Maryan-Music

மரியான் இசை – ஒரு பார்வை

தனுஷ் படத்திற்கு முதன் முறையாக ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதால் இப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அது போதாதென்று  ரஹ்மான் இசையில் கொலை வெறி நாயகனின் வரிகளுக்கு, யுவன் வேறு குரல் கொடுத்திருக்கிறார். ஆக பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் இசை வெளிவந்துள்ளது..

படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள்.

1. எங்க போன ராசா:  5/5
பாடியவர் – சக்தி ஸ்ரீ கோபாலன்
வரிகள் – குட்டி ரேவதி,  ரஹ்மான் 

கடல் படத்தின் நெஞ்சுக்குள்ள பாடலின் மூலம் பிரபலமடைந்த  சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் ஒலிக்கும் ‘எங்க போன ராசா’ பாடல் ஒரு சுகமான சோகம். பிரிவின் சோகத்தை விவரிக்கும் அந்த வரிகள் அருமை. உடன் இசைப்புயலின் மென்மையான இசை, ஒரு கணம் நம்மையும் அந்தச் சோகத்துள் சுண்டி இழுத்துக்கொள்கிறது.

2. இன்னும் கொஞ்ச நேரம்: 4.5/5
பாடியவர் – விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன்
வரிகள் – கபிலன், ரஹ்மான்  
“இன்னும் கொஞ்ச நேரம்” இனிமையான டூயட் பாடல், விஜய்  பிரகாஷ்  மற்றும்  ஸ்வேதா மோகன் குரல்களில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.. 

3. நேற்று அவள் இருந்தாள்: 3.7/5
பாடியவர் – விஜய் பிரகாஷ், சின்மயி
வரிகள் – வாலி 

வாலியின் வரிகளில் சோக மெலடியாக “நேற்று அவள் இருந்தாள்”  பாடல் அமைந்துள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும்படியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.

4. கடல் ராசா நான்: 4/5
பாடியவர் – யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் – தனுஷ் 

நிறைய எதிர்பார்புகளை தூண்டிய பாடல் இது. இசைப்புயல் இசையில்  யுவன் பாடியுள்ளார். தனுஷின் வரிகளில் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.. இப்பாடல் திரையில் காணும்பொழுது இன்னும் முழுமையாக இருக்கும் என்பது என் கருத்து.

5. சோனாப்பரீயா: 4/5
பாடியவர் – ஜாவேத் அலி, ஹரிசரண், நகாஷ் அசிஸ்
வரிகள் – வாலி 

என்ன ஒரே சோக பாடலும், மெலடி மட்டும் தானா என்று கேட்பவர்களுக்கு, இதோ ஆட்டம் போட ஒரு பாட்டு. மேற்கெத்திய இசையின் தாக்கம் அதிகமில்லாமல் வரும் ஒரு பாடல். கேட்பவர்களை நிச்சியம் ஆட்டம் போட வைக்கும்.   

6. நெஞ்சே எழு:  4.5/5
பாடியவர் – ரஹ்மான்
வரிகள் – குட்டி ரேவதி, ரஹ்மான் 

அழுத்தமான வரிகளுக்கு ரஹ்மானின் இசை மற்றும் குரல் சேர்ந்தால் கேட்கவா வேண்டும். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், “வெள்ளை பூக்கள்” பாடல் இன்னமும் எப்படி நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதோ, அத்தகைய ஒரு பாடல் தான் நெஞ்சே எழு. 

7. ஐ லவ் மை ஆஃப்ரிக்கா:  4.5/5
பாடியவர் – ரஹ்மான், ப்ளேஸ் 
வரிகள் – ப்ளேஸ் , ப்ரியான் கப்வே 

ஆப்ரிக்கன் மொழியில் வரும் இப்பாடலில் அந்நாட்டின் பாரம்பரிய இசையை நம்முன் வைக்கிறார் ரஹ்மான்.. இரண்டு நிமிடங்களே இருந்தாலும் வித்தியாசமான இசையில் ஒரு ஜாலியான பாடல்.

மரியான் பாடல்களை ரஹ்மானின் பெஸ்ட் என சொல்ல முடியாது. எனினும் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தி விடும். மார்க் கோனிக்ஸ் என்ற ஃப்ரெஞ்சுக்காரரின் ஒளிப்பதிவில் ஆஸ்கர் நாயகனின் பாடல்கள்,  திரையில் மேலும் புதுப் பரிமாணம் பெரும் என நம்பலாம்.

– இரகுராமன்

Comments

comments




Leave a Reply

Your email address will not be published.