kutti puli

குட்டிப் புலி விமர்சனம்

kutti puli
சுந்தர பாண்டியன் குட்டிப் புலியாக உருமாறியுள்ளார். காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, இளித்த முகத்துடன் நாயகியை சந்துக்குள்ளே பார்ப்பதில் இருந்து வெளிவரும் எண்ணமே இல்லை போலும்.
குட்டிப் புலி என்பவன் ஊரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வம்பிழுத்து, உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் ஊர் சுற்றும் சண்டியர். அவனுக்கு கல்யாணம் செய்து பார்க்க நினைக்கிறார் அவனது பாசக்கார தாய். தாயின் எண்ணம் ஈடேறியதா என்பது தான் கதை.
தொடக்கத்தில் நண்பனுக்கு ஒன்றெனில் முதல் ஆளாக வருவார் சசிகுமார். பின் காதலிப்பவர்களுக்கு ஒன்றெனில் வந்தார். பிறகு தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்பவராக இருந்தார். இப்பொழுது தன் தெருவில் வசிப்பவர்களுக்காக எதையும் செய்பவராக மீசையை முறுக்கிக் கொண்டே இருக்கார். ராஜ் கிரணுக்கு சவால் விடும் வகையில் தொடை தெரிய லுங்கி கட்டியவாறு படம் நெடுகிலும் வருகிறார்.
படத்தின் ஒரு காட்சியில், “புலியாட்டம் பார்த்ததில்லையே!!” என சிலம்பு சுற்றுகிறார் சசிகுமார். அவருக்கு முன் பள்ளி மாணவன் ஒருவன், சசிகுமாரை விட சிறப்பாகவும் அநாயாசமாகவும் சிலம்பு சுற்றுகிறான். அந்த மாணவனின் சிலம்பாட்டத்தின் முன் நாயகனின் ஹீரோயிசம் பல்லிளிக்கிறது. இருந்தும் விடாப்பிடியாக சண்டையிட்டு, ஜெயித்து, பகை தேடிக் கொள்கிறார். “வயித்துல பிறந்தவன் இல்லைடா; வைராக்கியத்துக்கு பிறந்தவன்” என வசனம் பேசி படம் பார்ப்பவர்கள் முகத்திலேயே குத்துகிறார் சசிகுமார். 
சுந்தர பாண்டியனில் கண் சாடையாலும் முக பாவனையாலும் நடித்த லட்சுமி மேனனை, நாயகன் பின்னால் சுற்றும் நாயகியாக அலைய விட்டிருக்கின்றனர். சுமார் பத்து வருடங்களாக நாயகனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கிவிட்டார். ஆனால் இன்னும் பாசத்தை வாரி வழங்கி இழுத்துப் பேசும் அம்மாவாகவே நடிக்கிறார். அவருக்கு அலுக்குகிறதோ இல்லையோ பார்ப்பவர்களுக்கு சலிப்பேற்படுவது உறுதி. சரண்யாவிற்கு கொலைவெறியை ஊட்டும் பக்கத்து வீட்டம்மாளாக ரமா பிரபா நடித்துள்ளார்.
நாயகனின் நண்பனாக வரும் முருகதாஸ், எப்பொழுதும் போல் தன் சந்துப் பல்லாலும், இயல்பான நடிப்பாலும் கவருகிறார். “என் மொகத்தை எல்லாம் காதலிப்பாங்களா?” என சந்தேகமாகக் கேட்கிறார். அதற்கான விடையை ரசிகர்களுக்கு சொல்லும் வகையில், முருகதாஸைக் காதலிக்கும் பெண்ணின் தாயை தீக்குளிக்க வைத்து விடுகிறார் இயக்குநர். என்னக் கொடுமை இது? காதலிக்கும் உரிமை சுந்தர பாண்டியனுக்கும், குட்டிப் புலிக்கும் மட்டுமே உரியதா என்ன!? 
30 வருடங்களுக்கு முன் வந்த தமிழ்ப்பட பாடல்களே பின்னணி இசையில் பெரும்பாலான இடங்களை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. ‘வாகை சூடவா’ படத்திற்காக தான் மீண்டும் நினைவுகூரப் படுவார் எம்.கிப்ரான். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, படம் முடிந்ததும், சொல்ல வந்த கருத்தினை திரையில் எழுத்துகளாகப் போடுகின்றனர். 
“பெண்மையே வீரம்!!”
இதை தான் படம் முழுவதும், கிடைத்த கேப்பில் எல்லாம் சொல்கிறார் சசிகுமார். இன்னும் சொல்லப் போனால், லட்சுமி மேனன் மயங்கியதே சசிகுமார் பேசும் இத்தகைய வசனங்களால் தான். கருத்தினை ஆழ பதிய வைக்கும் முயற்சியாக இருக்கும் போல! வன்முறையை ஹீரோயிசமாகக் காட்டுவது போய், வழிபாட்டுக்குரிய தியாக செயலாகவே சித்தரித்துள்ளனர். படத்தின் முதல் பாதியை போல் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கவில்லை. படத்தின் இயக்குநரான முத்தையா.. திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய பூபதி பாண்டியனின் அசிஸ்டென்ட்.

Comments

comments




Leave a Reply

Your email address will not be published.