Search
Naveena ithikasam

நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

Bageerathiyin Mathiyam

பா.வெங்கடேசனின் இரண்டாவது நாவலான ‘பாகீரதியின் மதியம்’ காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு நிவேதிதா, நாவலை உச்சி முகர்ந்துவிட்டார்.

“முதலில் காலச்சுவடைப் பாராட்டணும். பிழைகளே இல்லை. சமீபத்தில் நான் படித்த புத்தகங்கள் அனைத்திலும் நிறைய பிழைகள். என் புத்தகத்துக்கு நான் தான் ஃப்ரூஃப் ரீடிங் செய்வேன். ஆனாலும் பிரிண்ட்டிங் போயிட்டு வர்றப்ப பிழைகள் வந்துடும். அதை மீண்டும் சரி பார்க்கணும். என் புத்தகத்தில் 10 பிழைகள் வந்துடுச்சு. என்னிடம் 5 லட்சம் இருந்தா எல்லாப் புத்தகத்தை வாங்கி அழிச்சிடுவேன். ‘பாகீரதியின் மதியம்’ புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற காலச்சுவடு ஆட்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

நான் நன்றாக எழுதியிருப்பவர்களைப் பார்த்து, இவர்கள் என் வாரிசு எனச் சொல்லி விடுவேன். அது ஓர் அன்பு. அன்பால் அப்படி நாலஞ்சு பேரைச் சொல்லியிருக்கேன். ஆனா பா.வெங்கடேசனின் இந்த நாவல் படித்ததும், நான் அவருக்கு வாரிசாகிடலாம்னு இருக்கேன்.

என்னா எழுத்து? இந்த நாவலை எழுத அவருக்கு 6 வருஷமாச்சாம். எனக்கு இப்படியொரு நாவல் எழுத 60 வருஷமாகும். இதில் வரும் ஓவியர் ஜெமினி பாத்திரம் நான்தான். என்னை அப்படியே பிரதிபலிக்கிறார். இந்தக் கதையில் லீலா நாயுடு வர்றாங்க. அவங்க நிஜ கதாபாத்திரம். உடனே யார் அவங்கன்னு நான் இந்தப் புத்தகத்தை வச்சுட்டு, அவங்களைப் பற்றிப் படிக்க வேண்டியிருக்கு. லீலா நாயுடு யாருன்னா ஓப்ராயோட மனைவி; சரோஜினி நாயுடோட கஸின். இப்படி ஒவ்வொரு பக்கத்திலுமே ஒன்னிலிருந்து இன்னொன்னுப் போக வைக்கிறார். அவ்ளோ உழைப்பு. எதுவும் திணிக்கப்படலை. அந்தந்தப் பாத்திரங்கள் இயல்பா வந்துட்டுப் போறாங்க.

இன்செப்ஷன் படம் பார்த்ததும் அதைப் பற்றி எழுதினேன். அப்படி 1000 இன்செப்ஷன் சேர்ந்தது இந்த நாவல். ஒரு பம்பரத்தைச் சுற்றி கனவில் இருக்கோமா, நினைவில் இருக்கோமா எனச் சோதிப்பாங்க. ஆனால் இந்த நாவல் பல நிலைகளில் பயணிக்கிறது. மர்ம நாவல்னு சொல்லலாம்; இது ஒரு காதல் கதை. வரலாறும் வருது, காதலும் வருது. பாகீரதியின் மதியம் ஒரு நவீன இதிகாசம்.

அசதா சொன்னது மாதிரி, இந்த நாவலைப் படிப்பது ஒரு சவால். அப்படி ஒரு ப்ரோஸ் (prose). தமிழை எப்படிப் பயன்படுத்தியுள்ளார் தெரியுமா? அற்புதம். 107வது பக்கத்தில் ஒரு ப்ராக்கெட் (bracket), 109வது பக்கத்தில் 15வது வரியில் முடியுது. அவனை”ப்” – என்ற வார்த்தைக்குப் பின் தொடங்கும் ப்ராக்கெட் ரெண்டு பக்கத்துக்குப் பின் முடியுது. அந்த ப்ராக்கெட்டுக்குள், உள்ள ரெண்டு சப்-ப்ராக்கெட்டுக்கள் வேற வருது. எந்த ப்ராக்கெட் எதுக்குன்னு மீண்டும் போய் படிக்க வேண்டிதாக இருக்கு.

இந்த நாவல் ஒரு போதையைத் தருகிறது. எப்படின்னா, சைக்கடெலிக் (Psychedelic) இசையைக் கேட்பது மாதிரி. Tangerine Dream Love On A Real Train கேட்டுப் பாருங்க. நான் சொல்றது புரியும். மனத் தைரியம் உள்ளவர்களால் தான் இந்நாவலைப் படிச்சு முடிக்க முடியும். இல்லைன்னா மனப்பிறழ்வு ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கு. இந்த நாவலைப் படிப்பது ஒரு சவால். நாம் ஒற்றைப் பரிமாண வாசிப்பனுபவத்துக்குப் பழக்கப்பட்டுவிட்டோம். அதிலிருந்து மீண்டு, இதே போன்ற நாவல்களைப் படிக்கவேண்டும்.

எனக்கு 63 வயதாகிறது. என் வாழ்நாளில் இப்படியொரு நாவல் படிச்சதில்லை. அற்புதமான கிரியேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ். இதே போல் ஒரு நாவலை அவர் வேறு நாட்டில் எழுதியிருந்தால் கொண்டாடித் தீர்த்திருப்பாங்க.

ஆறு வருஷம் கடின உழைப்பில் இந்த நாவல் வந்திருக்கு. யோசிச்சுப் பாருங்க. எவ்வளவு உழைப்பைச் செலுத்தியிருப்பார்னு? இந்த உழைப்புக்குப் பின், அவர்கள் குடும்பத்தாரோட தியாகம் நிறையவே இருக்கும். அவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். பாரதி தமிழுக்கு என்ன செஞ்சாரோ, அந்த மாதிரியான வேலையை பா.வெங்கடேசன் செய்துள்ளார்.

பாகீரதியின் மதியம் – மகத்தான தமிழ்க் காவியம்” எனப் புகழ்ந்தார் அழகியசிங்கரிடம் இருந்து நாவலைப் பெற்றுக் கொண்ட சாரு நிவேதிதா.

“ரொம்ப எமோஷனலா இருக்கு. அதிலிருந்து வெளிவர ஒரு கதை சொல்றேன். முல்லா நசுரூதின் ஒரு கழுதையை விற்க சந்தைக்குப் போவார். அது ஒரு சோனிக் கழுதை. பார்த்தாலே தெரியும். யாருமே அதை வாங்க ஆர்வம் காட்டலை. அப்ப அவர் நண்பர் வந்து, ‘நான் வித்துத் தர்றேன். எனக்கு கமிஷன் கொடுங்க’ எனச் சொல்றார். முல்லாவும் சரின்னு சொல்றார்.

‘இது தேவலோகத்தில் இருந்து வந்து கழுதை. காலில் பாருங்க ஒரு மரு இருக்கு. அப்படியிருந்தா கடவுளின் வாகனம்னு அர்த்தம். இந்தக் கழுதை கத்தினா பணம் கொழிக்கும்; அது உங்களைஉதைச்சா நீங்க ராஜாவாவே ஆயிடுவீங்க..’ என நபர் ஏகத்துக்கும் பில்டப் தர்றார். கழுதையை வாங்க கூட்டம் கூடிடுச்சு. இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முல்லா, ‘அடடே! இந்தக் கழுதை அவ்ளோ அற்புதமான கழுதையா? இதையா விக்க இருந்தோம்? நாமளே வச்சுக்கலாம்’னு முடிவுக்கு வர்றார். நண்பர்ட்ட, ‘கழுதையை விக்க வேணாம்.நானே வச்சுக்கிறேன்’ எனச் சொல்லிட்டு, கூட்டத்தில் அதிகமா கேட்கப்பட்ட விலைக்கான கமிஷனை நண்பருக்குக் கொடுத்துட்டு கழுதையைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போயிடுறார்.

அப்படி இந்த நாவலுக்கு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்துட்டாங்க. அப்படிலாம் பெருசா நானொன்னும் பண்ணிடலை. இந்த நாவல் ஒரு சிம்பிள் ஐடியா தான். என் கதையான ‘ராஜன் மகள்’-ஐ எடுத்துப்போம். திலகரும், வ.உ.சி.யும் சேர்ந்து தொடங்கின தூத்துக்குடி ஷிப்பிங் கார்ப்ரெஷனில் ஒருவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறு தாகூர் சிபாரிசுக் கடிதம் அனுப்புவார். இதில் தாகூர், வ.உ.சி., திலகர் ஆகியோர் சரித்திரத்தில் வருபவர்கள்; தூத்துக்குடி ஷிப்பிங் கார்ப்ரெஷன் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கு. நடுவில் சிபாரிசுக் கடிதம் வாங்கிப் போகும் நபர் மட்டும் புனைவு. அது மாதிரி சாரு சொன்ன ஜெமினி ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.

ஆனா, அந்த ஆள் ஏன் கற்பனைக் கதாபாத்திரமா இருக்கணும்? இந்தக் கேள்விதான் என் நாவலுக்கான கரு. அந்த நபர் உண்மையாக இருப்பதற்கான ப்ராபபிலிட்டி (probability) இருக்கு. திலகர் சந்தித்த ஆயிரம் மனிதர்களில் ஒருவராக அந்தச் சிபாரிசுக் கடிதம் வாங்கிய ஆளும் இருக்கலாம். சரித்திரம்னா அது எப்பவோ நடந்தது. நாம் அதிலிருந்து ரொம்ப விலகி வந்துவிட்டதாக நினைக்கிறோம். அப்படி இல்லை. 2000 வருஷத்துக்கு முன் பாடலிபுத்திரத்தில் வீடு வாங்க ஒருவன் பட்ட கஷ்டத்தைத்தான் நாம் இன்னும் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சரித்திரத்தில் நாம் ரொம்ப நெருக்கமாகத்தான் இருக்கிறோம். இதுதான் என் நாவலுக்கான ரகசியம்.

சாரு, அசதா பேசினதைக் கேட்டா, ஏதோ பெருசா பண்ணிட்டதா நம்ப வைக்கிறாங்க. நல்ல நாவல் எழுதிட்டோமென்ற திருப்தி இருக்கு. ஆனா இந்த மாதிரி படிப்பவர்கள் கிடைப்பதுதான் கொடுப்பிணை. நாவலைப் படிச்சுட்டு, என்ன சொல்லியிருக்கேன்; என்ன சொல்லலை; என்ன சொல்லலாம்; இன்னும் என்னென்ன சாத்தியங்கள் இருக்கு என்று சொல்லக் கூடிய நண்பர்கள் கிடைப்பது மிக அபூர்வம். இத்தகைய அபூர்வமான வாய்ப்பு, என் முதல் நாவலான தாண்டவராயன் கதைகளுக்குக் கிடைக்கலை.

பாகீரதியுடனான ஆறு வருஷ வாழ்க்கை இதோடு நிறைவுக்கு வருகிறது. இப்ப வாசகர்கள் கைகளில் அவளை ஒப்புடைக்கிறேன்” என்று உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் எழுத்தாளர் பா.வெங்கடேசன்.

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்
நாள்: மே 22, 2016
நேரம்: மாலை 06:00

– தினேஷ் ராம்