Search
Point-Break-fi

பாயிண்ட் பிரேக் விமர்சனம்

Point Break Vimarsanam

முடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ, இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாதென்று குமுறியெழும் அழுகையையோ, இனி பொறுக்க இயலாதென வெடித்தெழும் கோபத்தையோ ‘பாயின்ட் ப்ரேக்’ என்பார்கள். நாயகனுக்கு அப்படி இரண்டு ‘பாயின்ட் ப்ரேக்’கள் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஏற்படுகிறது. ஒன்று சோகத்திலும்; இன்னொன்று பரவசத்திலும். 

கடலலையில் சறுக்கி விளையாட ஏதுவான சற்றே நீடித்த அலை, கரையிலிருந்து கடலை நோக்கி நீளும் ஒரு நீர் முனையில் வந்து மோதும் இடத்தையும் ‘பாயிண்ட் பிரேக்’ என்பார்கள்.

எதிர் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் நாயகன் எனத் தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகளும் தத்துவங்களும் விரவிக் கிடக்கின்றன. நாயகன் பெயர் யூட்டா; எதிர்நாயகன் பெயர் போதி. சமஸ்கிருதத்தில், போதி என்றால் அக ஒளி அல்லது விழிப்பு நிலை எனப் பொருள். நவோஜா எனும் செவ்விந்திய இனமொன்றில், யூட்டா என்றால் மலைகளில் இருந்து வந்தவன் எனப் பொருள்.

படத்தின் முதல் காட்சியில், செங்குத்தான மலைமுகட்டுப் பாதை ஒன்றின் மீது தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கிறான் பைக் வீரனான யூட்டா. அவனது பைக்கின் சக்கர சுழற்சியால் வாரி இறைக்கப்படும் மண் பார்வையாளர்கள் முகத்தில் விழுகிறது முப்பரிமாண அனுபவத்தில். அதகளமான ஓப்பனிங் ஆக்ஷன் காட்சி அது. இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடத்தின் பெயரும் யூட்டா (அமெரிக்கா) என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய பரப்பளவே கொண்ட பாதையற்ற நெட்டுக்குத்தலான பாறையின் உச்சிக்கு, மலை விளிம்பில் இருந்து பைக்கில் பாய்கின்றனர். அங்கு நடக்கும் அசாம்பாவிதம் யூட்டாவை உடைத்து நொறுக்கி விடுகிறது. ஆனால், இது போன்ற அசாம்பாவிதங்கள் நேரிடும் போதெல்லாம் ‘போதி’ சலனமின்றிக் கடந்து விடுகிறார். போதியை எதுவும் உடைப்பதில்லை.

ண்ட் பிரேக்

போதியும் அவரது நண்பர்களும் இயற்கை ஆர்வலர்கள். ஓஸாகி என்பவர் இயற்கைக்கு மரியாதை செய்யும் விதமாக எட்டுச் சோதனைகளின் பட்டியலை உருவாக்குகிறார். எல்லாமே விபரீத விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட சோதனைகள். அதை ‘ஓஸாகி-8’ என அழைக்கின்றனர். அதை முடிப்பதன் மூலம் ‘அக ஒளி (Enlightenment)’ கிடைக்குமென யூட்டா நம்புகிறான்; இல்லை அது தளைகளில் இருந்து விடுவிக்கும் (Liberate) என ஓஸாகி நம்பியதாக போதி சொல்கிறார். எஃப்.பி.ஐ. (FBI)-யான யூட்டா போதியைத் தடுக்க நினைக்கிறான். தெரிந்தோ தெரியாமலோ, போதியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சம்சாராங்களை எல்லாம் அழிக்கிறான். சம்சாரம் என்றால் தொடரும் சுழற்சி என பொருள் கொள்ளலாம். அதாவது மறுபிறவியை உறுதி செய்யும் தளை. அசந்தர்ப்பமாக, போதியின் குழுவில் இருக்கும் ‘சம்சாரா’வைக் கொன்று விடுகிறான் யூட்டா. இது ஓர் அழகான குறியீடு.

போதியும் யூட்டாவும் எதிரெதிர் நோக்கங்களோடு இயங்கினாலும், அவர்களின் ஆதார விருப்பம் ஒன்றே! இயற்கையை ஆராதிப்பது; அதன் சவாலை விபரீதமான முறையில் எதிர்கொள்வது. க்ளைமேக்ஸில், போதி மீண்டும் யூட்டாவின் உறுதியை உடைக்கிறார். பிரம்மாண்டமாய்த் திரண்டெழும் பெரிய அலையொன்றில் தன்னை விடுவித்துக் கொள்கிறார் போதி.

எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். முதல் காட்சியிலேயே, யூட்டா மலைமுகட்டுப் பாதையில் செய்யும் பைக் சாகசம்; அந்தரத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது; கடலலைகளில் சறுக்குவது; காற்றுக்கு மரியாதை செய்ய சிகரத்தில் இருந்து பறவை போல் உடையணிந்து (WingSuit), குதித்து மிதப்பது; பனி மலைச் சரிவுகளில் சறுக்குவது; மிக உயரமான பேரருவியொன்றின் மருங்கில் பாறைகளைப் பிடித்து ஏறுவதென படம் முழுவதும் அதகளம் செய்துள்ளனர். எரிக்சன் கோரின் ஒளிப்பதிவு ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. படத்தின் இயக்குநரும் அவரே! பேரலைகளில் மூழ்கித் திளைக்க நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். சுவிட்சர்லாந்து பனி மலைகளின் மீது பார்வையாளர்களை பறவை போல் மிதக்கவும் வைத்துள்ளார்.

சாகசப் பிரியர்கள் தவற விடக்கூடாத படம்.