Search

எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம்

Expendables 3 Review

நட்சத்திரப் பட்டாளங்களை ஒன்றிணைத்து படமெடுப்பது என்பது சாதாரண விஷயமன்று! வெற்றிகரமாக மூன்றாவது முறையாக இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் சில்வஸ்டர் ஸ்டலோன். நான்காம் முறையும் செய்வார் என்று நம்புவோமாக! அந்நாளைய வ்ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகன், கவர்ச்சிகர ஜேம்ஸ் பாண்ட்டான பியர்ஸ் பிராஸ்னன் போன்றோரும் அடுத்த பார்ட்டில் இணைவதாகத் தெரிகிறது.

படத்தின் தொடக்கமே மிக அதிரடியாகத் தொடங்குகிறது. ஒரு ட்ரெயினையே சிறைச்சாலையாகக் கொண்டு, டாக்டர் டெத் எனும் கைதியை சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்றனர். ஹெலிகாப்டரில் வரும் சில்வஸ்டர் ஸ்டலோன் குழுவினர் டாக்டர் டெத்தை மீட்கின்றனர். ஆனால், டெத் தப்பிப்பதைவிட்டு ட்ரெயினையே ஆயுதமாக்கி ராணுவ சிறைச்சாலை மீது ஏவி நிர்மூலமாக்குகிறார். பிளேட் ஹீரோ வெஸ்லீ ஸ்னைப்சுக்கும், படத்துக்கும் இதைவிட அதிரடியானதொரு அறிமுகம் தர இயலாதென்றே தோன்றுகிறது. டாக்டர் டெத், எக்ஸ்பேண்டபிள்ஸ் குழுவின் பழைய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவுக்கு கடத்தப்படவுள்ள ஆயுதங்களைத் தடுக்க, எக்ஸ்பேண்டபிள்ஸ் குழு முயல்கிறது. அப்பொழுது, எக்ஸ்பேண்டபிள்ஸ் குழுவைத் தொடங்கியவரில் ஒருவரான ஸ்டோன்பேங்க்ஸ்தான் அந்த ஆயுத கடத்தலை நடத்துகிறார் என பார்னி ராஸ்க்குத் தெரிய வருகிறது. குழுவில் ஒருவரான ஹேல் சீசருக்கு அடிபட்டு உயிருக்காகப் போராடுகிறார். குழுவின் தலைவரான பார்னி ராஸ், நண்பர்களுக்கு எதுவும் ஆகக்கூடாதென புது குழுவை உருவாக்குகிறார். அந்தப் புது குழுவை கடத்தி விடுகிறார் ஸ்டோன்பேங்கஸ். தனியொருவராக குழுவில் உள்ளோரை மீட்க முனையும் பொழுது, கால்கோ எனும் முன்னாள் ஸ்பானிய ஷூட்டரும் பழைய குழுவும் பார்னி ராஸுடன் இணைந்து கொள்கிறது. புது குழு உறுப்பினர்களை பார்னி ராஸ் மீட்டாரா என்றும் ஸ்டோன்பேங்க்ஸை சி.ஐ.ஏ.வின் ஆக்ஞைப்படி உயிருடன் பிடித்தாரா என்பதற்கு விடையுடன் படம் முடிகிறது.

மெல் கிப்ஸன் ஓயாமல் பேசுபவராக ஜாரோ (Zorro) புகழ் ஆண்டனியோ பண்டெரஸ் நடித்துள்ளார். படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். துப்பாக்கியை கையில் எடுத்து சுடுவதை ஏதோ தேவ ஊழியம் செய்யக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறார். சி.ஐ.ஏ. அதிகாரியாக வரும் ஹாரிஸன் ஃபோர்ட் எதிர்பாராத தருணத்தில் ஆக்ஷனில் குதித்து அசத்துகிறார். இந்த மூன்றாம் பாகத்தை தனியொரு ஆளாகச் சுமப்பது ஸ்டைலிஷான வில்லன் ஸ்டோன்பேங்க்ஸாக வரும் மெல் கிப்ஸன்தான். சண்டை காட்சிகளைவிட, ஏன் சண்டை என ஒரு காரண வரலாற்றை உருவாக்குவதுதான் சவால் என்கிறார் சில்வஸ்டர் ஸ்டலோன். கதையிலும், திரைக்கதையிலும் அதற்கான மெனக்கெடலை சில்வஸ்டர் ஸ்டலோன் எடுத்துள்ளது தெரிகிறது. அத்தனைப் பேருக்கும் முக்கிய பங்கு கொடுக்கணும் என்ற சவாலும் சில்வஸ்டர் ஸ்டலோனுக்கு உள்ளது. ஜெட் லீ மட்டும் தனித்துவமற்ற பாத்திரத்தில், மற்றொரு ஆளாக வந்து போகிறார். மற்ற அனைவருக்கும் முடிந்தளவு காட்சிகளை வடிவமைத்துள்ளார் சில். விசேஷமாக எதுவும் இல்லையெனினும், ஜேசன் ஸ்டெத்தும், டால்ஃப் லண்ட்க்ரெனும், அர்னால்டும் தனது இருப்பை படத்தில் தக்கவைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் 50+ வயதினர் மட்டுமே இருந்த எக்ஸ்பேண்டபிள்ஸ் குழுவில், இம்முறை 30+ சிலரையும் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ளைமேக்ஸ் காட்சி ஒரு சிதலமடைந்த கட்டடத்தில் எடுத்துள்ளனர். பீட்டர் மெஞ்சீஸ் ஜூனியரின் ஒளிப்பதிவும், சீன் ஆல்வர்ஸ்டன் பால் ஹார்பின் படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பிற்கு உதவுகிறது. படத்தை ரசிக்க நடந்தாலும், படம் முடிந்து வெளியில் வரும் பொழுது மீண்டுமொரு கன்-ஃபைட்டிங் படம் பார்த்த அயர்வையே தருகிறது.