Search
situation-prisoners

சூழ்நிலைக் கைதிகள்

பொழுது சாய்ந்திருந்தது…அர்ச்சனாவிற்கு சுஜா ஞாபகமாகவே இருந்தது…பள்ளி விட்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது….வீட்டில் தனியாக என்ன செய்கிறாளோ என்று
யோசனையாகவே இருந்தது…பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டாள் அர்ச்சனா ..

“சுஜா குட்டி என்ன பண்றீங்க “
“வீடியோ கேம் ஆடுறேன் மம்மி “
“ஹோம் வொர்க் பண்ணீங்களா?”
“பண்ணிட்டேன் மம்மி.பசிக்குது.பிஸ்கட் தீந்துடுச்சு “
“அம்மா பேக்ல கேக் இருக்கு …சாப்பிடுங்க ..அதுக்குள்ள மம்மி டிபன் ரெடி பண்ணிடுறேன் என்ன ?”
“ஓகே மம்மி “
சப்பாத்தி குருமா தயார் செய்து முடிக்கும்போது சுந்தர் வந்தான்…
“அர்ச்சனா சாப்பாடு ரெடியா?” என கூப்பாடு போட்டான் …
“ரெடி ரெடி” என கூறிய வாறே சப்பாத்தியையும் குருமாவையும் டைனிங் டேபிளில் வைத்தாள்…
“அர்ச்சு பேசாம நம்ம ஒரு ஹுண்டாய் சான்ட்ரோ வாங்கலாமா ?”
“காரா ?இப்போ எதுக்கு ?”
“சுஜாவ டெய்லி ஸ்கூட்டர்ல உக்கார வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறது அவ்ளோ சேப்டியா எனக்கு படல இன்னைக்கு கூட ஒரு டூ வீலர் ஆக்சிடன்ட் பாத்தேன் … அதும் ஸ்கூல் விட்டு வரும் போது அவ தனியா ரோடு கிராஸ் பண்றதும் பயமா இருக்கு ” …
“சரி கார் வாங்குனா மட்டும் ஸ்கூல் விட்டு அவ தனியாத்தான வரணும் ?”
“காலையில நான் அவள ஸ்கூல்ல கார்ல விட்ருவேன் ;ஸ்கூல் முடிஞ்சதும் என் ஆபீஸ் பியூன்ட்ட சொல்லி அவள கார்ல வீட்டுல ட்ரோப் பண்ணி கார திருப்பி ஆபீஸ்ல விடச்சொல்றேன்…என்ன ஒகே வா ?”
“ஒகே தான் ஆனா ஏற்கனவே வீட்டு லோன் முடியல அதுக்குள்ளே எப்டி இன்னொரு லோன் ……?”
“நான் ஏதாவது கம்பெனில அட்வைசரா சைமல்டேனியஸா வேல பாக்லாம்னு இருக்கேன் “..
“உங்களுக்கு ஏற்கெனவே பி பி ,சுகர்னு இருக்கு ..இன்னும் எதுக்கு டென்ஷன் ?”
“அதலாம் பாத்தா முடியுமா?”
” நீங்க ஒன்னும் உங்க ஹெல்த் கண்டிஷன இன்னும் வோர்ஸ் பண்ணிக்க வேணாம்;நம்ம நைய்ட்டு சமையல் மட்டும் வெளில ஆர்டர் பண்ணிட்டோம்னா நான் ஏதாவது பிரைவேட்டு ஹாஸ்பிட்டல்ல வேல பாத்தா அரசாங்க
ஆஸ்பத்திரில இப்ப கெடைக்கறத விட மூணு மடங்கு சம்பளம் கெடைக்கும் …கார் மட்டும் இல்ல …சுஜா பியூச்சர்க்கு வேண்டியது எல்லாமே இப்போவே பிளான் பண்ணலாம் ..என்ன சொல்றீங்க ?”
“உனக்கு எதுக்கு வீண் டென்ஷன் ?”
“இதுல டென்ஷன் ஒன்னும் இல்ல ,அரசாங்க ஆஸ்பத்திரில எனக்கு அவ்ளோ ஒன்னும் வேலை பளு இல்ல …அதும் நான் வேல பாக்ர ஆஸ்பத்திரி ரொம்ப சின்னது … நானும் படிச்ச படிப்புக்கு ஜஸ்டிஸ் பண்றமாதிரி சர்ஜரி ,ஆபரேஷன் அது இதுன்னு நாலேட்ஜ் இம்ப்ரூவ் பண்லாம் “
“அப்போ சரி ”
அடுத்த வாரத்திலேயே ஒரு மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை கைனகாலஜிஸ்டாக சேர்ந்தாள் அர்ச்சனா….
அன்று மாலை ஆறு மணி அளவில் ஒரு பிரசவத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள் …அந்த மருத்துவமனையில் அவள் பார்க்கும் முதல் பிரசவம் அது …
சீப் டாக்டர் அவளை தன் கேபினுக்கு அழைத்தார்…
” மேடம் ஐ நோ யூ ஆர் பிரிட்டி குட் அட் ஹேண்ட்லிங் டெலிவரி ,ஒன் சுமால் ஆர்டர் ஐ ஹேவ் காட் பார் யூ ப்ரம் அவர் மேனஜ்மென்ட் .வி டோன்ட் என்கரேஜ் நார்மல் டெலிவரி ,வி கோ பார் ஒன்லி சிசேரியன் .கைண்ட்லி பாலோ “
எவ்வளவு பெரிய விஷயத்தை எப்டி இவரால் இப்படி சிரித்து கொண்டே சொல்ல முடிகிறது என்று சிலையாக நின்றிருந்தாள்..
“யூ காட் இட் மேடம் ?”
“எஸ் சார் பட் இஸ் தட் நாட் இன்ஹ்யூமேன் ?”
“யூ ஆர் பெர்பெக்ட்லி ரைட் பட் இஸ் இட் ஒகே இப் யூ ஹவ் எ பிப்டி பெர்சென்ட் கட் இன் யுவர் சேலரி ?”
“………………”
அவள் மனது சிற்சில எண்ணங்களை முனகியது …
“சுஜா காரில் செல்ல வேண்டும் ;அவளையும் ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் ;அவளுக்கு நகை சேர்க்க வேண்டும் ;பாட்டு கிளாஸ் அனுப்ப வேண்டும் ;கம்ப்யூடர் கிளாஸ் அனுப்ப வேண்டும் ;கிடார் கிளாஸ் அனுப்ப வேண்டும்;அவளை நல்ல ஒரு இடத்தில் மணம் செய்து வைக்க வேண்டும் ;அவள் டாக்டர் ஆனால் அவள் பெயரில் ஒரு மருத்துவமனை தொடங்க வேண்டும் ;அதற்க்கு பணம் வேண்டும் ;பணம் வேண்டுமானால் இந்த மருத்துவமனை நிர்வாகம் சொல்வதை கேட்டுதான் ஆக வேண்டும்..இவ்வளவு சம்பளம் சென்னையில் வேறு எங்கும் கிடைக்காது…”
“மேடம் ஆர் யூ ரெடி பார் தி ஒபெரேஷன் ?”
“எஸ் சார் “..
“குட் .கோ அஹெட் “
“ஆயிரம் சுயநல எண்ணங்கள் மனதினுள் அலமோதிக்கொண்டிருந்தாலும் அந்த ஒன்றுமறியா தாயின் வயிற்றில் தையல் போடும்போது அவள் நெஞ்சயே தைத்தது போலான மரண வலியை உணரத்தான் செய்தாள்.

– சுபலலிதா