Vanakkam-Chennai-1

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். 

1. பாடல் – ஹே காற்றில் ஏதோ புதுவாசம் 
பாடியவர்கள் – பபோன், மரியா 
வரிகள் – நா.முத்துக்குமார்  

பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன்,  தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.

இவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் “அடியே” பாடலை பாடியவர். 

கிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம்  ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்.

2. பாடல் – ஒசக்கா  ஒசக்கா
பாடியவர்கள் – அனிருத், பிரகதி குருபிரசாத் 
வரிகள் – மதன் கார்க்கி 

கிராமத்துப் பின்னணியில் வரும் ஒரு அழகான மெலடி.

இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்துமே ஒருசேர சிறப்பாக அமைவது அவ்வளவு எளிதல்ல. அது தான் இப்பாடலின் சிறப்பு என்று எண்ணுகிறேன். அனிருத் இசை மட்டுமின்றி பாடுவதிலும் பின்னுகிறார். பாடலின் பிற்பகுதியில் இணையும் பிரகதி சில வரிகளையே  பாடினாலும்  அசத்துகிறார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கேட்ட அழகான அதே குரல் மீண்டும் ஒரு முறை.  தேன் போன்ற இனிமையான இப்பாடலுக்கு மதன் கார்கியின் வரிகள் பெரிய பலம்.

3. பாடல் – ஓ.. பெண்ணே!  
பாடியவர்கள் – அனிருத், விஷால் டட்லானி 
வரிகள் – நா.முத்துக்குமார் 

சந்தேகமின்றி  இளவட்டங்களின் அடுத்த மொபைல் ரிங் டோன் இது தான். 

பாலிவுட்டின் பிரபல பாடகர் விஷால் டட்லானியை தமிழில் அறிமுகபடுத்தியுள்ளார் அனிருத். விஷால் இப்பாடலுக்கு சரியான தேர்வு தான் என்று நிருபித்துள்ளார். இலவசமாக இப்பாடலை பாடியுள்ளார் அவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த ஆல்பத்தின் மிகச் சிறந்த பாடலாக இது அமையும்.
4. பாடல் – ஓ பெண்ணே  (இன்டர்நேஷனல் வெர்ஷன்)
பாடியவர்கள் – அர்ஜுன், சார்லஸ் 
வரிகள் – அர்ஜுன் 

3 படத்தில் வெளிவந்த கொலைவெறி பாடலை ஆங்கிலத்தில் பாடி அதன்மூலம் 8 மில்லியன் ஹிட்ஸ் வாங்கியவர் அர்ஜுன் . you tube இல் அந்தப் பாடலை பார்த்த அனிருத் அவரை தொடர்பு கொண்டு இப்பாடலை பாடுமாறு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் பிறந்த அர்ஜுன், அனிருத்தின் எதிர்பார்ப்பை 100% பூர்த்தி செய்துள்ளார்.

இவரையும் அறிமுகபடுத்திய பெருமை அனிருத்தையே சேரும்.

5. பாடல் – எங்கடி பொறந்த 
பாடியவர்கள் அனிருத், ஆண்ட்ரியா  
வரிகள் – விக்னேஷ் சிவன் 

போடா போடி படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கலகலப்பான வரிகள் ரசிக்க வைக்கிறது.

மேலும் பாடியவர்கள் அனிருத்தும் ஆண்ட்ரியாவுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இருப்பினும் இருவரும் ரசித்துப் பாடியிருப்பதை இப்பாடலைக் கேட்கும் போது உணரலாம்.

6. பாடல் – ஐலசா ஐலே ஐலசா
பாடியவர்கள் – அனிருத், சுசித்ரா 
வரிகள் – மதன் கார்க்கி  

மீண்டும் மதன் கார்க்கியின் வரிகளில் ஒரு அருமையான பாடல்.

சுசித்ராவின் குரலில் இப்படி ஒரு மெலடியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்பாடலுக்கு இந்தக் குரலை தேர்வு செய்ததுக்கு அனிருத்க்கு க்ரெடிட் கொடுத்தே ஆக வேண்டும்.    

அனிருத்தின் குரல், இப்பாடலிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக உள்ளது. 

7. பாடல் – சென்னை சிட்டி கேங்ஸ்டா 
பாடியவர்கள் – அனிருத், “ஹிப் ஹாப் தமிழா” ஆதி, ஹர்ட் கெளர், கன்ட்ரி சிக்கன்
வரிகள் – “ஹிப் ஹாப் தமிழா” ஆதி, ஹர்ட் கெளர்

“ஹிப் ஹாப் தமிழா” ஆதி (சென்னை) Vs ஹர்ட் கெளர்  (மும்பை)
மும்பை புகழ்ப் பாடும் பிரபல ராப் பாடகர் ஹர்ட் கெளர், அவருக்கு பதிலடி கொடுக்கும் ஹிப் ஹாப் ஆதி. இந்தப் பாடல் முழுவதிலுமே நல்ல எனர்ஜி வழிந்தோடுகிறது.

மொத்தத்தில், அனிருத்க்கு இது சந்தேகமின்றி ஹாட்ரிக் வெற்றி.  ஒவ்வொரு பாடலிலும் தன்னுடைய உழைப்பைக் கொட்டியுள்ளார்.

தன்னுடைய இசை, பாடகர்களின் தேர்வு என அனைத்திலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. 7 பாடல்களும் ஒவ்வொரு வகையில் நிச்சியம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். 

வாழ்த்துகள் அனிருத்.

வணக்கம் சென்னை – 4/5

இரகுராமன்

Comments

comments
Leave a Reply

Your email address will not be published.