Search
thalaiva

தலைவா விமர்சனம்

thalaiva

தலைவா – எதிர்ப்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமான தலைப்பு. இயக்குநர் விஜயும் நடிகர் விஜயும் இணையும் முதல்படம். சற்றே பெரிய படம். 

காதலியை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க இந்தியா வருகிறான் விஸ்வா. தொழிலதிபர் என நினைத்துக் கொண்டிருந்த தந்தை, மக்கள் கூட்டம் ஒன்றின் தலைவர் எனத் தெரிய வருகிறது. தன் கண் முன்பே இறக்கும் தந்தையின் மறைவிற்குப் பின், விஸ்வாவின் நிலைப்பாடு என்ன என்பது தான் கதை.

டான்ஸ் மாஸ்டர் விஸ்வாவாக விஜய். இளமை துள்ளலுடன் அமைதியாக அசத்துகிறார். சுமார் ஒரு மணி நேரம் படம் கவிதை போல் அழகான காதல் கதையாக நகர்கிறது. இடைவேளை வரை பார்த்த அதே விஜய் மீண்டும் இரண்டாம் பாதியிலும். ஆனால் துள்ளல் குறைந்து, முகத்தில் எதையோ சாதிக்கத் (!?) துடிக்கும் தீவிரத்தை பிரதிபலித்தவாறே உள்ளது அவர் முகம். ஆனால் படத்தில் விஜய் அதிர்ந்து ஒரு குத்து வசனம் கூட பேசாதது மிகப் பெரிய ஆறுதல். ஆனால் அவருக்கு பதில், “நம்ம ஊர் அரசியலுக்கு சேரும் எல்லா அம்சமும் வந்துடுச்சு ப்ரோ” என்கிறார் சந்தானம். விஜய் ஆஸ்ட்ரேலியாவில், “கங்கா மினரல் வாட்டர்” என்ற பெயரில் பிசினஸ் செய்வார். அப்பொழுது சுரேஷ், “தமிழ்நாட்டுக்கே தண்ணி கொண்டு வர முடியலை. நீங்க ஆஸ்ட்ரேலியாவுக்குக் கொண்டு வந்துட்டீங்க” என்கிறார் விஜயைப் பார்த்து.

மீராவாக அமலா பால். ஆஸ்ட்ரேலியாவில் நிகழும் ஒருமணி நேர படத்தில் தான் இவருக்கு பெரும்பான்மையான காட்சிகள் வருகின்றன. அவ்ளோ அருமையாகப் பொருந்துகிறார் முதல்பாதியில். பாடல் எதுவும் இடம் பெறாமல் வெறும் இசை மட்டும் ஒலிக்க விஜய்யும், கால் உடைந்த அமலா பாலும் நடனப்பயிற்சி செய்யும் காட்சிகள் மிகவும் அழகாக உள்ளது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் நெடுகிலும் ரசிக்க வைக்கிறது. 

லோகுவாக சந்தானம். எத்தனையோ படங்களின் ஆபத்பாந்தவராக வலம் வந்தவர், இப்படத்தில் திணிக்கப்பட்ட ஒருவராகவே வலம் வருகிறார்.அதுவும் கடைசி காட்சியில், “விஸ்வா உன்னைப் பார்க்க வக்கீல் ராதாகிருஷ்ணன் வந்திருக்கார்” என மழையில் நனைந்த கோழி போல் சந்தானம் தலையை ஆட்டிச் சொல்லும் பொழுது, இரண்டு விஜய்களின் நோக்கமும் அடிபட்டு விடுகிறது. இதே வசனத்தை சத்யராஜிடம் சொல்லும் மனோபாலாவே சரியான தொனியில் சொல்லியிருப்பார். தனக்கிட்ட பணியை கச்சிதமாகச் செய்யும் வக்கீல் ராதாகிருஷ்ணனாக ஒய்.ஜி.மகேந்திரன்.

டி.ஆரினைப் போன்ற சிகையலங்காரத்துடன் நாயகன் பாணி காட்சிகளில் அறிமுகமாகும் சத்யராஜ், டைட்டில் கிரெடிட் எல்லாம் முடிந்து, ‘அண்ணா’வாக மும்பை தமிழர்களின் தலைவராகவரும் காட்சிகளில் சத்யராஜ் கம்பீரமாகக் கலக்குகிறார். இரண்டு குழந்தைகளை வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்கும் கெளரவ வேடத்தில் நாசர்.நாயகன் சரண்யா போல் இறக்க மட்டுமே சத்யராஜின் ஜோடியாக நடித்துள்ளார் ரேகா. விஜய்யின் பின் தானாய் சேரும் கூட்டத்தில், ராஜீவ் கோவிந்த பிள்ளை என்ற மலையாள நடிகர் மட்டும் கவனத்தை ஈர்க்கிறார்.

துப்பாக்கி என்ற வெற்றிப்படத்திற்குப் பின், நடிகர் விஜயுடன் களம் இறங்கியுள்ளார் இயக்குநர் விஜய். அதுவும் படத்தின் தலைப்பு தலைவா. சரி ஏதாவது இருக்குமென நினைத்தால், நாயகனில் தொடங்கி பாட்ஷாவில் முடிக்கிறார். ஒழுங்காக ஆடி பாடிக் கொண்டிருந்த விஜயை மும்பை அழைத்து வந்து சில கொலைகள் புரிய வைத்து தலைவன் (!?)ஆக்குகிறார். தலைவன் ஆனதும், ‘இவனைக் கொல்ல எனக்கு காரணங்கள் இருக்கு. ஆனா உனக்குத் தான் உரிமை இருக்கு’ என துப்பாக்கி கொடுத்து பிறரையும் கொல்ல வைக்கிறார். எவரையேனும் கொன்று தர்மத்தை நிலைநாட்டும் “நல்ல தாதாயிச”த்தைக் கல்லாமலேயே குலவிச்சையாகப் பெறுகிறார். டைட்டிலில் காட்டப்படும் ஏதேனும் ஒரு தலைவரின் சிறப்பு அம்சத்தையாவது விஜய் பிரதிபலித்து இருக்கலாம். ஏனோ வேலு நாயக்கரையும், மாணிக் பாட்ஷாவையும் மட்டுமே பிரதிபலிக்கிறார். ஹிந்தியும் தமிழும் மாறி மாறிப் பேசி நாயகன் கையால் மாய்ந்துப் போக ஒரு வில்லன்; மணாளனே மங்கையின் பாக்கியம் என மனம் மாறும் அநாதை நாயகி; யூகிக்க முடிந்த கதை எனப் படம் ஏகத்திற்கும் ஏமாற்றுகிறது. 
Leave a Reply