Search
Thirudi

திருடி – சவால் சிறுகதை

காமினி. எந்த தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப் படவில்லை. ஆனால் அனைத்து சாத்தான்களாலும் சபிக்கப்பட்டவள். அவளைப் பற்றி முதலில் கேள்விபடுபவர்கள் அப்படி தான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பார்த்து பழகினால் தான் தெரியும் காமினியே ஒரு தேவதை என்று. அப்படி காமினி ஒரு தேவதை என அவளை நம்ப வைக்க அவளின் தாத்தா பரந்தாமன் கடந்த ஐந்து வருடங்களாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த ஐந்த நாட்களாக அவர் மருத்துவமனையில் தன்னிலை இழந்து சிகிச்சை பெற்று வருகிறார். பரந்தாமன் மருத்துவமனைக்கு சென்ற தினத்தில் இருந்து காமினியை கவனிக்க ஆள் இல்லை. சிவா மட்டும் தான் அடிக்கடி வந்து அவள் உயிரை வாங்கிக் கொண்டிருந்தான்.

சிவாவின் தொல்லை பொறுக்க முடியாமல் எங்கேயாவது ஓடிவிடலாம் என காமினி நினைத்தாள். ஆனால் எங்கே ஓடுவது என அவளுக்கு தெரியவில்லை. ஏன் தான் தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போனதோ என கோபம் கோபமாக வந்தது. எல்லாம் அந்த சாமியறையில் இருக்கிற சாமியால் தான் என பாட்டி அழுதது ஞாபகம் வந்தது காமினிக்கு. ‘சாமிக்கு அறிவே இல்லை’ என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து, ‘மயிறு’ என திட்டினாள். சிவா காமினி மேல் கோபப்படும் பொழுது, ‘போடி மயிறு’ என்று தான் திட்டுவான். சிவா அப்படி திட்டும் பொழுது தாத்தா பார்த்து விட்டால்.. அவன் காதை பிடித்து திருகி, ‘இதென்ன பழக்கம்!! இனிமே சொல்வியா?’ என சத்தம் போடுவார். மீண்டும் தாத்தா ஞாபகம் வந்ததும் அழுகை முட்டியது. அழுதவாறே காமினி சாமியறைக்கு சென்று, ‘நான் உன்ன மயிறுன்னு திட்டியதை தாத்தாகிட்ட சொல்லிடாத ப்ளீஸ். தெரியாமல் சொல்லிட்டேன் சாரி’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

சிவா எங்கயோ இருந்து, “அம்மா.. உன்ன கூப்பிடுறாங்க காமினி” என்று கத்தினான். காமினி அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு, ஓடி போய் சிவாவின் அம்மா அறை முன் நின்றாள்.

“தாத்தாவை பார்க்க. ஹாஸ்பிட்டலுக்கு போறோம். நீயும்..” என்று காமினியின் முகத்தை கவனித்த சிவாவின் அம்மா, “அழுதியாமா? சிவா உன்னை எதாவது சொன்னானா.. இல்ல அடிச்சானா? சிவா” என உரக்க அழைத்தார்.

“இல்ல.. இல்ல. நான் தான் கீழ விழுந்துட்டேன்.”

“அடி எதாச்சும் பட்டுடிச்சா?” என்று அருகில் வந்து அவள் வலது கால் முட்டியை தடவியவாறு கேட்டார்.

“இல்ல. கொஞ்சமா தான் விழுந்தேன்.”

“சரி போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்று சொல்லியவாறு எழுந்த சிவாவின் அம்மா, “சரி நானும் வர்றேன்” என்று காமினியுடன் குளியலறைக்கு சென்றார்.

சிவாவின் பாட்டிக்கு இரவு உணவு எடுத்துக் கொண்டு மூவரும் மருத்துவமனைக்கு சென்றனர். பரந்தாமனை ஏதோ பரிசோதனைக்காக அழைத்து சென்றிருப்பதாக தகவல் சொன்ன செவிலியர், “உங்க பொண்ணா? பனிக் கட்டிக்கு கை, கால் முளைச்ச மாதிரி அழகா இருக்கா. இத்தனை நாள் கூட்டிட்டு வரலயே!!” என்று காமினியின் கன்னத்தை வழித்து எடுத்தாள்.

சிவாவின் அம்மா, “மூத்தார் பொண்ணுங்க. இன்ஃபெக்ஷன், கின்ஃபெக்ஷன் வந்துட போகுதுன்னு அவங்க பாட்டி வேணாம்னு சொல்லிட்டாங்க. இப்ப அவங்க தாத்தா பார்க்கனும் என்று சொன்னாராம். அவருக்கு இவ ரொம்ப செல்லம்” என்றாள் காமினியை பார்த்து புன்னகைத்தவாறே.

“அவளோட அப்பா, அம்மா வரலயா?”

“சிவா.. தாத்தா படுத்திருந்த ரூமை காமினிய கூட்டிட்டு போய் காட்டு.”

“காமினின்னா பெயர் வச்சிருக்கீங்க!!” என்ற அதிசயித்த செவிலியரை கவனிக்காமல், சிவாவும் காமினியும் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தார் சிவாவின் அம்மா.

“என்ன கேட்டீங்க?”

“இல்ல.. காமினி அப்படின்னு பெயர் வச்சிருக்கீங்களே என கேட்டேன்.”

“அவ அப்பா யூ.எஸ்.ல ‘மினி’ன்னு ஒரு வெள்ளக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. எங்க மாமனாருக்கு அதனால மூத்த புள்ள மேல தலை முழுகுற அளவுக்கு ரொம்ப வருத்தம். மூனு, நாலு வருஷம் சுத்தமா ஓட்டு உறவு இல்லாம் தான் இருந்தாங்க. எங்க கல்யாணத்த கூட தெரியபடுத்துல. காமினி பொறந்த ஒரு வாரத்துல, ஹாஸ்பிட்டலுல இருந்து அவளையும் அவங்க அம்மாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்ப ரெண்டு பேருமே அக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அப்புறம் எங்க மாமனார் எப்படியோ கஷ்டப்பட்டு காமினியை கை குழந்தையா அமெரிக்கால இருந்து எடுத்துட்டு வந்தாரு. எங்க மூத்தாரோட பெயரு கார்த்திக். அதுல ‘கா’வும், அவங்க அம்மா பெயரான ‘மினி’யும் சேர்த்து மாமனார் தான் காமினின்னு பெயர் வச்சாரு.”

செவிலியர் சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு, “நம்ம ஊரு சிவப்பு இல்லையே என அப்பவே பட்டுச்சு. அப்பா, அம்மாவ முழுங்கிட்டு பொறந்திருக்கு. பாவம்” என்றாள்.

“இந்த கட்டில்ல தான் தாத்தா படுத்துக்கிட்டு இருந்தார். இந்த மெத்த செம சாஃப்ட்ட இருக்கும். வேணும்னா நீயே படுத்துப் பாரேன்” என்றான் சிவா.

“வேணாம்” என்றாள் காமினி.

“நான் போலீஸ் தெரியுமில்ல. நான் சொல்றத கேட்கலைன்னா.. யாரா இருந்தாலும் சுட்டுடுவேன்” என்று தன் சட்டைப் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து காண்பித்தான். இது அவர்கள் விளையாடும் விளையாட்டு. என்றுமே அதில் சிவா தான் நாயகன். இவனிடம் ஏன் வம்பு என்பது போல, காமினி அந்த கட்டிலில் படுத்தாள்.

சிவா துப்பாக்கியை பையில் வைத்துக் கொண்டே, “சரி.. இப்ப நான் டாக்டர்” என மேசை மீதிருந்த ‘ஸ்டெத்தஸ்கோப்பை’ கழுத்தில் மாட்டிக் கொண்டான். மேசை மீதிருந்த மாஸ்க்கை காமினி முகத்தில் வைத்தான். கட்டில் விளிம்புகளில் சொருக வைக்கப்பட்டிருந்த சில வயர்களை எல்லாம் எடுத்து, அதன் முனையில் இருக்கும் பிளாஸ்டரின் மீதமிருந்த ஒட்டும் திறனைக் கொண்டு காமினியின் கையில் அழுத்தினான். ‘ஸ்டெத்தஸ்கோப்பை’ காதில் சரியாக பொருத்திக் கொண்டு, காமினியின் இதயத்தை சோதித்து பார்த்தான்.

“டாக்டர்.. அது என்னோட ‘ஸ்டெத்’ போல இருக்கே!!”

சிவா திரும்பி பார்த்தான். வாசலில் புன்னகையோடு மருத்துவர் நின்றுக் கொண்டிருந்தார். சிவா ஸ்டெத்தஸ்கோப்பை காமினி அருகில் வைத்து விட்டு, அருகில் இருந்த ஜன்னலை திறந்து குதித்தான்.

“ஹேய்.. பார்த்து.. பார்த்து” என்று மருத்துவர் சொல்லிக் கொண்டு ஜன்னல் அருகில் வரும் முன்பு, சிவா எழுந்து ‘மடார்’ என கண்ணாடிக் கதவை மூடினான். மருத்துவர் கட்டில் அருகில் வந்தார். காமினிக்கு என்ன பண்ணுவதென்று தெரியாமல்.. திருதிரு என முழித்தாள். “சோ க்யூட்” என்று சொல்லிக் கொண்டு தன் ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

குதித்த வேகத்தில் கால் இடறி கீழே விழுந்தாள். அவள் பைக்குள் இருந்து ‘பாப்பின்ஸ்’ டப்பி வெளியில் விழுந்தது. வேகமாய் எழுந்த காமினி, கைகளை உதறி துடைத்துக் கொண்டு டப்பியை எடுத்து மீண்டும் பைக்குள் போட்டுக் கொண்டாள். சிவாவை தேடி இரண்டு புறமும் தலை திருப்பி பார்த்தாள். சிவா அவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தான்.

“பயந்துட்டியா?”

“என்னை தாத்தாகிட்ட கூட்டிட்டு போ” என்றாள் காமினி.

“உன் பாக்கெட்ல என்ன வச்சா?” என்று கேட்டான் சிவா.

“பாப்பின்ஸ்.”

“ஏது உனக்கு?”

“தாத்தா.. வாங்கி கொடுத்தார்.”

“அவர் தான் ஹாஸ்பிட்டலுல இங்க இருக்கிறாரே!!”

“முன்னாடியே வாங்கி கொடுத்துட்டாரு” என்றாள் காமினி.

“அத இந்நேரம் நீ சாப்பிட்டிருப்பியே!! எடு பாப்போம்.”

“மாட்டேன்” என்று தன் பையை இறுக பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டாள்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

“யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சரியா?” என டப்பியை பையில் இருந்து எடுத்தாள்.

சிவா காமினியிடமிருந்து டப்பியை இடதுக் கையால் பிடுங்கிக் கொண்டு ஓடினான்.

“ஏய்.. என்த என்கிட்ட கொடுடா” என பின்னாலேயே ஓடினாள் காமினி. சிவா பின் வாசல் வழியாக கட்டிடத்தில் நுழைந்து பரந்தாமனின் அறைக்கு ஓடினான். அறை வாசலில் அமர்ந்திருந்த சிவாவின் பாட்டி அமர்ந்திருந்தார். பாட்டியின் கையில் காமினியின் ‘பாப்பின்ஸ்’ டப்பியை கொடுத்து விட்டு, “என் கண்ல இருந்து எதையும் மறைக்க முடியாது. ஏய்.. ஏய்.. சட்டத்தின் நீண்ட கையில் இருந்து யாராலும் தப்ப முடியாது. நான் தப்பிக்க விட மாட்டேன். டுமீல்.. டுமீல்” என தன் துப்பாக்கியை மேலே பார்த்து சுட்டுக் கோண்டே பலமாக சிரித்து விட்டு பரந்தாமன் இருக்கும் அறைக்குள் ஓடினான். சோகையேறிய சிவாவின் பாட்டி முகத்தில் அயற்சி கலந்த புன்னகையும், வியப்பும் ஒருங்கே தெரிந்தது. எப்படி நாலாம் வகுப்பு படிக்கும் தனது பேரனால் நாப்பது வயது நடிகன் பேசும் வசனத்தை அப்படியே பேச முடிகிறது என்ற வியப்பு அது.

காமினி பாட்டி அருகில் சென்று டப்பியை பார்த்தபடி நின்றாள். பாட்டி அவளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, “உன்தா இது?” என்ற கேட்டவாறு பாட்டி டப்பியை திறந்தார்.

டப்பியை அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, “உங்கிட்ட எத்தன தடவ சொல்றது? இன்னொரு தடவை இப்படி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது. எல்லாம் அவர சொல்லனும். உன்ன பழக்கப்படுத்தி வச்சதுக்கு” என்று பேத்தியின் முகத்தை திருப்பி சன்னமான குரலில் மிரட்டினார்.

“சரி பாட்டி” என்றாள் நா தழதழக்க.

“அத்த.. போய் காஃபி வாங்கிட்டு வர்றோம்” என்று சிவாவின் அம்மா சிவாவையும் இழுத்துக் கொண்டு சென்றார்.

“தாத்தாவ போய் பார்த்துட்டு வா” என காமினியை இறக்கி விட்டார் பாட்டி.

கட்டில் அருகில் சென்ற காமினி, “இன்னும் எத்தனை நாள் தாத்தா இங்கயே இருப்பீங்க?” என்று கேட்டாள்.

“நீ சொன்னா இப்பவே போயிட வேண்டியது தான்” என்று புன்னகைத்தார் பரந்தாமன்.

“டாக்டர் தான அத சொல்லனும்!!” என்று பையில் கை விட்டு, “கைய காமிங்க தாத்தா” என்றாள்.

“என்ன வச்சிருக்க எனக்கு? அந்த போலீஸ் பைய உங்கிட்ட இருந்து ஏதோ பிடுங்கிட்டானாம்மே!! ரொம்ப சத்தமா சொல்லிட்டிருந்தான்” என்று கையை நீட்டினார். அவர் கைகளில் டைமன்ட் கற்கண்டுகள்.

“காமினி… வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“யார்கிட்டயும் சொல்லிடாதீங்க தாத்தா.”

– தினேஷ் ராம்
Leave a Reply