட நேரமும் இடமும்தான் உலகிலேயே கொலைகள் வாழும் சமர்களத்தில் உபதேசிக்கப்பட்ட ஒரே நூல் பகவத் கீதையே ஆகும். அதற்கு காரணம் மிகவும் அழகானது. வேதம், வேதாந்தம் இவைகளின் நோக்கமே மனங்களுக்கு சாந்தியையும், சமாதானத்தையும், தருவதுதான் உபநிஷதங்கள் எல்லாம் மனித சஞ்சாரம் அற்ற ரம்மியமான வனப்பகுதியில் உருவானவைகள்தான் சாந்தி என்பது அமைதியான வனங்களில் மட்டுமல்ல சமர்களத்திலும் ஆரவாரத்திலும் பிறக்க வேண்டும் என்பதே கீதையின் குறிக்கோள்ஆத்ம உபதேசத்தை ஏற்பதற்கு எந்த நிலையிலும் மனிதன் தயாராக இருக்க வேண்டும் என்பதே கீதை போர்க்களத்தில் உபதேசிக்கபட்டதற்கு மிக முக்கிய காரணம் ஆகும்.

கேள்வி: நினைத்து பார்க்கவே நெஞ்சில் இனிப்பை தரும் காரணம் இது உளவியல் நூல்களில் எந்த ஒரு கருத்தும் ஆழமாக பதிய வேண்டுமென்றால் அவன் ஏகாந்தமாக இருக்கும் போதோ, சோகமாக இருக்கும் போதோ சொல்லப்படவேண்டும் என்று படித்திருக்கிறேன். இந்த நவின யுக்தியை பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே வியாசர் பயன்படுத்தி இருப்பது பெரும் வியப்பை தருகிறது. அடுத்ததாக ஒரு சந்தேகம் பகவத் கீதை அர்ச்சுணனை கொலை செய்ய தூண்டுகிறது எனவே கீதை என்பது அமைதிக்கு எதிரான நூல் அதாவது வன்முறையைத் தூண்டும் கொலை நூல் என்று சொல்கிறார்களே அது ஏன்?

குருஜி: சமய சாஸ்திரங்களின் மூலத்தையே ஆராய்ச்சி செய்து புதிய கோட்பாட்டை கீதை தருகிறது. இயற்கை முழுவதுமே முடிவில்லாத தொடர்ச்சியான ஒரு கொலைகளம் என்கிறது கீதை. அணுவில் தொடங்கி அண்ட சராசரங்கள் வரையில் உயிர் என்பது நிறைந்து இருக்கிறது ஒரு துளி நீரிலும் மூடி இருக்கும் கைக்குள் அடங்கி இருக்கும் சிறு காற்றுக்குள்ளும் பல்லாயிரக்கணக்கான சிற்றுயிர்கள் நிறைந்து இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்றை ஒன்று விழுங்கி வாழ்வின் வளர்ச்சியை அடைகின்றது. இதுதான் இயற்கையின் உண்மை தத்துவம் இந்த இயற்கை தத்துவத்தை எவரும் மறுக்க இயலாது. அப்படி பார்த்தால் உலகம் முழுவதுமே முடிவு இல்லாத கொலைக்களமாகத்தான் இருக்கிறது. இறைவன் படைப்பில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் அடங்கி இருக்கிறது. பாரத தேசத்தில் சூரியோதயம் ஏற்படும்போது அமெரிக்க நாட்டில் சூரிய அஸ்தமனம் நடக்கிறது. ஒரு இடத்தில் மரணம் ஏற்படுகிறது. இன்னொரு இடத்தில் ஜனனம் உருவாகிறது அதாவது அழிவும் ஆக்கமும் பிரபஞ்சம் முழுவதும் இடையறாது நடந்துகொண்டே இருக்கிறது. சிருஷ்டியின் இந்த முக்கோண வடிவை புரிந்து கொண்டால் மரணத்தின் ரகசியம் எளிதில் வெளிப்படும். உயிர்களை கொல்லக்கூடாது கொலைத் தொழில் புரியலாகாது என்று சொல்பவன் நம்புபவன் உண்ணவும் முடியாது சுவாசிக்கவும் முடியாது இயற்கையின் வட்டத்திற்குள் வாழவும் முடியாது. இயற்கை என்னும் கொலை வட்டத்திற்குள் வந்தவுடன் கொலை செய்யமாட்டேன் என்பவன் ஜடமாகிவிடுகிறான் மேலும் கீதை சொல்வது தர்மயுத்தத்திற்காக பொதுநலத்திற்காக புரியும் கொலைகளே ஆகும். இது உயிர் பறித்தல் என்ற கருத்திலே வராது. களை எடுத்தல் என்ற பொருளில்தான் வரும் வாழ்க்கை என்பதே ஒருவித போராட்டம்தான் இதில் எதிரிகளாக வரும் காம குரோதங்களை மவுடிக மாச்சரியங்களை கொலை செய்தே ஆகவேண்டும் இந்த கொலைகளை செய்ய மறுப்பவன் எவனும் ஆண்மையுடையவனாகமாட்டான் எனவே இத்தகைய கொலைகளை புரிபவனே நரசிரேஷ்டா அதாவது மனிதர்களில் சிறந்தவன் என்று கீதை கூறுகிறது ஆகவே சந்தேகமே இல்லாமல் கீதை என்பது கொலை நூல்தான் அதாவது அமைதிக்காகவும், சாந்திக்காகவும் கொலைகளை ஊக்குவிக்கும் மிகப்பெரும் தத்துவக்களஞ்சியம்தான் கீதை ஆகும். இயற்கை எனும் போர்களத்தில் வாழ்வு என்னும் கொலை தொழிலை செய்யவே கீதை தூண்டுகிறது. இக்கொலைகளை செய்யாதவனை மனிதனாகவே ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: எது கொலை என்பது இப்போது நன்கு விளங்குகிறது கீதையின் பேரில் இன்னொரு அவப்பெயரும் உள்ளது. கீதை தர்மம் என்ற பெயரிலும் கர்மா அல்லது செயல் என்ற பெயரிலும் வணக்கத்திற்குரிய பெரியோர்களை கொலை செய்ய வேண்டுமென்றும் அப்படி செய்பவன் தனது கடமையைச் செய்தவனாகிறானே தவிர அவன் கொலை பாதகன் அல்லண் என்றும் சூதாட்டத்தில்தான் சூதுவாக இருக்கிறேன் என்று கிருஷ்ணன் கூறுவதனாலும் அதையெல்லாம் படிக்கும் பாமரர்கள் அவைகளை நம்பி தங்களது வாழ்க்கையை திசைமாற்றி வீழ்ச்சி அடைந்து விடுவார்களே என்றும் அவப்பெயர் ஏற்படுத்துபவர்கள் சொல்கிறார்கள் இதற்கு உங்களது விளக்கம் என்ன?

குருஜி: அறிவற்றவர்கள் ஒரு நூலை அல்லது கருத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் அது நூலின் குற்றமோ கருத்தின் குற்றமோ ஆகாது. யானையை பார்த்த குருடர்கள் கதைதான் இது புலனடக்கமும், பக்தியும், தன்னலத் தியாகமும், தவமும், தொண்டும் இன்னதென்று அறியாத பாமரர்களின் பேச்சுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை மேலும் கிருஷ்ணன் தான் சூதுவாக இருக்கிறேன் என்பதற்கு சூது என்ற வார்த்தையில் உண்மை பொருளை தெரிந்துகொள்ள வேண்டும். சாதுர்யம் என்பதுதான் அதன்பொருள் சாதுர்யம் என்பது தர்மத்திற்கு முரணான வகையில் செயல்படுதல் என்பது ஆகாது அப்படி செயல்படுவதற்கு தந்திரம் என்று பெயர். தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் வீரமும் விவேகமும் இருந்தால் மட்டுமே போதாது சாதுர்யமும் தேவை இதை சரித்திரக் கண்ணோட்டத்தில் சொல்லவேண்டுமென்றால் திப்புசுல்தான் பிரிட்டிஷ்காரர்களை வென்றது சாதுர்யம் ஆகும். பிரிட்டிஷார் அவனை வீழ்த்தியது தந்திரமாகும். எனவே சாதுர்யமானதாக தாம் இருப்பதாக கிருஷ்ணன் சொல்வது எந்த வகையில் தவறாகும். இதை பாமரமக்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டியது நமது கடமையே தவிர கீதையின் வேலை அது அல்ல.

கேள்வி: அப்படியென்றால் கீதையின் உண்மை நோக்கம் என்ன அது மனிதனுக்கு முடிந்த முடிவாக என்ன கூறுகிறது?

குருஜி: அழிந்து போகக்கூடிய சரீரத்தை சாஸ்வதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் மனித குலத்தின் அறியாமையை போக்குவதே பகவத்கீதையின் மிக முக்கியமான நோக்கமாகும். குருசேத்திர பூமியில் அர்ச்சுணனுக்கு ஏற்பட்ட சிரமம் போலவே மனிதனாகிய ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் போராட்டங்களும், சிரமங்களும் ஏற்படுகிறது. தர்மச் சங்கடமான நிலையில் சமாளிக்க வகையறியாது ஒவ்வொரு மனிதனும் சில நேரங்களில் கலங்கி நிற்கிறான் அப்படி உணர்வுபூர்வமான மயக்கம் எற்படும்போது என்ன செய்வதென்று வகையறியாமல் தவிக்காமல் அர்ச்சுணன் செய்ததுபோல ஒவ்வொருவரும் சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீமன் நாராயணனிடம் முழுமையாக சரணடைந்து விடவேண்டும்.

துன்பத்தில் உழலும் பற்பல மனிதர்களுக்குள் வெகுசிலரே தனது நிலை பற்றியும் தான் யார், தனக்கு இத்தகைய துன்பங்கள் வர என்ன காரணம் என்று ஆராய தலைப்படுகிறார்கள் தனது கஷ்டங்களுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத எவனும் பக்குவப்பட்ட மனிதன் என்று கருதுவதற்கு தகுதியற்றவன் ஆகிறான். துயரங்களின் மூலத்தை அறிந்தவன் நிலையான அழியாத ஆனந்தத்திற்கு சொந்தக்காரன் ஆகிறான். அப்படி அறிந்த பின்பு யார் வாழ்விலும் துன்பத்தின் சுவடுகள் தெரிவதில்லை. இதுவே பகவத்கீதை ஒவ்வொரு மனிதனுக்கும் தரும் செய்தி ஆகும்.

கேள்வி: துன்பத்தின் ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று பகவத்கீதை கூறுவதை இன்னும் எளிமையுடன் சொல்ல முடியுமா? 

குருஜி: நாம், நமது உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள், தலைவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களிடம் பற்றுதல் வைக்கிறோம். நமது பாசத்திற்குட்பட்ட அவர்களை காலச் சூழலினால் இழக்க நேரிடும்போது தாங்கமுடியாத துயரச் சாகரத்திற்குள் தள்ளப்டுகிறோம். இதே போன்ற சொத்து சுகங்கள் வாழ்க்கையை சுகமாகவும், சுலபமாகவும் ஆக்கும் பொருட்களின் மீது அதிகமான ஈடுபாடு கொள்கிறோம். அந்த பொருட்களை இழக்கும்போதோ அனுபவிக்க முடியாமல் போகும்போதோ வீணாக துயரத்தின் கால்களால் மிதித்து துவைக்கப்படுகிறோம். எனவே எதிலும் பற்றுதல் ஏற்படும் போதுதான் துன்பம் வருகிறது. இந்த பற்றுதலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டுமென்றால் ஆசைக்குரிய பொருளின் உண்மை இயல்பை ஆராய வேண்டும். இந்த ஆராய்ச்சிக்காக நமது மூளையை போட்டுகசக்கவேண்டியது இல்லை

ஸ்ரீ கிருஷ்ணனே அர்ச்சுணனிடம் கேட்கும் ஒரு கேள்வியின் மூலமாக இதற்கு பதிலை தருகிறார்.

போர்க்களத்திலே உன்னால் கொல்லப்படபோகும் பகைவர்களுடைய உடல்கள் அழியப்போகிறதே என்பதற்காக விசனப்படுகிறாயா? அல்லது அவர்களது உயிரைப்பற்றி துக்கப்படுகிறாயா? என்று கேள்வி எழுப்பிய ஸ்ரீ கிருஷ்ணன் அதற்கான பதிலை உடனே தருகிறார். உடலை நீ அழித்தாலும் அழிக்காவிட்டாலும் அது என்றாவது ஒருநாள் அழியத்தான் போகிறது அப்படி அழிந்துபோகும் நிலையற்ற உடலைப்பற்றி கவலைப்படுவது வேடிக்கையானது இது அறிவாளிகளுக்கு ஆகாத செயல் அவர்களுடைய உயிர்கள் அழிந்து போகிறதே என்று நீ கவலைப்பட்டால் அது இன்னும் வேடிக்கையானது. காரணம் உயிர்களை உன்னால் அழிக்க முடியாது. அந்த உயிர்கள் தாமாகவும் அழிந்து போக முடியாது. இப்படி ஆத்மாவின் அழியா தன்மைபற்றிய விஷயத்தை முத்தாய்பாய் வைத்து ஸ்ரீ கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.

ஒருவன் நான் கொல்லுகிறேன் என்று எண்ணுவதும் நான் கொல்லப்படுகிறேன் என்று கதறுவதும் அறியாமையின் சிகரம் ஆகும். ஆத்மா கொல்லுவதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை.

உயிர்கள் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை ஒரு காலத்தில் இல்லாது இருந்து பிறிதொரு காலத்தில் புதிதாகத் தோன்றுவதும் இல்லை. உண்டான பிறகு இல்லாமல் போவதும் இல்லை. ஆத்மா எந்த காலத்திலும் மரணத்தின் வாயிலில் விழுவது இல்லை. மரணம் அடைவது எல்லாம் சரீரமே தவிர ஆத்மா அல்ல.

கிழிந்துபோன ஆடைகளை களைந்துவிட்டு புதிய ஆடைகளை மனிதர்கள் தரித்து கொள்வது போல் ஆத்மாவும் பழைய உடல்களைக் களைந்து விட்டு புது உடலை பூணுகிறது.

இது ஜடவஸ்த்துகளின் நிலையாமை பற்றியும் ஆத்மாவின் அமரத்தன்மை பற்றியும் முழு முதற்கடவுளான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆப்த வாக்கியங்களாகும். அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஒரு பொருள் நிலைத்து நிற்கிறது. அதுவே ஆத்மா என்று குறிப்பிடப்படுவதை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும். துக்கம், துக்கநிவாரணம், துக்க உற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்று நான்கு விஷயங்களும் பகவத்கீதையில் சொல்லப்படும் மிக முக்கிய விஷயங்களாகும். இந்த நான்கிற்குள்ளேயே பகவத் கீதை என்ற மகா சமுத்திரம் அடங்கிவிடுகிறது எனலாம். பௌத்த மதமும் இந்த நான்கு விஷயத்தைப் பற்றிதான் பேசுகிறது என்றாலும் அது புத்தரின் புதிய கண்டு பிடிப்புகள் அல்ல. சமஸ்கிருதத்தில் கீதையில் உள்ளதை புத்தர் தனது பாலிமொழியில் எடுத்து சொல்கிறார் அவ்வளவுதான். அர்ச்சுணனுக்கு ஏற்பட்டது ஒரு விதமான துக்கம் அவன் நாடியது அந்த துக்கத்திற்கு நிவாரணம் அவன் தேருக்கு அச்சமயம் சாரதியாக இருந்த இறைவன் துன்பம் எதிலிருந்து தோன்றுகிறது என்பதையும் அந்த துன்பத்திற்கு நிவாரண மார்க்கம் எது என்பதையும் ஐயம் திரிபற விளக்குகிறார். சர்வேஸ்வரரான ஸ்ரீ கிருஷ்ணனின் அமுதமொழிகள் இன்றும் உலகில் துன்பப்படும் அனைத்து உயிர்களுக்கும் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது.

கேள்வி: ஆசைகளிலிருந்துதான் துயரம் உற்பத்தி ஆகிறது என்பதை நன்கு உணர முடிகிறது. கண்கள் திறந்திருந்தும் ஆழமான கிணற்றுக்குள் அடுக்கடுக்காக விழும் செம்மறி ஆடுகளைப் போல் ஆசைதான் எதிரி என்று தெரிந்தும் அதைத் துரத்த முடியவில்லையே அது ஏன்?

குருஜி: புற்றுநோய் தோன்றுவதற்கு இன்னென்ன காரணம் என்பதைக் கூறும் மருத்துவர் நோயை குணப்படுத்த தன்னால் இயலாது என்று கூறினால் அது எப்படி அரைகுறையானதாக ஆகுமோ அதே போன்றுதான் துக்கத்திற்கான காரணத்தைகூறி அதை நீக்க வழி கூறாது போனால் ஆகும் ஆனால் கீதையை சாதாரண மனிதன் உபதேசிக்கவில்லை. ஜகத் காரணன், ஜகத் ரட்சகன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ஜகனாதனாகிய ஸ்ரீ கிருஷ்ணனின் திருவாயிலிருந்து உதயமானதே கீதை ஆகும். எனவே கீதையில் துக்க நிவாரண மார்க்கம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏதாவதொரு பொருளிலோ செயலிலோ பற்று இல்லாத இருக்கும் மனிதர்கள் இருப்பது அரிதிலும் அரிதாகும். அப்படி அரிதான பற்றில்லா மனிதர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படும் விளைவுகள் மீது சிறிதளவெனும் பற்றில்லாமல் அவர்களால் எப்படி இருக்க முடியும். சின்ன செயலோ பெரிய காரியமோ எதுவாக இருந்தாலும் அதனுடைய பலனின் மீது ஆவல் ஏற்படாமல் எப்படி போகும். அப்படி ஆவல் இல்லாது இருந்தால் அது மனித சுபாவத்திற்கு மாறுபட்டதாகவே அமையும். நாம் பாடுபட்டு திட்டமிட்டு அறிவாலும், மனதாலும், சரீரத்தாலும் உழைத்து அதனால் கிடைக்கின்ற வெற்றி, தோல்விகளினால் தாக்கப்படாமல் இருக்கமுடியுமா அப்படித்தான் இருக்கவேண்டுமென்று கீதாச்சாரியன் கூறுகிறான். கடமையைச்செய் ஆனால் அதன் பலனில் பற்று வைக்காதே என்பதே பகவானின் உபதேசமாகும். பலனை விரும்பாதபோது செய்கின்ற செயல் நிஷ்காமிய கர்மமே ஆகும். பகவத்கீதை முழுவதும் இந்த நிஷ்காமிய கர்மமே மீண்டும், மீண்டும் கூறப்பட்டு வலியுறுத்தப்படுகிறது காமிய என்பது காமம் என்ற சொல்லை அடியொற்றி வந்ததாகும். நிஷ் என்ற வார்த்தை எதிர்மறை பொருளை சுட்டும் சொல்லாகும். எனவே நிஷ்காமிய கர்மம் என்பதை பலன் கருதாத செயல் என்றே கருத வேண்டும்.

போர் முனைக்கு வந்துவிட்டு எதிரிகளைப் பற்றி கவலைபட்டு கொண்டு இருப்பது விவேகமற்ற செயலாகும். போர் புரிதலையும் எதிரிகளை அழிப்பதையும் தனது கடமையாகச் செய்து முடிக்க வேண்டுமே தவிர அதனுடைய விளைவுகளைப் பற்றி கவலை படக்கூடாது சமைக்க வந்தவன் சமையல் செய்வதை விட்டுவிட்டு உணவை சுவையாக சமைக்க முடியுமா உண்பவர்கள் வயிற்றில் அது ஒழுங்காக செரிமானம் ஆகுமா என்றெல்லாம் யோசிப்பது எத்தகைய அறியாமையோ கடமையை தள்ளி வைக்கும் சோம்பலோ அதே போன்றாதாகும் அர்ச்சுணனின் நிலையும்.

அதனால்தான் ஸ்ரீ கிருஷ்ணன் உன்னுடைய உரிமை செய்யும் வேலை மட்டுமே வேலையின் முடிவும் பயனும் உனக்கு உரிமையில்லாதது பயன்மீது மனதைச்செலுத்தி எந்த காரியத்தையும் செய்யாதே இப்படி சொல்கிறேன் என்பதற்காக எதையும் செய்யாமலும் இருக்காதே அது பலன் கருதி செயல்படுவதை விட மிகக் கொடியதான செயலாகும். பற்று வைத்துக் கொள்ளாமல் பகை, நட்பு என்று பாராமல் செய்வதை செய் அது வெற்றி அடைந்தாலும், தோல்வியை சந்தித்தாலும் இரண்டையும் சமமாக கருதி கொள். இந்த சமநிலையே துன்பத்தை தூக்கி வீசும் மாபெரும் யோக நிலை என்று கண்ணன் சொல்கிறார்.

கீதை யோகம், துறவு, சந்நியாசம், தியாகம், வேள்வி ஆகிய வார்த்தைகளெல்லாம்

18-அத்தியாயங்களிலும் பல இடங்களில் உபயோகிக்கப்படுகிறது. மேலோட்டமாக கீதையை படிப்பவர்கள் இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனித்தனிப் பொருளில் வழங்கப்படுவதாக எண்ணுவார்கள் உண்மையில் இந்த வார்த்தைகள் கீதையை பொறுத்தவரை ஒரே அர்த்தத்தில் தான் சொல்லப்படுகிறது. துறவு சந்நியாசம் என்றவுடன் தாடியும், சடைமுடியும் வளர்த்துக்கொண்டு வனாந்தரங்களுக்குள் சென்று மனித சஞ்சாரம் அற்று வாழ்வது அல்ல அதாவது துறவு என்பது வாழ்க்கையை துறப்பது அல்ல உண்மையில் வாழ்வைத்துறக்கக்கூடாது என்பதற்காக உருவானதே கீதை ஆகும். இதில் எது உண்மையான துறவு என்பதை கீதை தெளிவாகக் கூறுகிறது. செய்யும் செயல்களில் ஏற்படும் பலனில் பற்று வைப்பதை துறப்பதே உண்மையான துறவு ஆகும். அதுதான் சந்நியாசமும் தியாகமும் ஆகும். ஆசை என்னும் விஷச்செடிகளை ஞானமாகிய அக்கினியில் போடுவதே யாகம் ஆகும். வேதங்களில் சொல்லப்படும் வேள்விகளுக்கும் இதுவே உண்மையான அர்த்தமாகும். மிருகங்களை நெருப்பிலே பலியிடுவது என்பது யாகம் என்று கொள்ளாமல் ஆசையாகிய விலங்குகளை ஞானஅக்னியில் போட்டு எரிப்பதே கீதை சொல்லும் யாகம் எனப்படும். அதாவது பற்றுகளை அறுக்கவேண்டும். எரிக்க வேண்டும் அழித்து ஒழிக்க வேண்டும் என்பதே கீதையின் சாரம் ஆகும் இதில் ஒரு சிக்கல் வருகிறது செயலால் ஏற்படும் பலன்கள் மீது பற்று வைக்கக்கூடாது என்கின்ற போது மனிதர்கள் எவருக்கும் செயல்படவே தோன்றாது சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விடுவார்கள் அப்படியும் செயல்படாமல் சோம்பி கிடக்க கூடாது என்று கீதை இடித்துரைக்கிறது அதனால் தான் கீதாசரியன் செயல் மீது பற்றுதல் கொள்ளக்கூடாது என்று சொன்னேன் என்பதற்காக செயலே இல்லாமல் இருந்துவிடாதே என்று உடனே சொல்கிறார்.

கேள்வி: நாம் செய்கின்ற செயலில் விளைவுகள் மீது உரிமை பாராட்டவோ உணர்வு பூர்வமான நேசம் கொள்ளவோ கூடாது என்று கீதை சொல்வது மிகவும் கடினமான கட்டளையாகவே உள்ளது. இந்த கட்டளையை எந்த மனிதனும் நிச்சயமாக பின்பற்ற முடியாது என்பதே உண்மையாகும் இப்படி நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத கட்டளையை இறைவனான கண்ணபெருமான் கூறுவதில் ஏதேனும் உள்ளர்த்தம் கண்டிப்பாக இருந்தே தீரும் அது என்ன வென்று சாதாரண அறிவுக்கு புலப்படவில்லை அதை உங்களை போன்ற சமநோக்குடைய மனநிலை பெற்றவர்களால்தான் உணர்ந்து கூற முடியும் அதை தயவு செய்து நான் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குங்கள்?

குருஜி: உண்மையில் பலன் கருதா செயலை மட்டுமே மனிதர்கள் செய்ய வேண்டும் என்று இறைவன் கூறுவதை உன்னிப்பாக உள்முகமாக ஆராய வேண்டும். பலனே எதிர்பார்க்க கூடாது எனும்போது அதனால் நமக்கு தனிப்பட்டரீதியில் என்ன பயன் என்று குறுகிய பார்வையில் அதாவது சுயநல எண்ணத்தில் செயல்படக்கூடாது என்று கண்ணன் கூறுவதாகவே நாம் கருதவேண்டும் நமது செயல்களினால் பிற ஜனங்களுக்கோ சமுதாயத்திற்கோ ஏற்படகூடிய பலாபலன்களை கூட கருதலாகாது என்பது நிச்சயமாக கண்ணனின் கருத்தாக இருக்காது. இதை இன்னும் ஆழமாகச்சிந்திக்க வேண்டும். நாம் நமது நலத்தைவிட நமது சந்தோஷத்தை விட நமது வளர்ச்சியைவிட சமுதாயத்தின் நலத்தையும், சந்தோஷத்தையும், வளர்ச்சியையுமே முக்கியமானதாகக் கருதி செயல்படவேண்டு மென்பதே கீதாவாசகத்தின் உண்மைப் பொருளாகும். இதுதான் உண்மையான அர்த்தம் என்பதற்கு பகவத்கீதையிலேயே பல ஆதாரங்கள் உள்ளன. சுயநலக் கருத்தும், சுய நலப்பற்றும் அறவே துறந்து கடமைகளைச்செய்து கொண்டு போவது அவசியம் ஆகும். அறிஞன் என்பவன் சமுதாய நன்மைக்காக பற்றை ஒழித்து எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டு போவான் என்று கீதையில் கிருஷ்ணன் கூறுவதே மிகப்பெரிய ஆதாரமாகும்.

 கேள்வி: இதுவரை பற்றுகளை ஒழிக்க வேண்டும் பாசக் கயிறுகளை அறுக்க வேண்டும் சுயநல விலங்குகளை உடைக்க வேண்டும் என்றெல்லாம் கீதாச்சாரியன் கூறுவதை நன்றாக விளக்கினீர்கள் ஆனால் ஆசைகளை ஒழிக்க பகவான் என்ன உபாயம் கூறினான் என்பதை நீங்கள் கூறவில்லை என்று நான் எண்ணுகிறேன். அப்படி நீங்கள் கூறி இருந்தால் அதைப்புரிந்துகொள்ள நான் தவறிவிட்டேன் என்றும் கருதலாம் எனவே சிரமம் பாராது எனக்காக அந்த உபாயத்தை மீண்டும் ஒருமுறை கூறுங்கள்?

குருஜி: இந்த கேள்விக்கான பதிலை நான் முன்பே கூறினேனா இல்லையா என்பது எனக்கும் நினைவில்லை. நினைவுகள் தவறிவிடுவதினால் உண்மைகள் மாறப்போவது கிடையாது. உண்மைகளை பலமுறை கூறினாலும் சொல்பவனுக்கோ, கேட்பவனுக்கோ சலிப்பு என்பது ஏற்படவும் செய்யாது. ஆசைகள் தான் துயரங்களுக்கு காரணம் ஆசைகளை வெல்வதே துக்கத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி என்று கீதையில் சொல்லப்பட்டதை பல உதாரணங்களோடு விளக்கி பார்த்ததோடு அல்லாமல் சுயநலப்பற்றை ஒழித்து பொதுநலத்தை பிரதானப்படுத்தி செயல்களை செய்யவேண்டும் என்பதையும் பார்த்தோம் நிலையற்ற பலன்களின் மீது கொள்ளுகின்ற பற்றை நீக்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் இன்னும் ஒரு உபாயத்தை கூறி இருக்கிறார் அதை தெரிந்து கொண்டால் உணர்ந்து கொண்டால் உனது கேள்விக்கான பதிலை எளிமையாக உணரலாம் என்பதோடு அல்லாமல் துயரம் அனைத்திலிருந்தும் விடுபட்டு விடலாம் என்பதற்கு நான் உறுதி கூற முடியும். இந்த உபதேசத்தில்தான் கீதையின் சிகரமே இருக்கிறது. இந்த சிகரம் நாம் கண்களால் காணுகின்ற மலைச்சிகரங்களை விட உயரமானது பூமியில் ஒருபுழுவாக கிடந்துநெளியும் துயரர ஆத்மாக்களை ஒரே மூச்சில் தூக்கி இறைவனின் இருப்பிடமான வைகுண்டத்தில் இந்தச் சிகரம் நம்மை கொண்டுபோய் சேர்த்து விடும்.

செயல்களின் பலன்களின் மீது பற்று கூடாது பற்று வைக்காதே அது உன்னை அழித்துவிடும் என்று ஆயிரம் ஆயிரம் முறை கட்டாயப்படுத்தினாலும் சுயநலத்தை மறந்து பொதுநலத்திற்காக செயல்படு என்று வற்புறுத்தினாலும் அவையெல்லாம் கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவையாக சுகமாக இருக்குமே யல்லது நடைமுறைக்கு உகந்ததாக வரவேவராது காரணம் பற்றில்லாமல் செயல்படுவது என்பது மனித சுபாவம் ஆகாது எனவே தான் இதை நன்கு உணர்ந்த கீதாசிரியன் பொருள் மீது இருக்கின்ற பற்றையும் செயல் மீது இருக்கின்ற பற்றையும் தன் மீது வைக்கச் சொல்லி வேண்டுகிறான். செய்யும் செயல்களின் அனைத்து பலன்களையும் அது தோல்வியாக இருந்தாலும், வெற்றியாக இருந்தாலும், மங்கலமாக இருந்தாலும் அமங்கலமாக இருந்தாலும் அவை அனைத்தையும் தனக்கே அர்ப்பணம் செய்ய சொல்லுகிறான். நமது செயல்கள் அனைத்தையும் ஈஸ்வரனுக்காக அர்ப்பணம் செய்யும்போது அல்லது ஈஸ்வரனுக்காக செயலைச்செய்கின்றபோது செயல்களின் விலங்குகள் நம்மை கைது செய்யாது அதாவது அந்தச்செயல்களினால் வரும் வெற்றி. தோல்விகள் நம்மை தீண்டாமல் விலகி நின்று தற்காலிகமான சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ நம்மை ஆட்படுத்தாது. அதாவது நிர்வாகி ஒருவனுக்காக செயல்படும்போது அந்த நிர்வாகத்தில் ஏற்படும் வளர்ச்சியும், வீழ்ச்சியும் தொழிலாளியின் மனோபாவத்தின் கர்வத்தையோ, அகர்வத்தையே ஏற்படுத்தாது தனக்கென்று செயலாற்றும்போதுதான் வெற்றியும், தோல்வியும் நம்மைப்பந்தப்படுத்தி உயர்த்துகிறது அல்லது தாழ்த்துகிறது. இது மட்டுமல்ல எனக்காக ஒரு காரியத்தை நான் செய்யாமல் வேறுறொருவனுக்காக அதைச் செய்யும் போது அதனால் ஏற்படும் பாவபுண்ணியங்களுக்கு என் ஆத்மா உடன்படுவது இல்லை. சாதாரண மனிதர்களுக்காக செய்கின்ற செயலே நம்மை பந்தப்படுத்தாது எனும் போது பகவனுக்காக நாம் செயல்படும்போது அதனால் பந்தம் ஏற்பட்டால் கூட அது என் ஆத்மாவை பிறவிப் பெருங்கடலிருந்து கரையேற்றுமே அல்லது ஆழமான கடலுக்குள் தள்ளி என்னை அல்லல் பட செய்விக்காது கீதையில் பகவானால் சொல்லப்பட்ட இதே கருத்துதான் பற்றற்றவனாகிய இறைவனிடத்தில் பற்று கொள்க ஏனைய பற்றுகளை விடுவதற்கு அப்பற்றை பற்றுக என்று திருக்குறளும் கூறுகிறது. இதை விட சுலபமான முக்தி மார்க்கம் வேறு எதுவும் கிடையாது. கண்ணனின் திருவடிகளை தியானிப்பது என்பது எல்லா செயல்களையும் கிருஷ்ணார்பணமாக செய்வதே ஆகும்.

– யோகி ஸ்ரீராமானந்த குரு
Leave a Reply