Search

காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி

Kaadhalum Kadanthu Pogum

சூது கவ்வும் படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த நகைச்சுவைப் படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று நகைச்சுவை அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் நகைச்சுவை இருந்து கொண்டே இருக்கும்.

‘சத்யா’ படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘ப்ரேமம்’ படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை, “என்னய்யா இந்தப் பொண்ணு இப்படி நடிக்கிறா?” என்று விஜய் சேதுபதி பாராட்டினார். போலிஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டே இருக்கும்.

‘சூது கவ்வும்’ படத்தில் நயன்தாராவுக்கு கோயில் கட்டும் காமெடி காட்சிக்கு எப்படி நல்ல வரவேற்பு கிடைத்ததோ, அதே போல இப்படத்தின் காமெடி காட்சிகளுக்கும் கிடைக்கும்.

நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே!

நலன்தமிழ் சினிமாவில் உடனே நட்பு உருவாகி விடுவது போல பண்ணியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் நட்பு வளரும் காலகட்டத்தை படிப்படியாகக் காட்டியிருக்கிறார்கள். காட்சிகளில் நகைச்சுவை கலந்து அக்காட்சிகள் மூலமாக நட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.

இப்படத்தில் 2 பாடல்கள், 2 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியை ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டிடத்திற்கு விஜய் சேதுபதி தனது நண்பருடன் சென்று சண்டையிட்டு விட்டு மறுபடியும் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து நடந்து போவார். இதை ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. இச்சண்டைக் காட்சியை ஹரி – தினேஷ் பண்ணியிருக்கிறார்கள்.

“இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி.