Search

ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம்

மு.கு.:  ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா? என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை.

கூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், “மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட்  கணக்டட்” எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி மக்களை இணைத்து தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.

ஃபேஸ்புக் ஒரு வெப்சைட் அதிலென்ன பெரிய தொழில்நுட்பம், வெங்காயம் என கேள்வி எழலாம். தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் எவ்வளவு சிக்கலான படைப்போ அதே போல் ஃபேஸ்புக்கும் மிக சிக்கலான பொறியியல் படைப்பின் உதாரணமே!

பேஸ்புக்கின் நீள அகலம்:

* 58 மெகாவாட் மின்சாரம் (சென்னை மாநகராட்சி அனைத்து தெருவிளக்குகளை எரிக்க பயன்படும் மின்சாரம் போல் மூன்று மடங்கு மின்சாரம் )  ஃபேஸ்புக்கின் 1.8 லட்சம் சர்வர் கணினிகளின் பண்ணையை இயக்குகிறது.

* பேஸ்புக் இமேஜ் சர்வர்கள் ஒரு நொடிக்கு சராசரியாக 12 லட்சம் போட்டோக்களை (நான்கு வெவ்வேறு ரெசலூஷனில்) ப்ராசஸ் செய்கிறது. உலகில் உள்ள அனைத்து இமேஜ்களை கையாளும் தளத்திலுள்ள இமேஜ்களின் கூட்டுத்தொகை (ஃப்ளிக்கர் உட்பட), பேஸ்புக் இமேஜ்களின் எண்ணிக்கையை விட குறைவானதே!

* நாளொன்றுக்கு சுமார் 10,000 கோடி ரெக்வெஸ்ட்கள் பேஸ்புக் சர்வர்களால் ப்ராசஸ் செய்யப்படுகிறது.

பேஸ்புக் சந்திக்கும் பொறியியல் சவால்கள்:

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற கால்பந்துப் போட்டியை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரிலும் தொலைக்காட்சிப் பெட்டியின் ஊடாகவும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். நடு நடுவே இடைவேளை விடப்படுகிறது. ஒவ்வொரு இடைவேளை நேரத்திலும்  மக்கள்குளிர்பானம் குடிப்பதற்கு ப்ரிட்ஜ்ஜைத் திறக்கிறார்கள். சூடாக எதாவது நொறுக்கு தீனி சாப்பிட மின் அடுப்பை பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒருசேர நிகழும் தொடர் விளைவுகளால் மின்சாரம் அதிரடியாக விழுங்கப்படுகிறது. எனவே இட்டாய்ப்பு மின்நிலைய பொறியாளர்கள் உற்பத்தி மற்றும் பகிர்மான டேஷ்போர்டுகளை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

ஆனால் ஃபேஸ்புக்கில் தினம் தினம் திருவிழாதான். கோடிக்கணக்கில் ஸ்டேட்டஸ், லைக்குகள், ஈவண்ட், கம்மெண்ட்டுகள், போட்டோ, பேஜ்  என இடைவிடாது சர்வர்களுக்கு ரெக்வெஸ்ட்கள் குவிகின்றன. இங்கு வேகம் மிக முக்கியம். ஒவ்வொரு மில்லி செகண்ட்டும் மதிப்பு மிக்கவை. சர்வர் கணினிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் மட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. சர்வர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவற்றை நிர்வகிப்பது சிக்கலிலும் சிக்கலானதாகி விடுகிறது. இவற்றை கையாள ஃபேஸ்புக் தனக்கு வரும் அளவற்ற ரெக்வெஸ்ட்டுகளை அனைத்து சர்வர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் ‘லோடு பேலன்ஸ்’ மற்றும் ‘ஸ்கேலிங்க்’ முறைக்கு பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

ஹிப்பாப் பார் பிஎச்பி:

பேஸ்புக்கின் பெரும்பாலான ஃப்ரண்ட் எண்ட் கோட் திறந்தமூல நிரலியான பிஎச்பி-யில் எழுதப்பட்டுள்ளது. பிஎச்பி சிறந்த ஸ்கிரிப்ட்டிங் மொழியானாலும் சர்வர் கணிணிகளின் கோர்களை முழுமையாக பயன்படுத்த அதன் செயல்திறனை மேம்படுத்துவது என்பது கட்டாயமானதாகிறது. “ஹிப்பாப்” பிஎச்பி  நிரலிகளை அதிவேக C++ மொழிக்கு மாற்றி  செயல்திறனை மேம்படுத்துகிறது (C++ கணிணியின் வன்பொருளுடன் நெருக்கமாக உறவாடும் திறமை கொண்டது). “ஹிப்பாப்” முற்றிலும் ஃபேஸ்புக் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிக்பைப்:

பேஸ்புக்பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு தொழில்நுட்பமான “பிக்பைப்”பேஸ்புக் பக்கங்களை தனித்தனி பகுதிகளாக (பேஜ்லெட்ஸ்) பிரித்து பேர்லலாக இயக்குகிறது. அதாவது சாட், வால், அப்டேட்ஸ் என ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் இணையாகவும் இயங்கும்.

மெம்கேட்ச்டு:

அப்பாச்சி வெப்சர்வருக்கும் மைஎஸ்க்யுஎல் டேட்டாபேஸ் சர்வருக்கும் இடையே ஆயிரக்கணக்கான “மெம்கேட்ச்டு” சர்வர்கள் தகவல்களை அதிவேகமாக கொண்டு வந்து கொடுக்கும் வேலையை செய்கிறது.

இதைதவிர்த்து பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட போட்டோக்களை கையாள “ஹேஸ்டேக்”,தகவல்களை முறையாக சேமிக்க “கசாண்ரா”, அதிவேக செயல்பாட்டிற்கு “வார்னீஸ்” மற்றும் ஹடாஃப், ஹைஃப் என இன்னும் வாயில் நுழையாத பெயர்களைக் கொண்ட பல்வேறு தொழில்நுட்பம், சர்வர் கணிணிகளை ஆற்றல் மிக்க உலக நாயகன்போல் செயல்படச் செய்கிறது.

ரிலீஸ் எஞ்ஜினியரிங்:

பிஎச்பி, C++, எர்லேங்,ஜாவா என தனது தேவைக்கேற்ப அனைத்து கணிணி மொழிகளையும்,தலைசிறந்த அல்காரிதங்கள் மற்றும் ஆற்றல் மிக்க வன்பொருட்களை  ஒருங்கிணைத்து பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும் ஃபேஸ்புக் தொடர்ந்து தனது பயணாளர்களை தக்க வைக்க, பல்வேறு புதிய சேவைகளை சேர்த்த வண்ணம் உள்ளது. இந்தப் பணியில் ரிலீஸ் என்ஜினியர்கள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு மாற்றம் அல்லது புதிய சேவையை  இணைக்க தளத்தை  சிறு இடைவேளையில் நிறுத்தி இயக்க வேண்டியது கட்டாயமானதாகும். ஆனால் ஃபேஸ்புக் போன்ற பிரம்மண்டமான தளத்தை ஒரே ஒரு வினாடி நிறுத்தினால் ஏற்படும் பாதிப்பானது ஒரு சில வினாடிகள் வந்து செல்லும் நிலநடுக்கம் பூமிக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதுபோன்ற பாதிப்பை பேஸ்புக் சாம்ராஜ்யத்திற்கு ஏற்படுத்திவிடும். இதை தவிர்க்க பொறியாளர்கள் பிட்டோரண்ட் எனும் பியர்-டு-பியர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும் தளத்திலே புதிய சேவையை இணைக்கிறார்கள். சரியா சொல்லணும்னா.. வண்டி ஓடுறப்ப வீல்ல காத்து பிடிக்கற வேலை இது.

பொதுவாக சிறிய மாற்றங்களை ஒவ்வொரு நாளின் இறுதியிலும் பெரிய மாற்றம்/சேவையை ஒவ்வொரு செவ்வாய் மதியமும் சர்வர்களில்  இணைக்கிறார்கள். பல வகையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இவை ரிலீஸ்க்கு வருகிறது. எனினும் “ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (தாங்குதிறன்) எனும் சோதனையை லைவ் சர்வர்களின் மூலம் மட்டுமே செய்யமுடியும். லைவ் சர்வர்களில் நேரடியாக செய்யப்படும் இந்தச் சோதனையில் ஏதாவது சிறு தவறு நிகழ்ந்தாலும் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். இதை தவிர்க்க பொறியாளர்கள் “கிராட்ஜுவல் ரிலீஸ்” மற்றும் “டார்க் லான்ச்” எனும் முறையில் முதலில் தனது குழுவின் மூலமும் பிறகு பேஸ்புக் ஊழியர்கள் என மெல்ல ஒரு குறிப்பிட்ட வகையான பயனாளிகள் மட்டும் புதிய சேவையைப் பயன்படுத்தச் செய்து குறைகள் இருப்பின் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்து வெற்றிகரமாக அனைவரும் பயன்படுத்துவது பொல செய்கிறார்கள்.

அறிவியலையும் கணிதத்தையும் வெறும் மதிப்பெண் பட்டியலின் அங்கமாக நினைக்கும் பலர் தொழில்நுட்பத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு அதன் பயன் முழுவதையும் அனுபவித்துக் கொண்டு, ‘இந்த செல்போனு, இன்டர்நெட்டு எல்லாம் வேஸ்ட்டு நாங்களாம் அப்ப..’ என தொழில்நுட்பத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் இயலாதவர்கள் ஒருபுறம் இருக்க.. முற்போக்குவாதிகளாகவும், சிந்தனை சிற்பிகளாகவும்  தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் “வினவு”  உலகஅரசியல் பேசுவதாக நினைத்து கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவையும், அமெரிக்க நிறுவனங்களையும் எதிர்க்கும் விதமாக.. பேஸ்புக் அதன் பயனாளர்களை கூறுகட்டி விற்பதாக வளைத்து வளைத்து எழுதியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் தனது தளத்தில் விளம்பரங்களை வெளியிடுவதாகவும் பயனாளர்களுக்கு தெரியாமல் அவர்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை கொள்ளை அடித்து பணம் சம்பாதிப்பதகவும் சொல்கிறது. உழைக்கும் மக்களுக்காக போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் வினவு ஃபேஸ்புக்கிற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும் அந்த உழைப்பாளர்களுக்கான ஊதியத்தை திருட்டுக்குச் சமமாக சித்தரிக்கலாமா?? அதெல்லாம் கிடையாது கார்ப்ரேட்  நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் தொழிலாளர்கள் இல்லை.. அவர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்கள் எனச் சொன்னால் கிங்ஃபிஷ்சர் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காத பிரச்சனையைப் பற்றி எழுதும் போது பாதிக்கப்பட்வர்கள் கார்ப்ரேட்  நிறுவன தொழிலாளர்களாக தெரியவில்லையா??

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எனும் வெகுஜன மக்களை சென்றடையாத அச்சு இதழ்களை ரூ.10க்கு விற்பனை செய்கிறது. இதை தனது தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் வினவு அச்சுப்பதிப்பை ரூ.10 க்கு விற்பனை செய்யும் நோக்கம் என்ன? பேப்பர் மற்றும் ப்ரிண்டிங் செலவுகளுக்காக இந்தப் பணம் வசூலிக்கப்படுவதாக சொன்னால், உலகில் உள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிக மக்களை பயனாளர்களாக கொண்டுள்ள ஃபேஸ்புக் தனது சேவையை வழங்க தொழிற்சாலைகள் போல் இயங்கிக் கொண்டிருக்கும் டேட்டா சென்டர்களுக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு செலவே இல்லையா? ‘ஃபேஸ்புக் உங்களை விற்கிறது’ என்ற வாசகம் எவ்வளவு விஷம் தடவிய வாக்கியம். இது தகவல் யுகம். பயனாளர்களின் விருப்பங்களை தகவல்களாக விற்பது பயனாளர்களை விற்பது ஆகுமா? மக்கள் கூடும் திருவிழா கூட்டத்தில்.. வினவும் கூட தன்னை விற்று கொள்ள ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தினை தொடங்கி வைத்துள்ளது. என்னமோ போங்க. 

பி.கு.: 

1. ம.க.இ.க.வினர் சிகரெட் பிடிக்க மாட்டார்கள்; பீடி மட்டுமே பிடிக்கும் கொள்கைக்காரர்கள் என எங்க கிராமத்தில் பேசிப்பாங்க. ஆனா வினவு  தன் தளத்தை அமெரிக்க கம்பெனியான  GoDaddy-யில் ஹோஸ்ட் செய்துள்ளது? ஏன்.. இந்தியாவில் ஹோஸ்டிங் கம்பெனிகள் இல்லையா என்ன? என்னப் பொடலங்கா கொள்கையோ போங்க!? உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தான் போல!!

2. //ஒரு கவிதையையோ இல்லை படத்தையோ இல்லை ஒரு கார்ட்டூனையோ பேஸ்புக்கில் போட்டோ பகிர்ந்தோ புரட்சியாளர் ஆனவர்கள் ஆயிரம் பேர்.//

எகிப்தில் நடந்த புரட்சிலாம் கணக்கில் வராதா!?சரி அது வேற நாடு. இந்தியாக்குள்ள தமிழ் நாட்டுக்கு வருவோம். வினவின் கொள்கைப்படி புரட்சின்னா.. களத்தில் இறங்கணும்னு கைதாகணும். அண்ணன்களா.. இப்ப இணையத்தில் கூவினாலும் உள்ள தள்ளிடுறாங்க!!

3. மார்க் ஜக்கர்பெர்க் என்னும் உண்மையான உழைப்பாளிக்கு இவ்வெதிர்வினை சமர்ப்பணம்.




Leave a Reply