Search
Cuckoo-isai-fi

குக்கூ – இசை வெளியீட்டு விழா

Cuckoo

பாலுமகேந்திராவின் குரலுடன் குக்கூ இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அந்த மகா கலைஞருக்கான மரியாதையை வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று செலுத்தினர்.

“முருகா..
உன் கனவுகள் நனவாக
என்றுமிருப்பேன் துணையாக”

என விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சிம்பிளாகத் தொடங்கி வைத்தார். குக்கூ பட இயக்குநர் ராஜூமுருகனின் முதல் குரு இவர். கண்ணன் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான், ‘தன்னால் முடியுமா?’ என சந்தேகித்த ராஜூமுருகனை ‘வட்டியும் முதலும்’ எழுதவைத்தது.

ராஜூமுருகனின் இரண்டாவது குரு, சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்த லிங்குசாமி. தன்னை பேட்டியெடுக்க வந்த ராஜூமுருகனை லிங்குசாமியே விரும்பி , ‘என்னிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்த்து கொள்கிறாயா?” எனக் கேட்டுள்ளார். “ஆனால் இவன் என்னைப் போன்ற இயக்குநர் இல்லை. பாலா, சேரன், ‘அழகி’ படம் எடுத்த பொழுதிருந்த தங்கர் பச்சான் போல ஒரு இயக்குநர்” என்றார்.

“இரண்டு கருத்த இளைஞர்கள், காவேரி பொய்த்து விவசாயம் பண்ணமுடியாதுன்னு பிழைக்க சென்னை வந்தாங்க. கையிலிருந்த பணமெல்லாம் காலியானவுடன் ஊருக்குத் திரும்பிடலாம்னு நினைச்சாங்க. அப்போ ஒரு மகத்தான கலைஞனின் பிறந்தநாள்விழா பேச்சுப்போட்டி நடந்தது. முதல்பரிசு அஞ்சாயிரம். அந்தப் பரிசு கிடைச்சா சென்னையிலேயே இருக்கலாம் இல்லைன்னா ஊருக்குதான் போகணும்னு கலந்துகிட்டாங்க. முதல்பரிசு கிடைச்சது. அந்தப் பணத்தில் ஒரு அறை எடுத்துத் தங்கி, நிறைய புத்தகங்கள் வாங்கினோம்.

Cuckooஅந்த இருவர் நானும் என் நண்பன் சரவணனும். அறையில் எங்களுடன் வந்து தங்கி அந்தப் புத்தகங்களை எல்லாம் படிச்சவர் சரவணனின் தம்பி ராஜூமுருகன். எல்லாப் புத்தகங்களையும் படிச்சுட்டு அப்பவே, ‘எதையாவது செய்யணும்னா.. நீங்கதான் உதவிச் செய்யணும்ணா’ எனச் சொல்வார். இந்த அண்ணனை நம்பாத, ஆனந்த விகடன் கண்ணனை நம்பு என நான்தான் அவரை அறிமுகம் செய்துவச்சேன். லிங்குசாமியையும் நான்தான் அறிமுகம் செஞ்சுவச்சேன். எங்களுக்குக் கிடைச்ச அஞ்சாயிரம், இந்த மேடையை அவருக்கு வழங்கியிருக்கு. நீங்கதரும் ஆதரவு இன்னும் பல ராஜூமுருகன்களை உருவாக்கும்” எனச் சொன்னார் படத்தின் பாடலாசிரியர் யுகபாரதி.

“எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டுவரும் மனிதர்களை.. ராஜூமுருகன் திரையில் கொண்டுவர வேண்டும். இப்பொழுது பார்த்த முன்னோட்டத்திலும் அத்தகைய எளிய மனிதர்களை நடமாடவிட்டுள்ளார் என்பது பார்த்தாலே தெரிகிறது” என்றார் வண்ணதாசன்.

Cuckoo Dineshபார்வையற்றவர்களின் காதல் கதைதான் குக்கூ. சந்தோஷ்நாராயணின் இசையும், P.K.வர்மாவின் ஒளிப்பதிவும் இணைந்து திரையில் மாயம் செய்கிறது. அட்டக்கத்தி தினேஷூம், புதுமுக நடிகை மாளவிகாவும் கலக்கியுள்ளனர். பார்வையற்றவர்களுடன் மூன்று மாதம் பழகி அவர்களை தன் நடிப்பில் பிரதிபலித்துள்ளார் தினேஷ். இப்படத்தில் அவரது நடிப்பு காலாகாலத்திற்கும் பேசப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. “சில படங்களில் கமர்ஷியலாக நாங்க வெற்றி பெற்றிருந்தாலும்..” என இழுத்து நடிகர் சூர்யா இருமுறை ‘குக்கூ’ டீமிற்கு மேடையில் தலைவணங்கினார். சேரனும், “பாலு மகேந்திராவின் இழப்பால் ஐந்து நாட்களாக இருந்த வலி, இப்பதான் சரியாச்சு” என்றார்.

நிறைவுரை வழங்கிய கமல், “சூர்யா செயலால் செய்ததைதான் நான் சொல்லால் செய்கிறேன்” என முடித்தார்.