Yaamirukka-Bayame-Review

யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமேன் விமர்சனம்

கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை.

கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு.

Yaamirukka Bayamey Oviyaமேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”களுக்கு மட்டுமேயானவை. பழி வாங்கும் ‘காஞ்சனா’ பேய்களெல்லாம் வேறு டிப்பார்ட்மென்ட் என்பதால்.. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. வேண்டுமெனில், பழி வாங்கும் பேய்களைப் பற்றி ஒன்று சொல்லலாம். அவை பெரும்பாலும் பெண் பேய்களாகவே இருக்கும். ஆணாதிக்க சமுதாயத்தில், பேயாக மாறி பழி வாங்குவதுதானே பெண்களுக்கு சுலபம்!

இந்தப் படத்தில் வருவதும் பெண் பேய்தான். ஆனால் எவரையும் பழிவாங்குவதில்லை. அதற்காக நல்ல பேய் என்று அர்த்தமில்லை. தீராத மோகத்தால் கொலைகாரியாக மாறிவிடும் பங்களா பேய் வகையைச் சேர்ந்தது. கிரண், கிரணின் காதலி ஸ்மிதா, ‘பிட்’டு படத்தில் நடித்த மேனேஜர் சரத், அண்ணனைப் போலவே குணமுடைய சரத்தின் தங்கை சரண்யா ஆகிய நால்வரும், அத்தகைய பங்களா பேய் ஒன்றிடம் சிக்கிக் கொள்கின்றனர். அந்த நால்வரையும் அந்தப் பேய் படுத்தும்பாடுதான் படத்தின் சுவாரசியத்திற்கும் கலகலப்பிற்கும் காரணம்.

ரிசார்ட் ஓனராகவும், பேயினுடைய மெயின் டார்கெட்டாகவும் நடித்திருக்கிறார் கிருஷ்ணா. ஆனால், படத்தின் பிரதான பாத்திரம் மேனேஜர் சரத்தாக நடித்திருக்கும் கருணாகரன்தான். எப்படி காஞ்சனாவிற்கு கோவை சரளாவோ அப்படி இப்படத்திற்கு கருணாகரன். பேய் வந்ததும், ‘இனி எனக்கென்ன வேலை?’ என்று பொறுப்பில்லாமல் ஓடி விடும் ‘காஞ்சனா’ லட்சுமி ராய் போல் அல்லாமல், ரூபா மஞ்சரியும் ஓவியாவும் கடைசி ஃப்ரேம்வரை தைரியமாகவும் பொறுப்புடனும் இருக்கிறார்கள். ‘இவர்களுக்கு அந்தப் பேயே தேவலாம்’ என்பது போல் நினைக்க வைக்கும் காட்சிகள் படத்தில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Director Deekayபிரசாதின் பின்னணி இசை, படத்தில் கச்சிதமாக வேலை செய்கிறது. படத்தின் முக்கியமான சம்பவங்கள் எல்லாம் இரவில்தான் அரங்கேறுகின்றன. அதை அழகாக உறுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரமி. படத்தில் நடித்த மற்றும் பணி புரிந்தவர்களின் பெயரினைப் போடும் பொழுது, அவர்களின் புகைப்படங்களையும் சேர்த்துப் போட்டிருப்பது ஆச்சரியப்படுத்தியது. முக்கியமாக அசிஸ்டென்ட் எடிட்டர்கள், அசிஸ்டென்ட் டைரக்டர்கள் போன்றவர்களின் முகம் திரையில் தெரிவதென்பது சாதாரண விஷயமில்லை. அதற்காக முதலில் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். தொடக்கச் சுணக்கத்தைத் தவிர்த்து, சுவாரசியமான திரைக்கதையாலும் கச்சிதமான க்ளைமேக்சாலும் அசத்தியுள்ளதற்கு இயக்குநருக்கு இன்னொரு பாராட்டு.

Comments

comments
3 thoughts on “யாமிருக்க பயமே விமர்சனம்

Comments are closed.