Search
sattampillai

சட்டாம்பிள்ளை

“ச்சே.. எத்தன தடவ சொன்னாலும் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.”

வெள்ளைச் சட்டையை நீலமாக்கி விடுவதால் உடன் படிக்கும் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேருகிறது.

கான்வென்ட்ல படிக்கிற தொர வர்றான் பாருங்கடா.’

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை கான்வென்ட்ல படிக்கிற பசங்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள். குண்டு அடிப்பது, வயலில் நண்டு பிடிப்பது, ஆலமர விழுதுகளில் தலைக்கீழாக தொங்குவது, பள்ளிக்கு வரும் வழியில் இருக்கும் மாந்தோப்பில் திருட்டு மாங்காய்களை பறிப்பது போன்ற வேலைகளில் கான்வென்ட் மாணவர்களுக்கு நிபுனுத்துவம் போதாது. அப்படிப்பட்டவர்களுடன் தன்னை ஒப்பிடுவது ஞானசம்பந்தனுக்கு எரிச்சலாக இருந்தது.. இதற்காகவே மாந்தோப்பில் இருந்து மற்றவர்களை விட  நிறைய மாங்காய்களை பறித்துக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பான். எப்படி குட்டிக் கரனம் அடித்தாலும் ‘கான்வென்ட் தொர’ என்ற பெயர் மற்றும் மறையவே இல்லை.

போததற்கு தமிழ் ஐயா வேறு நேற்று முன் தினம் மானத்தை வாங்கி விட்டார்.

ஞானத்துக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லை. யாருடா உனக்கு இந்த பெயர வச்சா?‘ என்று அவர் சிரித்ததும் வகுப்பே சிரித்தது.

அம்மாவால் மீண்டும் மற்றொரு பிரச்சனை. அம்மா தான் அவங்க அப்பா பெயரை இவனுக்கு வைத்திருந்தார்கள். ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுதே எத்தனை அவமானங்களை தான் பொறுப்பது. ஞான சம்பந்தனுக்கு மற்றும் தன்னுடைய பெயரை மாற்றம் உரிமையிருந்திருந்தால் போலீஸ் ரவி என்றோ போக்கிரி தமிழ் என்றோ வைத்திருப்பான்.

இப்படியாக அவனுக்குள் ஒரு கனல் எரிந்துக் கொண்டிருந்தது. இது தெரியாமல் நமது ஞானத்திடம் ஒருநாள் தனியாக மாட்டிக் கொண்டான் கட்ட கனேஷ். சிக்கிக் கொண்ட மானை புலி விடுமா? அதே போல் தான் சிக்கிக் கொண்டான் கட்ட. கட்டயை ஞானம் வெளுத்துக் கொண்டிருக்கும் பொழுது.. வகுப்பிலே உயரமான மாணவனான ஏழுமலை பின்னாலிருந்து ஞானத்தை விலக்கப் பார்த்தான். நெட்ட ஏழுமலை எனத் தெரியாமல், கோபமாக திரும்பி வேகமாக தள்ளி விட.. ஏழுமலை வாத்தியாரின் நாற்காலி அடியில் குடை சாய்ந்தான். வகுப்பு நிசப்தத்தில் முழுகியது. தடுமாறி எழுந்த ஏழுமலையின் கண்ணில் பயத்தைப் பார்த்து விட்டான் ஞானம்.

பண்ணிங்க தான் ஓரே மாதிரி வரும்.. சிங்கம் தனியா தான் தெரியும்” என தனது நீலமேறிய வெள்ளைச் சட்டையின் கழுத்துப் பட்டையை ஒருமுறை இழுத்து விட்டுக் கொண்டான்.

பிறகு வகுப்பில் எல்லாம் மாறியது. ஞானத்திடம் எவரும் நேரடியாக பேசமாட்டார்கள். ஞானமும் எவரிடமும் பேச மாட்டான். அதற்கென்றே முத்து ஞானத்தின் நிழல் ஆனான். ஞானத்தின் கொ.ப.செ.வாக மாறி விட்டிருந்தான் முத்து.

முத்துவை நாடு பிடிக்கும் ஆட்டம் விளையாடும் பொழுது ஆறாவது படிக்கும் ‘ட்ரில் மாஸ்டர்‘ மகன் தனகோபால் அடித்து விட்டான். காட்டுத் தீ என பரவிய செய்தி ஞானசம்பந்தனை சுட்டது. அதன் விளைவு மைதானம் ஓரம் மிதிவண்டிகள் நிறுத்தப்பட்ட இடத்தில் தனகோபால் ஞானத்திடம் தர்ம அடி வாங்கினான்.

ஆறை ஐந்து வென்றால்? அதுவும் ட்ரில் மாஸ்டரின் மகன் உதைப்பட்டான் என்றால் கேட்கவா வேண்டும். அந்த அபூர்வ ஐந்தின் புகழ் பள்ளியெங்கும் பரவியது. பன்னிரெண்டாம் வகுப்பு பரந்தாமன் தனது கொ.ப.செ. போஸ் மூலம் ஞானசம்பந்தனுக்கு தூது அனுப்பினான். அதன் விளைவாக அந்த பள்ளி வரலாற்றிலே முதன் முறையாக ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் மைதானம் நடுவில் இருக்கும் ஆலமர சிமென்ட் மேடையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பேற்றினை பெற்றான்.

ஆசிரியர்களின் அதிகார போக்கென கண்டித்து, ஆங்காங்கே ஆசிரியர்கள் ஓரிருவர் மாணவர்களை அடிப்பதை  ஊடகத்தில் கிழித்துக் கொண்டிருந்தனர். எங்கே தாம் ஞானசம்பந்தனை அடித்தால் அதுவும் பிரச்சனை ஆகி விடுமோ என பயந்து, தனது மகனை மேலும் சாத்து சாத்தி விட்டு மனசை ஆற்றிக் கொண்டார். அதுவும் ஞானசம்பந்தன் வீட்டுக்கு போகும் வழியில் மூன்று கிணறு வேறு இருந்தது.

இரண்டே நாளில் தந்தை மகன் இருவரும் அவ்விஷயத்தை மறந்து விட்டனர். ஆனால் கான்வென்ட்டில் நான்காவது படிக்கும் தனகோபாலின் தங்கை அவ்வளவு எளிதில் மறப்பதாக இல்லை. ஞானசம்பந்தனை வழியில் மறித்து , “உன்னால தான்டா எங்க அண்ணன் எங்கப்பா கிட்ட உத வாங்கினான்” என்று அறைந்து விட்டு கீழே கிடந்த சில கணமில்லாத கட்டைகளை வேறு விட்டெறிந்தாள்.

பெண்களிடம் கை ஓங்கக் கூடாது என்னும் ஞானம் அவனுக்குள் இருந்தது.

யாருடா இவ?” என தனது கொ.ப.செ. விடம் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

முத்துவின் பதிலில் ஞானத்தின் கண்கள் ஆச்சரியத்தில் தன்னை அடித்தவளை தேடியது. முத்துவின் தோளை வாஞ்சையாக தொட்டு வேகமாக போய் கொண்டிருந்தவளை ஓரக் கண்ணில் பார்த்தான். அவன் கண்களில் காதல் வழிந்தது. தமிழ் சினிமாவின் பால்வாடி பாடம் அது. ஞானமோ அடுத்த வருடம் உயர்நிலைப் பள்ளிக்கு போகவிருக்கிறான். அதுவும் போன கோடை விடுமுறையில் நாள் முழுவதும் ‘கே டி.வி.’ யில் எத்தனை தமிழ்ப் படங்கள் பார்த்திருப்பான். அவனுக்கு தெரியாதா இப்படித் தான் காதல் ஆரம்பிக்கும் என்று. இனிமேல் ஞானத்திற்கு ‘நான் ஸ்டாப்‘ கொண்டாட்டம் தான்.

ஜங்கன்.