Search
Gnana-Rajasekaran-fi

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

Gnana Rajasekaran

மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன்

ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை.

நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை அனுதாபமாகப் பார்த்து, ‘பார்றா இவர!’ என ஏளனம் பண்றார். அவங்களைத் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான், சின்ன படத்திலிருந்து ரஜினி படம்வரை வொர்க் பண்ணும் ஒரே ஆளுங்க. ஒரே விஷயத்தைச் செய்து பழக்கப்பட்டுட்டாங்க. நானோ off-beat சினிமா எடுக்கிறேன். ஆனா இங்க அனைவரையும் அவங்க வழக்கத்திற்கு இழுத்து, குதிரையை கழுதையா ஆக்கப் பார்க்கிறாங்க. ‘நல்ல தம்பி’ன்னு ஒரு படத்துல, என்.எஸ்.கே. தன் குழுவினரோடு கச்சேரிக்கு வருவார். ஆனா அவரின் பக்க வாத்திய கோஷ்டியினருக்கு உடம்பு சரியில்லாம போயிடும். சபா மேனேஜர் வந்து, ‘அரங்கம் நிறைஞ்சிடுச்சு. கச்சேரி நடக்கலைன்னா என்னை அடிச்சே கொன்னுடுவாங்க’ எனக் கெஞ்சுவார். உள்ளூர் பக்கவாத்திய கோஷ்டியினரை வச்சுச் சமாளிச்சுடலாம்னு மேடையேறுவார். இவர் ‘ஆ..’ன்னு பாட ஆரம்பிப்பார். அவங்க டங்குன்னு வாத்தியத்தை இசைப்பாங்க. அப்படியில்லப்பா, இப்படி வாசிக்கணும்னு சொல்லிக் கொடுத்துட்டு மீண்டும் பாடுவார் என்.எஸ்.கே. அவங்க மீண்டும் டங்குன்னு அடிப்பாங்க. கேமரா அப்படித் திரும்பிட்டு வர்றப்ப, அவங்க டங்கிற்கு என்.எஸ்.கே. பாட ஆரம்பிச்சுடுவார். அப்படித்தான் இங்க சினிமாவிலயும். ஆனா இதுவரை நான் அப்படி ஆகலை என்பதுதான் என் வெற்றியா நினைக்கிறேன்.

என் வேலையில் கலெக்டர், சப்-கலெக்டர் என நிறைய ஹைரார்கிஸ் இருக்கும். அது சுலபம். ஆனா இங்கயோ எல்லாம் horizontal man-management. அதுவும் நான் கலெக்டர் எனத் தெரிஞ்சதால் என்னிடம் இங்கிலீஷ்ல பேசுவாங்க. நான் தமிழ்ல பேசிட்டிருப்பேன். இங்கிலீஷும் சரியா வராது அவங்களுக்கு.

மோக முள் படத்தில், ராவ் கேரக்டரில் வெண்ணிறாடை மூர்த்தியை நடிக்க வச்சிருந்தேன். அவர் வழக்கமா வாயை வைத்து ஓசை எழுப்புவார். கேமரா முன் அதே மாதிரியே செய்தார். நான் அவரிடம், ‘சார் ராவ் கேரக்டருக்கு நீங்க வாங்க. வெண்ணிறாடை மூர்த்தியா ராவை மாத்தாதீங்க’ன்னு சொன்னேன். அவர் என்னிடம், ‘லுக் மிஸ்டர் ராஜசேகரன்’ என ஆங்கிலத்தில் தொடங்கினார். மூர்த்தி நல்லா ஆங்கிலம் பேசுவார். ‘என்னை இந்தப் படத்தில் கூப்பிட்டிருக்கீங்கன்னா எனக்குன்னு ஒரு கமர்ஷியல் வேல்யூ இருக்கிங்கிறதால கூப்ட்டிருக்கீங்க. சோ என் ரசிகர்கள் விரும்பும் விஷயங்களை நான் செய்வேன்தான்’ என்றார். அவர் சொன்னது வேலிட் பாயின்ட்தான். ஆனா என் படத்திற்கு அப்படி வேண்டாம்னு அவரிடம் சொல்லிட்டேன்.

‘மோக முள்’ படத்துக்கு தியேட்டருக்கு கூட்டம் வந்துடுச்சு. ஆனா ‘பாரதி’க்கு வரலை. ஏன் வந்துச்சுன்னா தலைப்பைப் பார்த்துட்டு வந்துட்டிருக்காங்க. அப்பலாம் மலையாளத்துல இப்படித்தான் மாமனார் மருமகள் என்பது போல படங்கள் வரும். அப்பத்தான் விஜய்யின் ‘தேவா’ படமும் ஓடிட்டு இருந்துச்சு. அப்பலாம் சந்திரசேகர் விஜய்யை வச்சு அப்படித்தான் படம் எடுப்பார். சென்சார் போர்ட் அதிகாரியாக நானே அந்தப் படத்துக்கு, இரட்டை அர்த்த வசனங்கள் அது இதென 80 ‘கட்’கள் கொடுத்தது நல்லா ஞாபகம் இருக்கு. நான், ‘மோக முள்’ படத்துக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பார்க்க தியேட்டருக்குப் போயிருந்தேன். நாவல் படிச்சவர்கள் சிலர் குடும்பத்தோடு வந்திருந்தாங்க. படம் ஆரம்பிச்சது, ஆனா இவங்க எதிர்பார்க்கிற சீன் வரலை. கொஞ்ச நேரத்துல பொறுமை இழந்துட்டு, ‘என்னய்யா படமிது’ன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. நாவல் படிச்சுட்டு வந்தவங்களுக்கு கோபம் வந்து, சத்தம் போட்டவர்களை வெளில போகச் சொல்லி கலவரம் ஆகிடுச்சு.

முன்னாடி வருஷத்துக்கு 10 படம் வரும். அதில் 6 படத்தை ரசிகர்கள் ஓட வைப்பாங்க. அப்புறம் 100 படம் வந்துச்சு. அதிலும் 6 படத்தைத்தான் ஓட வச்சாங்க. போன வருஷம் 313 படம் சென்சார் ஆகியிருக்கு. ஏன் இவ்வளவு படங்கள் எடுக்கிறாங்க? எப்படியும் 6 படத்தைத்தான் ஓட வைக்கப் போறாங்க. இங்க 6 என்பதை லிட்ரலாக எடுத்துக்காதீங்க. ஆனா கண்டிப்பா வெற்றி பெறும் படங்களின் எண்ணிக்கை ஒற்றை படையில தான் இருக்கும். 6 படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து வெற்றி பெற வைக்கும் தமிழ் ரசிகர்களின் திறமையைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுறேன்.

தமிழ் ஆடியன்ஸ் பொறுத்தவரை, ஒரு படத்தில் சென்னையில் 10 இடத்தில் கிளாப்ஸ் தட்டினா கன்னியாகுமரியிலும் அதே இடத்தில்தான் கை தட்டுவாங்க. தமிழ்ச் சமூகம் முழுவதும் ஒரே தியேட்டரில் இருந்து பார்க்கிறாப்ல இருக்கும். ஏன்னா கூட்டத்தில் ஒதுக்கிடுவாங்களோன்னு பயம்தான் காரணம். ஆனா மலையாளிஸ் அப்படி இல்ல. கொச்சில 10 சீனுக்கு கை தட்டினா, எர்ணாக்குளத்தில் வேணும்னே வேற 10 இடத்துக்கு கை தட்டுவான். திருவனந்தபுரத்துல புதுசா 10 இடத்துல கை தட்டுவாங்க. நான் தனியான ஆளுன்னு காட்டுவாங்க.

மலையாளி படம் பார்க்கிறப்ப.. அவனைப் பார்த்தீங்கன்னா எந்த உணர்ச்சியும் இல்லாம உட்கார்ந்திருப்பான். அவனுக்கு படம் பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு அவங்க முகத்தை வச்சுக் கணிக்கவே முடியாது. ‘உனக்கு நான் மூன்று மணி நேரம் தர்றேன்.’ இப்போ அது இரண்டரை மணி நேரமா குறைஞ்சிடுச்சு. ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என திமிராக உட்கார்ந்திருப்பான். ஆனா தமிழ்நாட்டிலயோ 10 நிமிஷத்துக்கு ஏதாவது ஒரு திருப்பம் எதிர்பார்ப்பாங்க. அப்படி அவங்களை பழக்கி வச்சிருக்காங்க. ஹீரோ ஒருவரைப் பார்க்கப் போறேன்னு சொன்னா, அடுத்த காட்சியில் பார்க்கப் போகும் ஆளைக் காட்டணும் இவங்களுக்கு. நடுவில் ஹீரோ காரில் போனால், எல்லாம் எங்களுக்குத் தெரியுமென என நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா மலையாளிசின் ரசனை இன்னும் traditional narrationஇல் இருக்கு. இங்கயோ டெக்னிக்கலாக, தேவைக்கு அதிகமாக நிறைய தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஃபாஸ்ட் எடிட்டிங் செய்றாங்க. வாழ்க்கையை ரசித்தல் என்பது தமிழ்ப் படங்களில் இல்லாம போயிடுச்சு.

நான் காலேஜ் ஸ்டூண்ட்ஸ்கூட பேசிட்டிருந்தேன். ராமானுஜர் கணித மேதை என்பதைத் தவிர்த்து வேறென்ன அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியும்னு கேட்டேன். யாருக்கும் எதுவும் தெரியலை. சிம்பு இப்போ யாரை லவ் பண்ணிட்டிருக்காங்க எனக் கேட்டேன். நான் அவங்களை கிண்டல் பண்றேன் என்பதுகூட தெரியாமல், ஒருவன் சீரியசாக எழுந்து, ‘முதலில் நயன்தாரா சார் இப்போ மோத்வாணி சார்’ என சிம்பு யாரைக் காதலிக்கிறார் என வரலாறு போல சொல்றான். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. நியூஸ் சேனல்கள் மிகப் பெரிய சேவை போல், அவன் கேட்கிறானோ இல்லையோ அவன் மூளையில் போய் சினிமா செய்திகளை நுழைக்கிறாங்க. அதிலும் சினிமாவிலுள்ள அனைவரையும் பற்றி அல்ல.. நடிகன், நடிகையைப் பற்றி மட்டுமே! இப்படித் தேவையற்ற நியூஸ்களை மட்டுமே அவங்க தெரிஞ்சு வச்சிருக்காங்க.

நான் சென்சார் போர்டில் இருந்ததால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நான் சென்சாரில் இருந்தேன் எனத் தெரிந்தால், ‘நீங்க கட் பண்ணாத எல்லா சீனையும் பார்த்துடுவீங்க இல்ல’ என ஏக்கமாகக் கேட்பாங்க. அதுல ஒரு பொறாமை சிலருக்கு என்னிடம். எனக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களை சென்சார் போர்டில் இருந்தப்ப இயக்குநராகப் பார்த்தேன் அவர்கள் கனவு கண்ட லட்சியங்கள் எதுவும் அவங்க படத்தில் இல்லாமல் குப்பையாக இருக்கும். ‘என்னப்பா ஆச்சு?’ன்னு கேட்டா, முதல் படத்தில் ஜெயிச்சுட்டு அடுத்த அவங்க விருப்பத்துக்கு படம் எடுக்கலாம்னு இருப்பதாகச் சொல்வாங்க. ஆனா அப்படி அவங்க கடைசிவரை ஜெயிக்கவும் மாட்டாங்க. விரும்பின படத்தையும் எடுக்க மாட்டாங்க. அப்படியே ஜெயித்திருந்தாலும், முதல் பட வெற்றியின் ருசி அவர்களையும் மாத்திடும். ஹாலிவுட்காரங்க நம்மளவிட பெரிய மசாலா மன்னன். ஆனா அவனுடைய செயற்கையில் உண்மையின் சாயலைக் கொண்டு வந்துடுவான். நம்மாளுங்க உண்மையையே செயற்கையாக எடுப்பாங்க. செகன்ட் வேர்ல்ட் வார் பத்தி எவ்ளோ படம் எடுத்திருக்காங்க. அப்ப நடந்தத சின்ன சின்ன விஷயத்தையும் விடாம அனைத்தையும் படமா எடுத்திருக்காங்க. நாமதான் அப்படி எதுவும் பண்றதில்லை.

Biopic படமெடுப்பதிலுள்ள வசதி என்னென்னா.. தயாரிப்பாளரிடம் இரத்த தாகம் கொண்டு முதல் பட இயக்குநர் போல அவர் கழுத்தை நெறித்து கதை சொல்லி அவரைக் கஷ்டப்படுத்த வேண்டியதில்லை. நான் சிலரைப் பார்த்திருக்கேன். தயாரிப்பாளரின் மகன் ஒருவர் விபத்தில் இறந்திருந்தார். இவங்க கதையில் அதே மாதிரி சீன் வச்சு, அதை மட்டும் உரத்த குரலில் சொல்லிட்டிருப்பாங்க. அவர் தேம்பித் தேம்பி அழுவார். இப்படிலாம் தயாரிப்பாளர் பற்றித் தெரிந்து கொண்டு கதை சொல்வாங்க. நான் இந்த மாதிரி biopic படமெடுப்பதில் எக்ஸ்பேர்ட் என முடிவு பண்ணதால், இதில் வசமாகச் சிக்கிக் கொண்டேன். தமிழில் இந்த மாதிரி பையோபிக் படமெடுத்தால் ஓடாதென்ற சென்ட்டிமென்ட் உள்ளது. அதை நான் உடைச்சுட்டேன். இப்ப தயாரிப்பாளர்கள் என்னைத் தேடி வர்றாங்க. பாரதி படம் வந்த பொழுது, அது குறை இது குறை என விமர்சித்தவர்கள்.. இப்போ ராமானுஜனுக்கு விமர்சனம் எழுதும் பொழுது, ‘பாரதி போல் நல்ல படம் எடுத்தவர்’ என எழுதுறாங்க. என்னிடம் ஆதாரங்கள் இருக்கு (அவர் குறிப்பிட்டது பரத்வாஜ் ரங்கனை!). ‘பாரதி’ படம் இங்கு அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல படம். விமர்சகர்களும் வேறு வழியில்லாம, இப்போ நல்ல படம்னு ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கு ராமானுஜனையும் ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க எடுக்கிற ஸ்டாண்டில் உறுதியா இருந்தா பரவாயில்லை? ஆனா  அப்படி இருக்க மாட்டாங்க.

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்திலும் பார்த்துட்டேன்.. தமிழ் ரசிகர்கள்தான் off-beat படங்களை ஏற்றுக் கொள்கின்றனர். இதே போல மற்ற மாநிலங்களில் நிகழாது. கேரளாவை படிச்ச மக்கள் நிறைந்த மாநிலம், முற்போக்கானவர்கள் எனச் சொல்வாங்க. அதெல்லாம் சுத்த பொய். நான் கேரளாவுல 27 வருஷம் சர்வீஸ்ல இருந்திருக்கேன். அங்க மோசமான casteism நிலவுது. அதை கம்யூனிச போர்வையில் கெட்டிக்காரத்தனமாக மறைச்சு வச்சிருக்காங்க. தமிழ் ரசிகர்கள் போல் முற்போக்கானவர்கள் இல்லைன்னு உறுதியாகச் சொல்லமுடியும். 

இப்போ உயிருடனுள்ள தலைவர்களில் யாரை படமாக எடுக்க விரும்புறீங்க?

அப்படி யாரும் இல்லை.

ஒருநாள் வரிசையா வண்டில வந்து என் வீட்டின் முன் ஆட்கள் இறங்கினாங்க. எங்க தலைவரைப் பற்றி படம் எடுக்கணும்னு சொன்னாங்க. அப்படிலாம் எடுக்க முடியாது. அவரைப் பற்றி எனக்குத் தெரியணும். அவர் என்னைக் கவர்ந்தால்தான் படமெடுக்க முடியும்னு சொன்னேன். கட்டுக் கட்டாக 15 புத்தகங்கள் கொடுத்துட்டுப் போனாங்க. படிச்சுட்டு, அடிப்பாங்களோன்னு பயந்துகிட்டே முடியாதுன்னு சொல்லிட்டேன். இதுவரை நான் ஆறு பேரை நிராகரித்திருக்கேன்.

நாள்: 13-07-2014
இடம்: ஞாநி வீடு

– தினேஷ் ராம்