Search
Aamir-Dhoom-3-First-look

“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக்

டிசம்பர் 20 அன்று உலகெங்கும் 4800 ஸ்க்ரீனில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 200 ஸ்க்ரீன்களுக்கு படம் திரையிடப்படுகிறது. தமிழில் ‘டப்’ செய்யப்படும் முதல் அமீர்கான் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி தமிழ்ப்படங்களான ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘பிரியாணி’யுடன் களத்தில் இறங்குகிறது. படத்தின் பிரமோஷனுக்காக நேற்று சில மணி நேரங்கள் சென்னை வந்து சென்றனர் படக்குழுவினர்.

Dhoom: 3 Aamirகாத்ரீனா கைஃப் மற்றும் அபிஷேக் பச்சனுடம் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் அமீர்கான். ‘கஜினி, 3 இடியட்ஸ்’ போன்ற முழு கமர்ஷியல் படங்கள், பின் சமூக அக்கறையுள்ள படங்கள் என தான் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறும் அவர், ‘நான் எதையும் திட்டமிடுவதில்லை. இந்த நொடி வாழ ஆசைப்படுறேன். எனக்கு தூம்:3 இல் இந்த பாத்திரம் பிடிச்சிருந்தது பண்றேன். வித்தியாசமான பாத்திரங்களில் பண்ணணும் என தேடிப் பண்ணுவதில்லை. ஆனால் ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் பண்ணால் போர் அடிக்க ஆரம்பித்து விடும். நான் முதலில் என்னை ஆச்சரியப்பட வைக்கணும். என் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கணும் என நினைக்கிறேன்” என்றார். அவர் அணிந்திருக்கும் தொப்பி பற்றிக் கேட்ட பொழுது, “இரண்டு வருஷமாக எங்குப் போனாலும் இந்தத் தொப்பியோடு தான் இருக்கேன். சாஹிர் இன்னும் கதாபாத்திரம் இப்படித் தான் தோன்றணும் என யோசிச்சதில் இருந்து இப்படி இருக்கேன்” என்றார். தான் ரஜினியின் மிக தீவிர ரசிகர் என்றும், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கையால் தனது முதற்படத்திற்கான இயக்கத்திற்கு வாங்கிய விருதைக் குறித்தும் நினைவு கூர்ந்தார். நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பமிருந்தாலும், தனக்கு மொழி ஒரு தடை எனக் குறிப்பிட்ட அவர், “தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ப்படங்களில் நடிக்கிற மாதிரியான ஸ்க்ரிப்ட் என்றால் கண்டிப்பாக நடிப்பேன்” என்றார். தூம்: 3 இல் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dhoom:3 Katrinaஆக்ஷன் படத்தில் காதல் உண்டா எனக் கேட்டதற்கு, “காதல் இல்லாமல்? காதல் ரொம்ப முக்கியம். ஆண்கள் படத்தில் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் போர் அடிக்குமே! படத்தில் அழகான காதல் உண்டு. தவறவிடாமல் பார்த்து.. எப்படியிருக்குன்னு சொல்லுங்க” என்றார் காத்ரீனா கைஃப். காத்ரீனாவின் அம்மா சில வருடங்கள் சென்னையில் வாழ்ந்ததால், சென்னையை தனது இரண்டாவது வீடு என சிலாகித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் நடிக்கும் பொழுது சில உரசல்கள் நேருகிறதே என்ற கேள்வியை, ‘அப்படியா?’ எனக் கேட்டு, அது உண்மையில்லை என மறுத்து விட்டார். தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், அமீர்கானைப் போலவே தனக்கும் மொழி ஒரு தடை எனக் கூறினார்.

மற்ற இருவரையும் போல் அல்லாமல், தமிழில் நடிக்க தான் மிக ஆர்வமுடன் இருப்பதாகக் கூறினார் அபிஷேக் பச்சன். மதிய உணவிற்கு அமருவதைத் தவிர, மற்ற நேரங்களில் தமிழ்ப்பட யூனிட் மிக சுறுசுறுப்பாக இயங்குகின்றனர் என்றார். குரு மற்றும் ராவணனுக்காக சென்னையில் ஷூட்டிங்கிற்கு வந்ததைக் குறித்தும், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கென்னி (விக்ரம்) உடன் பணி புரிந்தது பற்றியும் சொன்னார். அமீர்கான் போன்ற நடிகருடன் நடிப்பது வாழ்நாளில் கிடைக்கும் அரிதான வாய்ப்பு என்றார் அபிஷேக் பச்சன்.




Leave a Reply