Search
Thegidi-01-fi

தெகிடி விமர்சனம்

Thegidi review

நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர்.

டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை.

மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும்.

மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கியமாக இவ்வகையான த்ரில்லர் படங்களுக்கு. எனினும் பாடல்கள் இம்சிக்காத ரகமாக இருப்பது ஒரு ஆறுதலான விஷயம்.

படத்தின் பிரதான கதாபாத்திரங்களைப் போல் அனைத்துப் பாத்திரங்களுமே மனதில் நிற்கின்றனர். வெற்றியின் நண்பன் நம்பியாக வரும் காளி. வில்லா படத்தில் ஜமீன்தாரின் இளைய மகனாக வருவார். இப்படத்தில் இவருக்கு நல்ல குணசித்திர கதாபாத்திரம். இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணி புரியும் சடகோபனாக நடித்திருக்கும் பிரதீப் நாயர், சைலேஷாக வரும் ஜெயக்குமார், காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயப்ரகாஷ் என அனைவருமே கச்சிதமாக நடித்துள்ளனர்.

த்ரில்லர் படங்களின் பலமாக அமைவது அதன் படத்தொகுப்பு. பீட்சா புகழ் லியோ ஜான் பால் தான் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். நிவாஸ் K.பிரசன்னாவின் இசையும் படத்தின் த்ரில்லை படம் நெடுக்க தக்க வைக்க உதவுகிறது.

ஓர் ஊழலை முன்வைத்து கதையைப் பின்னியுள்ளார் இயக்குநர் P.ரமேஷ். அடுத்த பாகத்திற்கான விதையையும் அழகாக பட முடிவில் தூவியுள்ளார். தமிழ் சினிமா சம்பிரதாயங்கள் எதையும் மீறாமலே ரசிக்க வைத்துள்ளார். தெகிடி என்ற பகடை, சூது விளையாட்டு, புரட்டு என்று அர்த்தமாம். தலைப்பு படத்தின் கதைக்குப் பொருந்தினாலும் ஏதோ ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. தமிழிலேயே புழக்கத்திலுள்ள சொற்கள் ஏதேனும் வைத்திருந்தால் படம் இன்னும் நெருக்கமானதோர் உணர்வைத் தந்திருக்கும். ஆனால் அதைப் பற்றிலாம் கவலைப்படாமல், தூயத் தமிழ்ச்சொல்லாக பெயர் வைத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.