Search
Goli-Soda-fi

கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா விமர்சனம் - Goli Soda review

இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன்.

மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை.

புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, பெளத்த மடாலயத்தில் வந்து அமரும் புறாவொன்றினால் ஞானதோயம் பெறுகிறான். நால்வருக்கும் இருத்தலைவிட அடையாளத்தை(!?) மீட்டெடுப்பது முக்கியமாகப்படுகிறது (பசங்களுக்கு தாங்கள் ‘மெஸ்’ நடத்துவதால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வே போராட வைக்கிறது. மெஸ் அவர்களது அடையாளமன்று).

எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் படமியக்கியுள்ளார் விஜய் மில்டன். கதாபாத்திரத் தேர்விலும் திரைக்கதையிலும் அதீத கவனம் செலுத்தியுள்ளார். முன்பே பார்த்துப் பழகியது போன்ற காட்சிகள் என்ற சலிப்பை இம்மியளவும் ஏற்படாவண்ணம் துல்லியமாக காட்சிகளைத் திட்டமிட்டுள்ளார். ஒளிப்பதிவு அவரது ஏரியா. சொல்லவும் வேண்டுமா? பாண்டிராஜும் தன்பங்கிற்கு வசனங்களால் ஈர்க்கிறார். முக்கியமாக இமான் அண்ணாச்சி போதையில் காவல்துறையினரிடம் நியாயம் கேட்கும் காட்சியைச் சொல்லவேண்டும். ஒருவழியாக இமான் அண்ணாச்சிக்கு சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் முதன்முறையாக இத்திரைப்படத்தில்தான் கிடைத்துள்ளது. ஏன் சொல்லப்போனால் பவர்ஸ்டார் கூட தன்னை தானே கேலிக்குள்ளாக்கிக் கொள்ளாமல் சிறப்பான கெளரவத் தோற்றத்தில் ஆடிப் பாடி அசத்துகிறார். அவரைவிட அவரது போஸ்டர் கதையில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் கொடுப்பினை கூட இன்றி, வழக்கம்போல் சாம் ஆண்டர்சனின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்தில் ஏன் பவர் ஸ்டாரும் சாம் ஆண்டர்சனும்!?

ATM ஆச்சியாக சுஜாதா, நாயுடுவாக மதுசூதணன், மயிலாக விஜய் முருகனும் கச்சிதமாக நடித்துள்ளனர். கதையின் போக்கிற்கு வலுவூட்டுகின்றனர். படத்தின் நாயகியான ஏ.டி.எம். சீதாவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமா நாயகிக்குரிய இலக்கணங்களை அநாயாசமாகப் போட்டு உடைத்து, ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார் விஜய் மில்டன். ஆனால் என்ன செய்து என்ன புண்ணியம்? பதின்ம வயது பாலீர்ப்புகளை மீண்டுமொருமுறை மிக அழுத்தமாக காவியக் காதலாகச் சித்தரித்து, அவர் விதைத்ததில் அவரே வெந்நீரும் ஊற்றியுள்ளார். எனினும் முடிவில் ஒரு நிறைவை அளித்துவிடுகிறார் விஜய் மில்டன்.