Search
Jason-Boune-fi

ஜேசன் பார்ன் விமர்சனம்

Jason bourne tamil review

குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் சி.ஐ.ஏ.வின் தலையீட்டை மீறி, தன் உயிர் போகும் முன் ஜேசனிடம் அந்தத் தகவலைக் கொடுத்து விடுகிறாள். தன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு மர்மத்தை, மீண்டும் தேடிச் செல்கிறான் ஜேசன் பார்ன்.

தொடக்கம் முதலே படம் பயங்கர விறுவிறுப்பாகப் போகிறது. பேரி அக்ராய்டின் ஒளிப்பதிவை தனது கச்சிதமான படத்தொகுப்பின் மூலமாக க்றிஸ்டோஃபர் ரெளஸ், ஹாலிவுட்டின் வழக்கமானதொரு நாயகன் அறிமுகத்தையும் பரபரப்பாக்கியுள்ளார். அந்தப் பரபரப்புத்தன்மை, படம் முழுவதும் சற்றும் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர் இசையமைப்பாளர்கள் ஜான் பவலும், டேவிட் பெக்லியும். இயக்குநர் பால் க்ரீன் கிராஸுடன் இணைந்து க்றிஸ்டோஃபர் ரெளஸ் திரைக்கதை அமைத்துள்ளார். ஆக்ஷன் பிரியர்கள் தவற விடக் கூடாத படம். ஆனால், 3டி எஃபெக்ட்ஸைத்தான் பெரிதாக உணர முடியவில்லை.

2015 ஆம் ஆண்டில், தி டேனிஷ் கேர்ள் படத்திற்காக ‘சிறந்த நடிகை’ என ஆஸ்கர் விருது வாங்கிய அலிசியா விகேண்டர், இப்படத்தில் சி.ஐ.ஏ.வின் சைபர் பிரிவு தலைமை அதிகாரியாக வருகிறார். நாயகனைப் பிரதானப்படுத்தும் படத்தில் அலிசியா அடக்கி வாசித்திருந்தாலும், தானேற்ற பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார். கடைசியில் அவர் நாயகனிடம் ‘பல்ப்’ வாங்கும் இடம் அற்புதம். புன்னகைக்க வைக்கும் நிறைவான க்ளைமேக்ஸ்.

ராபர்ட் லட்லமின் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ‘பார்ன் (Bourne)’ சீரிஸ் படங்களுக்கென தனி வரவேற்பு உண்டு. இந்த சீரிஸில் வெளிவந்திருக்கும் ஐந்தாவது படமிது. நான்காவது பாகத்தைத் தவிர, இந்தத் தொடர் படங்களின் நாயகன் மேட் டேமனே! இப்படத்தில் இணை தயாரிப்பாளராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் அறிமுகமாகும் காட்சியில் இருந்து, அலிசியாவிடம் ‘யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேணும்’ என்று கூறி விட்டு கெத்தாக நடந்து போகும்வரை கலக்கல் நடிப்பு.

வழக்கமாக ஹாலிவுட் எழுப்பும், ‘நாட்டின் பாதுகாப்பா? தனி மனிதனின் ப்ரைவசியா?’ என்ற கேள்வி இப்படத்திலும் உள்ளது. Privacy is freedom என்றொரு வசனம் வருகிறது படத்தில். ஆனால் அதெல்லாம் சாத்தியம் தானா? எப்பொழுதையும் விட மனிதன், தன்னிருப்பை சமூக வலைத்தளங்களில் மிகுந்த வேட்கையுடன் பதியும் காலமிது. தொழில்நுட்பம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இக்காலத்தில் privacy என்பதே மிகப் பெரும் மாயை. உதாரணத்துக்குப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஏத்தன்ஸ் நகரில் அரசுக்கு எதிராக பெரும் கலவரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு ரணகளமான சூழலிலும், வைக்கோல் போரில் ஊசியைத் தேடி எடுத்தது போல் சி.ஐ.ஏ. இரண்டு நபரைக் கொல்ல தொழில்நுட்பத்தின் உதவியோடு குறி வைத்துத் வேட்டையாடுகிறது. நாயகனான ஜேசன் பார்னே வேட்டையாட பயிற்றுவிக்கப்பட்ட அப்படியொரு சி.ஐ.ஏ. கொலையாளிதான். அவனைக் கொலையாளியாக்க ‘அயர்ன் ஹேண்ட் (Iron Hand)’ எனும் ரகசிய ஆப்ரேஷனின் தலைவரான தற்போதைய சி.ஐ.ஏ. இயக்குநர் நயவஞ்சகமான திட்டம் போட்டிருந்திருப்பார். ஒரே சமயத்தில் அதிகாரப்பூர்வமாகவும், ரகசியமாகவும் அவர் வகுக்கும் எல்லா வியூகங்களையும் தனது வழக்கமான பாணியில் சமாளிக்கிறான் ஜேசன் பார்ன்.

அனைவரையும் கண்காணிக்கும் சி.ஐ.ஏ. சைபர் பிரிவு தலைமை அதிகாரியான அலிசியாவையே கண்காணித்து, அவளைத் திடுக்குறச் செய்து தன் முடிவை அழுத்தமாகச் சொல்வது அபாரம். தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்வதே வரமென நடையைக் கட்டுகிறான் ஜேசன்.

Jason bourne vimarsanam