Search
Kumki

கும்கி விமர்சனம்

Kumki

மைனாவின் எச்சமாக.. மலைக்காட்டுக்குள் மீண்டுமொரு காதல் கதை.

நாயகியை கண்ட முதல் பார்வையிலேயே காதலில் விழும் மாறுபடாத பாத்திரத்தில் விக்ரம் பிரபு. நடிகர் பிரபுவின் மகன். மாணிக்கம் என்னும் யானையை வளர்த்து வரும் பாகன் கொம்பனாக நடித்துள்ளார். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், அனைத்தையும் இழந்த பின் தனது காதலை சுயநலமென உணருகிறான். படத்தின் நாயகன் யானை என்பதால், விக்ரம் பிரபுவிற்கு ஹீரோயிசத்திற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஆனால் மாறுபட்ட படத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் அறிமுகத்தினை அவரது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

நாயகி அல்லியாக லட்சுமி மேனன். காட்டு யானையைப் பார்த்து மிரள்வது, பின்கும்கி யானையின் துதிக்கையைத் தொடும் பொழுதெழும் கூச்சத்தை நாக்கைத் துழத்தியவாறு வெளிப்படுத்துவது, வாஞ்சையுடன் யானைக்கு பழங்கள் அளிப்பது,ரேஞ்சரைப் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாவது என நடிப்பில் அசத்துகிறார்.நியாயமாக இந்தப் படத்தில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டியவர்.ஆனால் சுந்தரபாண்டியன் முந்திக்கொண்டது. நாயகியின் தந்தையாக வருபவர் அருமையாக நடித்துள்ளார்.

மாணிக்கம் என்ற பெயருடைய யானை தான் நாயகன். தடுமாறி விழப் போகும் நாயகியை தமிழ் சினிமா ஹீரோ போல, துதிக்கையால் லட்சுமி மேனனின் இடுப்பை சுற்றிப் பிடித்துக் கொள்கிறது. பாசமிகு உயிராய் படம் நெடுக்க வருகிறது; சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, பாகனுக்கு ஒன்றெனில் வெகுண்டுஎழுகிறது. இதே போன்ற நாயக குணங்கள் கொண்ட ஓர் உயிர் ஒன்று சமீபத்தில் தான்திரைக்கு வந்து வாகை சூடியது. ஆனால் அது சின்னஞ்சிறிய ஆறறிவு ‘ஈ’; இப்படத்தில் சிறு குன்று போல் பெரிதாக இருக்கும் ஐந்தறிவு யானை. இதுபொருந்தா ஒப்புமை என்றாலும், நாயகத்தன்மை என்பது அன்பிற்காக செய்யப்படும் சாகசம் அல்லது வன்முறை என புலப்படுகிறது. மைனா படத்திலும் இத்தகைய நாயகத்தன்மையை உணர முடியும்.

வெற்றியைத் தக்க வைப்பது என்பது மிகவும் சவாலான விடயம். இயக்குனர் பிரபுசாலமன் அந்த சவாலை சரியாக எதிர் கொண்டுள்ளார். படம் தரும் அற்புதமான தாக்கத்திற்கு ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் உதவியுள்ளார். யானையின் கம்பீரத்தையும், காடுகளின் வனப்பையும், அருவியின் நீள அகலத்தையும் பிரமாதமாக காட்சிப்படுத்தியுள்ளார். ‘அய்யய்யோ ஆனந்தமே..’, ‘சொய்..சொய்..’  என இமானின் இசையில் பாடல்களும், பின்னணி ஒலிப்பதிவும் படத்தோடு பொருந்திக் கொள்கிறது. இந்தப் படத்தில் வில்லன் என யாருமில்லை. ரேஞ்சராக வரும் அதிகாரியின் சபலத்தையும், அலட்சியத்தையும் காட்டினாலும் அவரை வில்லனாக சித்தரிக்காதது ஆறுதலான சங்கதி. வேரோடு முறிந்துக் கிடக்கும் மிகபெரிய மரம் ஒன்றினைக் காட்டி.. கருப்பன் என்னும் காட்டு யானையின் வருகையையும், அதன் பலத்தையும் உணர்த்தும் காட்சி எதிர்பார்ப்பினை அதிகப்படுத்துகிறது. இரண்டு யானைகள் மோதும் காட்சியில் க்ராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை சாமர்த்தியமாக இரவு நேர காட்சியாக வைத்து,உறுத்தாமல் ஒப்பேத்தியுள்ளார். ஆனால் தம்பி ராமைய்யாவின் தலையில் உள்ள’விக்’ தான் படம் நெடுக்க உறுத்துவது போலுள்ளது. ஆதி காடு என்னும் அந்தக் கிராமத்தின், மலைவாழ் மக்கள் அனைவரையும் கச்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர்.

கும்கி அன்பிற்கும் உண்டோ காலை இறுக்கும் சங்கிலி!?

 
Leave a Reply