Search
Dhoni

தோனி விமர்சனம்

Dhoni
தோனி – பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படம். ‘டூயட் மூவிஸ்’ எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மைத் தானென படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது  பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றி பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம்.

வெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணிப் புரியும் ஓர் உத்தம அரசு ஊழியர். தன் மகன் கார்த்திக்கையும், மகள் காவேரியையும் நல்ல (!?) தனியார் பள்ளியில் சக்திக்கு மீறி படிக்க வைக்கிறார். செலவுகளைச் சமாளிக்க ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். கல்வி தான் தன் பிள்ளைகளுக்கு சொத்தாக இருக்கும் என நம்பும் அவரின் மகனுக்கோ கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம். பள்ளி நிர்வாகமோ கார்த்திக் சரியாக படிப்பதில்லை என ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு அனுப்ப இயலாது என கூறுகிறது. அதனால் சுப்ரமணியம் கோபமுற்று தன் மகனை அடிக்க, கார்த்திக் எதிர்பாராத விதமாக மேசையின் மீது மோதி நினைவிழந்த (கோமா) நிலைக்கு செல்கிறான். இந்தப் பாழாய்ப் போன கல்வி முறையும், பள்ளி நிர்வாகமும் தன் மகனை அடிக்க வைத்து விட்டதே என குமுறும் சுப்ரமணியன் அவர்களின் மகன் கதி என்னவாயிற்று என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

மத்திய தர வர்க்கத்தினரின் மனோ நிலை பல்லிளிக்கும் இடங்களை எல்லாம் பெருமிதமாக படத்தில் பதிந்துள்ளனர். உதாரணத்திற்கு அடக்கம், ஒடுக்கமாய் வலம் வரும் சக குடியிருப்புவாசி ஆன நளினி, கலவித் தொழிலாளி என தெரிந்ததும் சுப்ரமணியத்தின் ஈனம், மானம் எல்லாம் பொங்கி அறச் சீற்றமாக வெளிபடுகிறது. ஆனால் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சாம்ஸ் சுப்ரமணியத்தின் கைப்பேசியையே வாங்கி மணமான பிற பெண்களுடன் சல்லாபிக்கும் பொழுது மட்டும் மானம் மனதின் ஆழத்தில் புதைந்துக் கொள்கிறது போலும். ஆக பெண்ணுக்கொரு நியாயம், ஆணுக்கொரு நியாயம் என்றுள்ள மத்திய தர ஆண்ணின் மனோபாவத்தைத் துல்லியமாக பதிகின்றனர். சாம்ஸ் படத்தின் நகைச்சுவைக்கு உதவுகிறார் என்று இயக்குனர் நம்புவதாக தெரிகிறது. நளினி ஆக நடித்திருக்கும் ராதிகா ஆப்தேவின் கண்கள் வசனங்களின்றி பலவற்றை பேச முயல்கின்றன. விவேக் ஓப்ராயின் மனைவியாக ரத்த சரித்திரம் படத்தின் மூலம் முன்பே தமிழ்த் திரையில் தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணின் நியாயத்திற்கு ஏற்றாற் படி நளினியும் திருந்தி சுப்ரமணியனின் வயிற்றில் பாலை வார்த்து விடுகிறார்.

இப்படத்தில் காட்டப்படும் மத்திய தர வர்க்கம் தன் இயலாமையையும், தைரியமின்மையையும் மற்றவர் மீது பழியாக சுமத்துகிறது. எதார்த்த வாழ்விலும் மத்திய தர வர்க்கத்தினரின் மனோநிலை அப்படியே தான் உள்ளது என்பது வருந்தத்தக்க ஒன்று. தனியார் பள்ளிகள் ஏற்படுத்தும் அழுத்தத்தைப் பற்றிப் பேசுகிறது படம். கல்வி முறையில் மாற்றம் வேண்டுமென்ற கோரிக்கையை மையப்படுத்துகிறது. மகனோ/மகளோ நன்றாக படிக்க வேண்டும்; நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும், சுயநலத்தையும் சாடவோ, பதியவோ இப்படம் முனையவில்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி எடுத்தே ஆக வேண்டும் என்ற திணிப்பு வீட்டிலேயே தொடங்கி விடுகிறது. அந்தத் திணிப்பை மேலும் தாங்கவொண்ணா அழுத்தமாக மாற்றுகிறது ஆசிரியர்களின் அணுகுமுறையும், பள்ளி நிர்வாகத்தின் கொள்கைகளும். ’12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற எந்தெந்த கேள்விகள் படித்தால் போதும்’ என்று தனியார் தொலைக்காட்சியில் பகிரங்கமாகவே இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தெரிந்துக் கொள்வதை விட தேர்ச்சிப் பெறுவதே இங்கு கல்வியின் நோக்கமாக உள்ளது. பள்ளியின் நிர்வாகத்தின் பேச்சைக் கேட்டு தன் மகனை அடித்ததாக பிரகாஷ் ராஜ் கவலைப்படுகின்றாரே அன்றி தனது சுயநலத்தை உணர்ந்தவாறாக தெரியவில்லை. அரசின் மீது நம்பிக்கையற்ற அரசு அதிகாரி என பிரகாஷ் ராஜ்ஜைச் சொல்லலாமா!? ஏன் பணத்தைக் கொட்டி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும்? புலம்ப வேண்டும். அரசுப் பள்ளிகள் என்னப் பாவம் செய்தன? அரசுப் பள்ளியின் தரத்தில் அவருக்கு ஐயம் இருப்பின், அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த சொல்லி போராடி இருக்கலாம். தனியார் பள்ளிகளிலேயே தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமாம். கல்வி முறையை மட்டும் அழுத்தமற்று மாற்றி விட வேண்டும். ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான பிடியை தளரவிட விரும்பவில்லை. தமிழ் மொழிக் கல்வியின் அவசியத்தை ஏன் படத்தில் கூட இவர்களால் சொல்ல முடியவில்லை. மாற்றம் முதலில் பெற்றோரின் மனோபாவத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

கனி பாய் ஆக வரும் முரளி ஷர்மா ரசிக்க வைக்கிறார். பணத்தைக் கேட்டு பிரகாஷ் ராஜ்ஜின் வீட்டிற்கு வரும் பொழுதும், பிரகாஷ் ராஜ்ஜின் துயரம் உணர்ந்து உரிமை எடுக்கும் பொழுது கலக்குகிறார். தேர்ந்த நடிகரான நாசர் கிரிக்கெட் பயிற்சியாளர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார்.  பிரம்மானந்தம் இடையிடையே படத்தின் கலகலப்பிற்கு உதவுகிறார். மோகன் ராம்மின் பின்னணிக் குரலில் தணிகல பரணி பள்ளி தலைமை ஆசிரியராக நடித்துள்ளார். படத்தில் தெலுங்கு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதை உணரலாம். தெலுங்கிலும் இப்படம் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதோடு பொருத்திக் கொள்ளலாம். ஆகாஷ் பூரி என்னும் அந்த சிறுவன் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்துகிறான். மூளையில் ‘ஸ்டென்ட்’ வைத்து சிகிச்சை செய்யப்பட்ட அச்சிறுவனால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட இயலுமா என்பது மிகவும் கேள்விக்குரிய ஒன்று. ஆனாலும் அவன் விருப்பப்படி தோனி போல் ஆகணும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. காவேரி ஆக நடித்திருக்கும் ஸ்ரீதேஜா முகத்தில் குழந்தைத் தனம் மாறாது எட்டாம் வகுப்பு மாணவியாக நடித்திருக்கிறாள். முதலமைச்சராக வரும் சரத்பாபுவைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

தலைவாசல் விஜய் “லண்டனில்” படித்த நரம்பியல் இரண சிகிச்சை மருத்துவர் ஆக வருகிறார். அவர் லண்டனில் படித்தவர் என்பதற்கான அழுத்தம் வசனங்களில் இரண்டு, மூன்று இடங்களில் பிரகாஷ் ராஜ்ஜால் தரப்படுகிறது. இத்தகைய மனநிலை உடையவர் பள்ளி நிர்வாகம் அழுத்தம் தராவிட்டாலும் அடித்திருப்பார் தானே!! தன் மகன் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு பள்ளி நிர்வாகமோ, கல்வி முறையோ எப்படிக் காரணம் ஆகும்? இதற்கு பெயர் தான் சுலபமாய் பழியை மற்றவர் மீது சுமத்தி விடுதல் ஆகும்.

தோனி கொண்டாட்டமாக இருக்க வேண்டிய மாணவப் பருவம் பெற்றோர், கல்வி முறை, பள்ளி நிர்வாகம், சமூகம், ஊடகம் என பலவற்றாலும் சிதைக்கப்படுகிறது.
Leave a Reply