Search
நீ எங்கே என் அன்பே விமர்சனம்

நீ எங்கே என் அன்பே விமர்சனம்

Nee Enge En Abe review

அரிதினும் அரிதாக வரும் நாயகிக்கு முக்கியத்துவுமுள்ள படமிது. வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ எனும் ஹிந்திப் படத்தினைத் தழுவி, இயக்குநர் சேகர் கம்முலா தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை எடுத்துள்ளார்.

ஒரு ப்ராஜெக்ட்டிற்காக, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வரும் அனாமிகாவின் கணவர் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடி, அனாமிகா ஹைதராபாத் வருகிறார். அனாமிகாவின் கணவருக்கு என்னானது? அவர் கிடைத்தாரா? என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

இயக்குநர் நயன்தாராவை தமிழ்ப் பெண்ணாக்கி ஹைதராபாத்தில் சாமர்த்தியமாக நடமாடவிட்டுவிடுவதால், படத்தின் தெலுங்கு நெடி ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. அனாமிகா தங்கியிருக்கும் விடுதியின் ஒரு பக்கம் மசூதி, மறு பக்கம் பெரிய காளி சிலை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ‘அனாமிகா’ தைரியமானவர்; சக்தி மிகுந்தவர் என்பதன் உருவகமாக காளி சிலை உபயோகிப்படுத்தப்படுவதோடு, முக்கியமான பங்கும் வகிக்கிறது படத்தில்.

கஹானியில் எது பொய்யோ அது இங்கே மெய். அதாவது இல்லாத கணவனைத் தேடி வரும் வித்யா பாலன், பலரின் மரணத்திற்குக் காரணமான ‘மிலன் தோம்ஜி’யைப் பழிவாங்குவார். ஆனால் இப்படத்தில் நிஜமாகவே நயன்தாராவின் கணவன் கடத்தப்படுகிறார். காதல் கணவரைப் பற்றிய நினைவுகளால் அலைகழிக்கப்படுவதும், அவரின் பிரிவால் பரிதவிப்பதும் என நயன்தாராவின் பாவனைகள் கச்சிதமாய் ‘அனாமிகா’ பாத்திரத்தின் கையறு நிலையை நமக்குக் கடத்துகிறது. படம் முழுவதும் வியாபித்துள்ளார் நயன்தாரா. பிணவறைக்குள் சென்று வந்தாலும் அதனால் கொஞ்சமும் பாதிக்கப்படாத முரட்டுப் பெண்ணாக உள்ளார். காவல்துறை உயரதிகாரி கானாக வரும் பசுபதியின் கரடுமுரடான விசாரணைக்கு, நயன்தாரா காட்டும் எதிர்வினை அசத்தல்.

நயன்தாராவுடன் படம் முழுவதும் பயணிக்கிறார் வைபவ். ஆனால் அவர் முகத்தில் தெரியும் ‘டன்’ கணக்கான தயக்கம் அவரது பாத்திரத்தை மனதில் பதிய விடாமல் செய்கிறது. வைபவ் தனி கவனம் எடுத்துக் கொண்டு, நயன்தாராவின் கணவனைத் தேடுவதால் அவரின் உயரதிகாரிகளால் பலமுறை கண்டிக்கப்படுகிறார். முக்கியமாக பசுபதி வைபவ்விடம் காட்டும் அதிகாரத் தொனியைக் குறிப்படப்பட வேண்டும். எனினும் பசுபதி தனது வழக்கமான பாணியில் விழியை உருட்டி மிரட்ட மட்டுமே செய்துள்ளார்.

‘கஹானி’யின் க்ளைமேக்ஸ் புரட்டிப் போடும். ஆனால் இப்படம் நேர்மாறாக உள்ளது. திடீரென நயன்தாரா, சில நொடிகளில் ‘சூப்பர் ஹீரோ(யின்)’ அளவுக்கு உயர்த்தப்படுகிறார். படத்தின் அரசியலையும் மீறி, ‘இமாம்’ பாத்திரத்தின் மூலம் படம் முன்வைக்கும் முக்கியமானது. அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை படம் முழுவதும் தக்க வைக்கும் நல்லதொரு த்ரில்லர் படமாக ‘நீ எங்கே அன் அன்பே’ உள்ளது.