Search
vazhakka en

வழக்கு எண்:18/9 விமர்சனம்

vazhakka en

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்.

இதிகாசங்கள் எழுதப்பட்ட காலம் முதல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தபடும் கருத்து. ‘கறை நல்லது தான்’ என்று ஸர்ஃப் எக்ஸல் விளம்பரத்தில் சொல்வது போல், “தர்மம் வெல்வது நல்லது தான்”  என்பதில் கிஞ்சித்தும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தர்மத்தைக் காக்க அக்காலம் தொட்டே ‘வன்முறை’ தான் ஒரே தீர்வாக முன்மொழியப்படுவது மிகவும் பரிதாபத்தற்குரிய விடயம். வழக்கு எண்: 18/9 படமும் அதற்கொரு விதிவிலக்கில்லை.

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் தமிழ்த் திரைப்படங்கள் மிக அரிது. அவ்வகையில் வழக்கு எண்: 18/9 மிக முக்கியமான படமாகிறது. விளைநிலங்கள் மனைகளாக மாறுவது, குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் என படம் நிறைய விடயங்களைத் தொட்டு செல்கின்றன. ஆனால் ‘ஏழைகளுக்கு மறுக்கப்படும் நீதி’ மற்றும் ‘சுய சாதி அபிமானம்’ என்ற இரண்டைப் பற்றியும் இந்தப் படம் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தமிழ்ப் படங்களில் வரும் புரட்சி நாயகர்கள், அதர்மத்தை அதட்டி தர்மத்திற்கு உயிர்ப் பிச்சை அளித்து விடுவார்கள். இப்படத்தில் அவ்வேலையை நாயகி செய்கிறார். நாயகிக்குள் எழும் அறச் சீற்றத்திற்கான வித்து அவரது தந்தையிடம் தோன்றுகிறது. அவரது தந்தை யாரென பார்த்தால்.. காமராஜ் மற்றும் லெனின் ஆகியவர்களைப் பற்றிய புத்தகம் படிப்பவர் என்றளவிலேயே காட்டப்படுகிறது. நாயகியின் தந்தை மறுக்கப்படும் உரிமைகளை தட்டித் தான் கேட்க சொல்லியுள்ளார். தண்டனையை வழங்கலாம் என்று அவர் தந்தை சொன்னதாக கூட இல்லை நாயகியின் வசனம். தினமும் சென்று வரும் மளிகை கடையில் உள்ளவர் கிண்டல் செய்தாலே தொட்டாற்சிணுங்கியாக சுருங்குபவர் நாயகி. ஆனால் பட முடிவில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, “ஏழைகள் என்றால் எளக்காரமா?” என பொங்கி எழுந்து விடுகிறார்.

நாயகன் ஏழை என்பது நாயகிக்கு திடீரென்று தான் புலப்பட்டதா என்ன?

நடைப்பாதையில் வேலை செய்பவன் ‘பொறுக்கி’ ஆக தான் இருக்க முடியும் என்ற தனது தாயின் எண்ணத்தை எந்தவித வலுவான முகாந்திரமும் இன்றி பிரதிபலிக்கிறார் நாயகி. அவர்கள் இருக்கும் தெருவிலேயே வசிக்கும் ஏழை ஆன ‘கலவியல் தொழிலாளி’ மீதும் நாயகிக்கு நல்லெண்ணம் இருந்ததாக தெரியவில்லை. அதே நாயகி படத்தின் முடிவில் ஏழைகளின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு பழி வாங்குகிறார். ‘சினிமாத்தன’மான நாயகி.

நாயகனின் பார்வையில், நாயகியை மணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வது போல் கனவுப் பாடல் ஒன்று வருகிறது. அந்தக் கனவில், இறந்த நாயகியின் தந்தை புத்தங்கங்கள் எல்லாம் வருகிறது. என்னக் கொடுமை இது? இந்தத் தீர்க்க தரிசனம் நாயகனுக்கு எப்படி கை கூடியது? இதற்கு நாயகன் நாயகியை அழைத்துக் கொண்டு ஏதேனும் மலையுச்சிக்கோ அல்லது பாலைவனத்திற்கோ வியர்க்க விறுவிறுக்க நடனமாட சென்றிருக்கலாம். ஏழைகள் கனவுகளை கூட ‘காஸ்ட்லி’யாக காணக் கூடாதா என்ன? நாயகனும் அவனது நண்பனும் சிறைச்சாலையில் சந்தித்து கொள்கின்றனர். அவர்களைச் சுற்றி ஒரே இறைச்சல். ஆனால் நாயகனால் நண்பனிடம் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்ல முடிகிறது. குறிப்பாக, காவல் துறை அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது உட்பட.

தொன்று தொட்ட தமிழ் சினிமா பாரம்பரியத்தில் நாயகன் நாயகிக்குள் காதல் ஏற்படுவதற்கு ஒரே காரணி தான் பெரும்பாலும் சொல்லப்படுகிறது. தன் தாயை யார் நினைவுப்படுத்துகின்றாரோ அவரை தான் நாயகன் காதலிப்பார் (பெரும்பாலும் அத்தகைய நாயகிகள் வெள்ளைத் தோளினராகவே இருப்பார்கள்). தனக்காக யார் அவமானப்படவோ, உயிரை விடவோ துணிகிறானோ அவனை தான் நாயகி காதலிப்பார். இந்தப் படமும் பாரம்பரிய விதிக்கு உட்படுகிறது. அந்தரத்தில் எகிறி அடிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் வெளிநாட்டில் எடுக்கப்படாத பாடல் காட்சிகள் இல்லாமல் இருந்தால் மட்டும் ஒரு படம் ‘எதார்த்த சினிமா’ ஆகி விட முடியாது. கலவியல் தொழிலாளி நாயகனிடம் பணத்தை வாங்கி கொண்டு நடக்கும் பொழுது காலி பிளாஸ்டிக் கோப்பையை மிதிப்பார். அதாவது அவர் குடியை அத்தோடு விட்டார் என்பதன் குறியீடாக கொள்ளலாம். குறியீடு எல்லாம் சரி தான். நெகிழ்வாக யாரேனும் சில நிமிடங்கள் பேசினாலே குடிப் பழக்கத்தை விட்டு விட முடியுமா என்ன? தமிழ்த் திரைப்படங்களில் பலரும் திருந்த எப்பொழுதும் தயாராகவே உள்ளார்கள்.

இந்தப் படம் தரும் தாக்கத்திற்கு மிக முக்கிய காரணம் கதாபாத்திரங்களின் தேர்வே!! அன்றாட வாழ்வில் நாம் காண்பவர்கள் போல் உள்ளனர். ரசிகர்களை சுலபமாக ஆக படத்துடன் ஐக்கியப்படுத்த கதாபாத்திரங்கள் உதவுகின்றனர். ‘வேட்டை’ போன்ற படங்களை இயக்குவதற்கு பதில் இம்மாதிரி படங்களைத் தொடர்ந்து தயாரிக்கலாம் லிங்குசாமி.

வழக்கு எண்:18/9 – எதார்த்த தமிழ் சினிமாவின் கானல் நீர்.Leave a Reply