Search
Toy marriage

‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்

காதல் திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு இலவசமாய் கிடைக்கும் ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் பெரும்பாலும் சாதி என்கிற ஆயிரங்காலத்து காரணத்தை நேரடியாக சொல்லாமல், அதை பல்வேறு வகையில் மறைமுகமாக வலியுறுத்துவதை நாம் பல்வேறு இடங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. 

இந்த ஆலோசனைகள் எல்லாம் பெரும்பாலும் அச்சுறுத்தும் தொணியில்தான் இருக்கும். 

“அவங்க குடும்ப பழக்க வழக்கம் வேற, நம்ம குடும்ப பழக்க வழக்கம் வேற, அதெல்லாம் ஒத்து வராது.”

“நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா யாரும் சப்போர்ட்டுக்கு இருக்க மாட்டாங்க.”

“அவன் உன்னை எமாத்திருவான். சொத்துக்காக உன்னை ஏமாத்துறான்.”

“உறவினர்கள் நம்மை தனிமைப்படுத்தி விடுவார்கள். மானம் மரியாதை என்னாவது?”

“நீ அவனை கல்யாணம் பண்ணிகிட்டா, நான் செத்துருவேன்.”

“அவனை தவிர வேற யாரை வேணாலும் கல்யாணம் பண்ணு. இல்லே, கல்யாணம் பண்ணாமையே இரு.”

மேலோட்டமாய் இந்த வார்த்தைகளில் எல்லாம் ஒரு வித இந்த அக்கறையும், பொதுமைத் தன்மையும் இருப்பதை உணரலாம். நிதர்சனத்தில் மேலே சொன்ன இந்த காரணங்கள் எல்லாம் விதிவிலக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். என்கிற உண்மையை மறந்தோ அல்லது மறைத்தோ பொதுமைப் படுத்தி விட்டோம் என்பதுதான் உண்மை. ஏனெனில் ஒரே சாதி திருமணத்தை செய்தால் இவை எதுவும் நேராது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.

இனி இந்த காரணங்களை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

ஒரே சாதி திருமணங்களில் கூட சில சடங்குகள் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுகிறது. அதைப் போலவே உணவு பழக்க வழக்கங்கள். என் தோழிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.தோழி வீட்டில் எல்லாரும் சைவம். ஆனால் மாப்பிளையோ அசைவம். இரு தரப்பும் பேசிய பின்னர், ”என்னால அசைவம் சமைக்க முடியாது. சாப்பிடவும் கட்டயபடுத்தக் கூடாது” என்கிற தோழியின் நிபந்தனைக்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்க திருமணம் நடந்தது. 

முன்பின்  தெரியாத பையன்-பொண்ணுக்காக, சடங்கு தொடங்கி சாப்பாடு வரை எல்லாத்தையும் காம்பிரமைஸ் பண்ண தயாராகவே நாம் இருக்கிறோம். சாதிக்காக இத்தனை விட்டுத் தரும் சமூகம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மன முதிர்ச்சியோடு மனமொத்து திருமணம் செய்ய விரும்பும் போது மட்டும், அவங்க குடும்ப பழக்க வழக்கம் வேற, நம்ம குடும்ப பழக்க வழக்கம் வேற, அதெல்லாம் ஒத்து வராது என்பதை எதில் சேர்ப்பது.

எதிர்காலத்துல உன்னை நான் சப்போர்ட் பண்ணனும்னா நான் சொல்கிறவனைத்தான் நீ கல்யாணம் பண்ணனும் என்பது பச்சையான ப்ளாக்மெயில். ஒரே சாதியில் திருமணம் முடித்தவர்களுக்கு பிரச்சினை என்று வரும் போது எத்தனை சாதிசனம் சப்போர்ட்டாய் இருக்கிறது என்பதை விவரிக்க ஆரம்பித்தால் வீசி நாறிப் போய்விடும். சாதிக்காரர்கள் எல்லோரும் சப்போர்ட் பண்ணுவதாய் இருந்திருந்தால் இன்றைக்கு எந்தவொரு சாதியிலும் வாழா வெட்டிகளோ, வரதட்சினை பிரச்சினையோ, குடும்பத் தகறாறுகளோ இல்லாமல் இருந்திருக்க வேண்டும். உண்மையில் நிலவரம் அப்படியா இருக்கிறது.

எனவே, ஒரு சாதி திருமணம் அல்லது காதல் திருமணம் செய்ய நினைக்கிறவர்கள், தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே சமாளிக்குமளவு தெம்பும், திராணியும் இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இருக்கிறதென்றால் அதை தெளிவாக சொல்லி விடலாம். சபோர்ட் பண்ணுறதும் பண்ணாததும் உங்க விருப்பம். உங்கள் சப்போர்ட் இல்லாமலும் என் பிரச்சனைகளை நானே சமாளிக்க முடியும் என்று தைரியமாக கூறி விடுங்கள்.

அவன் உன்னை எமாத்திருவான். சொத்துக்காக உன்னை ஏமாத்துறான் என்று சொல்கிறவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். வீட்டில் பார்த்து வைக்குற மாப்பிள்ளை மட்டும் எதைப் பாத்து வருகிறான்?. காதலிக்கறவனாச்சும் பார்த்துப் பேசிப்பழகி, புரிந்து என்னை பிடித்திருப்பதால் வருகிறான். ஆனால் என்னை யாரென்றே தெரியாமல் கல்யாணம் பண்ண வருகிறவன் என் சாதியையும், சொத்தையும் பார்த்துத்தானே வருகிறான்.
இவன் ஏமாத்த மாட்டன்னு என்ன உத்திரவாதம்? உங்களுக்கும் தெரியாத, எனக்கும் தெரியாத ஒருத்தனை சாதியை மட்டுமே முன் வைத்து நம்புவீர்களாம்…. ஆனால் எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை நம்ப மாட்டீர்களாம். என்ன ஒரு நியாய தர்மம்? 

உறவினர்கள் நம்மை தனிமைப்படுத்தி விடுவார்கள். மானம் மரியாதை என்னாவது? என்று கதறும் பெறொர்கள் உறவினர்களுக்குத் தரும் முன்னுரிமையை தன் பிள்ளைகளின் உணர்வுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் தருவதில்லை. உணமையான பாசம் வைத்திருக்கும் உறவினர்கள் இது மாதிரி சமயங்களில் ஆறுதலாகத்தான் இருப்பார்களே தவிர ஒதுக்கி விட்டு ஓடுகிறவர்களாய் இருக்க மாட்டார்கள். அப்படி செய்யும்போது அவர்களின் நிஜ முகத்தை அறிந்து விலகியே இருக்கலாம். மற்றவர்களுக்கு பயந்து யாரும் தன் வாழ்க்கையை அடமானம் வைக்க முடியாது, வைக்கவும் கூடாது.

நீ அவனை கல்யாணம் பண்ணிகிடிட்டா, நான் செத்துருவேன். என்று சொல்கிறவர்களிடம், இந்த கல்யாணத்துக்கு நீங்க சம்மதிக்கலைன்னா நான் செத்துருவேன், நான் செத்தா பரவால்லையா என எதிர் கேள்வி கேட்டால் என்ன பதில் வரும் என்பதை யோசித்துப் பாருங்கள். அவனை தவிர வேற யாரை வேணுன்ணாலும் கல்யாணம் பண்ணு. இல்லே, கல்யாணம் பண்ணாமையே இரு என்று சொல்வதின் பின்னால் சாதிவெறி தவிர வேறென்ன இருக்க முடியும்.

அதற்காக கலப்பு மணம் செய்து கொண்ட எல்லோருமே பிரச்சினை இல்லாமல் மகிழ்சியாய் வாழ்கிறார்களா என்ற கேள்விக்கு, சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு!, என்கிற வடிவேலுவின் வசனத்தைதான் பதிலாக சொல்ல தோணுகிறது. இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்தால் அங்கே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அது எப்பேர்பட்ட புத்தர் பேமிலியா இருந்தாலும். காதலும் ஊடலும் தமிழ் பண்பாட்டிலே ஒரு அங்கம் தான் 😉

பெண்ணடிமைத் தனத்தை பலவாகிலும் பேணிக்காக்கும் நம் திருமண முறைகளில்,  மனைவியின் கருத்தை மதித்து நடக்கிற ஆணை பலவீனமானவனாகவும், கேலிப் பொருளாகவும் உருவேற்றி வைத்துள்ளார்கள். நேர்மாறாய் கணவனின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கும் மணைவி மாதர் குல திலகமாய், மங்கையர்கரசியாய் ஆக்கப் படுகிறாள். இதுவா சம அங்கீகாரம்.

இருவரும் எல்லாவற்றிலும் சமம் என்பதை எல்லா கட்டங்களிலும் குறிப்பாக ஆண் நினைவில் கொள்ள வேண்டும். எந்த விதமான கேள்விக்கும் ‘நான் ஆண்’ என்பதோ ‘நீ பெண்’ என்பதோ பதிலாக இருக்க கூடாது. நிஜமாகவே நீங்கள் உங்கள் மனைவியை நேசித்தால், அவங்க சமயலறையில் தனியாக வேலை செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டு வேலைகளில் இருவரும் பங்கெடுப்பதன் மூலம் சேர்ந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். வெளி வேலைகளும் முடிந்த வரை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பாத்தால், பரஸ்பரம் அடுத்தவர் வேலைக்கு மதிப்பு கொடுங்கள்.

கலப்புத் திருமணம் அல்லது சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்களுக்குள் சாதி/மதம்/பாலினம்/குடும்பம்/பழக்கவழக்கங்கள் குறித்த எதிர்மறை விவாதங்களை தவிர்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக என்னதான் கோவம் வந்தாலும் ‘உன் சாதி புத்தி’ அப்படின்னெல்லாம் திட்ட கூடாது. ஆயிரம்தான் சமாதான படுத்தினாலும் இறங்கிய வார்த்தை ஈட்டிகள் தழும்பை விட்டுச் செல்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதைப் போல கோபம் வந்தால் பேசாமல் இருப்பது அதை விட பெரிய தவறு. உள்ளுக்குள் அமைதியாக எரிமலை கொதித்துக்கொண்டிருக்கும். இது தேவையில்லாத கூடுதல் மன உளைச்சலைத்தான் தரும். தான் எடுத்த முடிவு தவறோ என்று கூட நினைக்க வைக்கும். அதற்கெல்லாம் இடம் வைக்காமல், இருவருமே கோவம் வரும் போது அப்பவே அடிச்சிகிட்டு அப்பவே சமாதானம் ஆயிருங்க.

காதல் திருமணம் நம்ம பரம்பரையிலேயே இல்லை என்று வாதாடும் பலருக்கு தன் முப்பாட்டன் பெயரே தெரியாது என்பதே உண்மை. சாதிக்குள் திருமணம் தான் பண்பாடு என்று இயம்புவோர் பள்ளியிலே கூட தமிழ் இரண்டாம் தாளில் அகப்பொருள் படிக்கவில்லை என்று பொருள். தமிழ் பண்பாட்டிலே காதல் உண்டு சாதி இல்லை. அடுத்த தலைமுறையில் சாதியின் வேர் அழுகுவதை கண்கூடாய் காண முடியும். உற்சாகமாய் சிந்திப்போம். மகிழ்ச்சியாய் இருப்போம்.

– பாரதி
Leave a Reply