Search
TVSK

தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

TVSK
47616542891*வது தடவையாக வெள்ளைத் தோலினையுடைய பெண்கள் காதலிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்லும் தமிழ்ப் படம்.
சஞ்சனாவைப் பார்த்த நொடியிலேயே, குமாருக்கு சில்லென சாரலடித்து அவள் மேல் காதல் வந்துவிடுகிறது. பிறகு குமார் எப்படித் தீயாக வேலை செய்து சஞ்சனாவை காதலிக்க வைக்கிறான் என்பதே கதை.
குமாராக சித்தார்த். வாயில் விரல் வைத்தாலும் கடிக்கத் தெரியாத அப்பாவி ஐ.டி. தொழிலாளியாக நடித்துள்ளார். உதயம் NH4-இல் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த சித்தார்த், இப்படத்தில் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பவராக வழக்கம் போல் வந்து அசத்துகிறார். காதலித்து திருமணம் புரிந்துக் கொள்ளும் வம்சாவழியில் வந்த சித்தார்த், காதலிக்க யோசனைக் கேட்டு ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார். இந்தச் செலவழித்தல் நகைச்சுவைப் பிரிவில் வருகிறது. காதலிக்க ஐடியா சொல்லி சம்பாதிப்பவராக சந்தானம். சித்தார்த்தின் அறிமுகம் கூட படத்தில் சாதாரணமாகத் தானிருக்கிறது. ஆனால் ‘மோக்கியா’வாக வரும் சந்தானம் அதிரடியாக அறிமுகமாகிறார். 
சஞ்சனாவாக ஹன்சிகா. அழகாக இருப்பதால் மட்டுமே காதலிக்கப்படும் நாயகியாக மீண்டும் நடித்துள்ளார். அவருக்கு பழகி விட்ட கதாபாத்திரம் என்பதால், அதிக சிரமமின்றி நடித்துள்ளார். ஹன்சிகாவின் தோழியாக வித்யுலேகா ராமன் நடித்துள்ளார். அலுவலகத்திலுள்ள பெண்கள் அனைவராலும் காதலிக்கப்படுபவராக, படத்தின் முதற்பாதியில் வருகிறார்  கணேஷ் வெங்கட்ராமன். அதே போல் முதற்பாதியில் வந்து செல்லும் இன்னொரு கதாபாத்திரம், சித்தார்த்தின் நண்பர் கர்ணாவாக வரும் RJ பாலாஜி. அவர் பேசும் இங்கிலீஷ் அட்டகாசமாய் உள்ளது.
வழக்கமாக சுந்தர்.சி படத்தில் இருக்கும் கலகலப்பு இப்படத்தில் மிஸ்சிங். முதற்பாதியின் வேகம் கூட இரண்டாம பாதியில் இல்லை. நான்கு பேர் கொண்ட திரைக்கதைக் குழுவில், ‘சூது கவ்வும்’ இயக்குநரான நலன் குமாரசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது.  சந்தானத்தின் ஃப்ளாஷ்-பேக், காதலைப் பிரிக்க அவர் போடும் திட்டங்கள், மனோபாலாவின் பகுதி என படம் சற்று பொறுமையைச் சோதிக்கிறது. ஒரே காட்சியில் தோன்றினாலும், டெல்லி கணேஷ் ரசிக்க வைக்கிறார். வழக்கமாக பாடல்களில் உருண்டு புரண்டு ஆடும் கெளதம் வாசுதேவ்மேனின் ஆட்களுக்குப் பதிலாக ஜப்பானியர்கள், ‘கொழு கொழு’ எனத் தொடங்கும் பாடலுக்கு நோகாமல் கை காலை ஆட்டியுள்ளனர். 
*நீங்கள் கடைசி வரியை படிக்கும் முன், 98264745611 என வெள்ளைத் தோலினையுடைய பெண்களே காதலிக்கப்பட வேண்டியவர் என வலியுறுத்தப்படுவதின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.Leave a Reply