Search
Pon vasantham

நீ தானே என் பொன்வசந்தம் விமர்சனம்

Pon vasantham
அலைபாயுதே படத்தில் வரும் ‘எவனோ ஒருவன் யாசிக்கிறான்..’ பாடல் தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கே  இன்ஸ்பிரேஷனாம். நீ தானே என் பொன்வசந்தம் படமும் அதன் தொடர்ச்சி தானென கெளதம் வாசுதேவ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். எங்கிருந்து கருவை எடுத்தார் என்று தெரிவதால், படத்தின் கதையையும் சுலபமாக யூகித்து விட முடியும். அதாவது நாயகன் நாயகி் காதலிக்கிறார்கள். புரிதலின்மையால் சண்டை வந்து பிரிகின்றனர். சேர்ந்தார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
நாயகன் வருண் கிருஷ்ணனாக ஜீவா. பள்ளி, கல்லூரி என அவர் வயதை குறைத்து காட்ட தேவைக்கதிகமாகவே ஜீவாவின் முகத்தை மழித்து விட்டிருக்கிறார்கள். ஜீவா அருமையான நடிகர் என்றாலும், 10ஆம் வகுப்பு, ட்யூஷன் போன்ற ஏரியாக்களில் 3 படத்தில் தனுஷ் ஸ்கோர் செய்தது போல் ஜீவாவால் சோபிக்க முடியவில்லை. ஜீவாவின் உடல் திணம் காரணமாக இருக்கலாம். மற்றபடி கெளதம் வாசுதேவ் உருவாக்கிய பாத்திரத்தில் ஊற்றப்பட்ட நீர் போலவே ஜீவா நடித்துள்ளார்.
நாயகி நித்யா வாசுதேவனாக சமந்தா. கெளதம் பட நாயகர்கள் போல சொல்வதெனில், சமந்தா “அவ்ளோ” அழகாக நடித்துள்ளார். ஒரு பார்வை, ஓர் உதட்டோர புன்னகை என மனதை எளிதாக கவர்கிறார். இதற்கு படத்தின் ஒளிப்பதிவாளர்களே காரணம். சிம்ரனிற்கு அடுத்து இடுப்பை வெட்டி நடனம் ஆட ஆளில்லை என்ற குறையை தனது அறிமுக காட்சியில் நிவர்த்தி செய்கிறார் சமந்தா. அவர் ஓரிரவு தூங்காதது போல ஒரு காட்சி வருகிறது படத்தில். அதன் பின் வரும் காட்சிகளில், சமந்தாவின் முக பொலிவு காணவில்லை. அப்பவும் கவரவே செய்கிறார்.
எப்பொழுதும் போல நாயகனின் நண்பனாக சந்தானம். கல்லூரி மாணவர் பிரகாஷாக அறிமுகமாகிறார். ஏனோ சின்னி ஜெயந்த்தை ஞாபகப்படுத்துகிறார். ஆனால் சந்தானம் இல்லையெனில் படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதி போல் வறண்டு விட்டிருக்கும். தொடர்ந்து அவர் பார்வையாளர்களின் ஆபத்பாந்தவர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இடையில் ஒரு காட்சியில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுகிறார்.
வருண், நித்யா காதல் கதை இரண்டாம் வகுப்பில்(!?) இருந்தே தொடங்குகிறது. யாரையாவது பள்ளிப் பருவத்தில் காதலித்தே(!?) ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை பதின் வயதினர் மனதில் அழுத்தமாக விதைக்க உதவும் மற்றொரு படம். ஜீவாவும், சமாந்தாவும் பிரிவதற்கான காரணங்கள் என படத்தில் வருவது மிகவும் அற்பத்தனமாக உள்ளது. போதாகுறைக்கு சமந்தா சைக்காலஜி மாணவி வேறு.  காரணம் அற்பத்தனமாக இருப்பதால், பிரிவதற்கு முன் ஒவ்வொரு முறையும் அவர்கள் பேசும் வசனங்கள் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
“நீ தான் காரணம்” – நாயகி
“இல்ல. நீ தான் காரணம்” – நாயகன்
“இல்ல.. நீ தான் காரணம். சரி பிரிஞ்சிடலாம்” – நாயகி.
இதே போன்று வசனங்கள் மாறி மாறி வந்து தலையை கனக்க செய்கின்றன. பெண்கள் தான் எப்பொழுதும் காதலில் இருந்து முதலில் விலகுவார்கள் என்று சொல்லப்படுவதை நியாயப்படுத்தவே, சமந்தாவை முதலில் விலக முடிவெடுப்பவாராக சித்தரித்துள்ளார். அதற்கு இணையாக ஜீவாவையும் உளற வைத்து சமன்படுத்தி விடுகிறார். எதற்கு சண்டைப் போட்டு கொள்ளணும் என்ற புத்திசாலித்தனம் கூட கெளதம்மின் கதாபாத்திரங்களிடம் இல்லை. ‘எவனோ ஒருவன் யாசிக்கிறான்..’ பாடலில் மாதவன் ஷாலினியைப் பார்த்தே ஆக வேண்டுமென காதலுடன் கிளம்புவார். அந்தக் காதல் இந்தப் படத்தில் இல்லவே இல்லை. குடும்பம் வசதியாக இருக்க வேண்டுமென எம்.பி.ஏ. படிக்க சமந்தாவை ஜீவா பிரிகிறார். வயதிற்கு வந்த தங்கையோ, கல்யாணம் ஆகது அக்காவோ, நோயாளி பெற்றோரே இல்லை ஜீவாவிற்கு. ஆனால் ‘ஒரே சோஃபா ரொம்ப வருஷமா வீட்டில் இருக்கே!’ என்று யோசிக்கும் கணத்தில், ஜீவாவிற்கு தன் வீட்டு பொருளாதார சூழல் உறுத்துகிறது. படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்து, “புது சோஃபா”வில் அமர்ந்த பின் மெதுவாக அவருக்கு சமந்தா ஞாபகம் வருகிறது. பிறகு ஜீவா ஒரு “சுற்றுலா”க்கு போவது போல சந்தானம், ஜென்னியுடன் சமந்தாவை தேடி கிளம்புவார்.
இதற்கிடையில், பொறியியல் மட்டும் படித்தால் அவமானப்பட நேரிடும். கூடவே எம்.பி.ஏ. படித்தே ஆக வேண்டும் என்ற அபத்தம் வேறு போதிக்கப்படுகிறது. CAT எக்ஸாம் எழுதி IIM-ல் படிச்சா தான் நல்ல சம்பளம் கிடைக்குமாம். நல்லவேளை கெளதம் வாசுதேவ், ‘நான் இளைஞர்களுக்கு சொல்லும் அட்வைஸ் இது தான்’ என வாரணம் ஆயிரம் சூர்யா போல நேரடியாக ஜீவாவை களத்தில் இறக்கவில்லை. 3 – இடியட்ஸ் படத்தில் அமீர்கான் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபகம் வருகிறது: “முதலில் இன்ஜினியரிங் படிச்சான். அப்புறம் எம்.பி.ஏ. படிச்சுட்டு அமெரிக்க வங்கில வேலை செய்றான். வங்கில தான் வேலை செய்யணும்னா.. ஏன் இன்ஜினியரிங் படிச்சான்? இந்த மாதிரி கழுதைகளுக்கு வாழ்க்கைங்கிறது வெறும் வரவு, செலவு கணக்கு தான்.” ஆக இந்தப் படத்தில் வரும் கெளதம் வாசுதேவ்வின்  நாயகன், அமீர்கான் சுட்டிக் காட்டும் ஒரு கழுதையே!! கல்வி என்பது அறிவை வளர்ப்பது அல்ல; வருமானத்திற்கு வழி தேடிக் கொள்வது என்னும் விஷ கருத்தை போகிற போக்கில் தூவுகிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயாவின் வெற்றிக்கு அந்தப் படத்தின் பின்னணி இசை முக்கிய காரணம். அந்தப் படம் தந்த தாக்கத்தை இப்படம் தரவில்லை. அதற்கு இளையராஜாவின் பின்னணி இசை ஒரு காரணம். ஆனால் பாடல்களில் இளையராஜா குறை வைக்கவில்லை. “சாய்ந்து.. சாய்ந்து” என்ற பாடல் தொடங்கும் காட்சி கவிதை போல் வந்துள்ளது. நாயகியின் தோழிகளாக வருபவர் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். குறிப்பாக ஜென்னி என்னும் பாத்திரத்தில்  வருபவர். அவரது உடல் வாகை நகைச்சுவைக்காக பயன்படுத்தி இருந்தாலும், முடிவில் குண சித்திர நடிகராக்கி விட்டனர். நிறைய படங்கள் நம் பொறுமையை சோதிக்கும். ஆனால் இப்படம் பார்ப்பவரின் பொறுமையைக் குலைக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதி. யூகிக்க முடிந்த முடிவை முடிந்தளவு சுவாரசியமற்று இழுத்து சுபமாக முடிகிறார். இதே கருவை வைத்து கொண்டு இன்னும் 20 படங்கள் கெளதமால் எடுக்க முடியுமாம்.
நீ தானே என் பொன்வசந்தம் – கூட்டி கழித்துப் பார்த்தால் தலைப்பு சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில் நித்யா வாசுதேவன் பணக்கார வீட்டுப்பெண். Leave a Reply