Search

குற்றம் கடிதல் விமர்சனம்

குற்றம் கடிதல் விமர்சனம்

62ஆவது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் வகுப்பு மாணவண் ஒருவனை ஆசிரியை அறைந்து விடுகிறார். அம்மாணவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. பின் என்னானது என்று பரபரப்பாகச் செல்கிறது படத்தின் கதை.

வழக்கமான சினிமாவிலிருந்து வழுவி ஒரு சம்பவத்தை பிரதானமாகக் கொண்டு படமெடுத்துள்ளார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிந்து, ஓர் ‘அறை’யில் தொடங்கும் படம் அசுர வேகமெடுக்கிறது. அங்குத் தொடங்கும் பதற்றத்தை, கடைசி நொடி வரை அவரது திரைக்கதை தக்க வைக்கிறது.

பாலியல் கல்வியின் அவசியம் குறித்த முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. ஆனால் படம் சூடு பிடிக்கத் தொடங்கியதும், ‘ஆசிரியர் மாணவர்களை அடிக்கலாமா கூடாதா?’ என்று விவாதத்துக்குள் நுழைகிறது. விறுவிறுப்பை கடைசி வரை தக்க வைக்க இந்த விவாதம் உபயோகிக்கப்பட்டாலும், “பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது” என்பது போல் படத்தை அழகாக முடித்துவிட்டார்.

‘எது குற்றம்?’, ‘யார் குற்றம் செய்தனர்?’, ‘எப்படி பகை தவிர்க்கப்பட்டது?’ என்ற எந்தக் கேள்விக்கும் படத்தில் பதிலில்லை. ஏனெனில், “குழந்தைகளைக் கண்டிக்காமல் வளர்க்க இயலாது” என்று விவாதத்துக்கு உறுதியான முற்றுப்புள்ளி வைக்கிறார் கல்வித்துறை அதிகாரியாக வரும் பெண்மணி. படத்தின் பிரதான பாத்திரம் மெர்லினாகக் கலக்கியிருக்கும் ராதிகா பிரசித்தாவோ, தானேற்ற பாத்திரத்தின் மதம் சார்ந்த நம்பிக்கைகள் உருவாக்கிய குற்றவுணர்ச்சிகளின் காரணமாக, “நான் அடித்தது தப்புதான்” என ‘வாக்குமூலம்’ தருவதோடு மட்டுமல்லாமல், “மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளாக நினைக்கவேண்டும்” என்றும் சொல்கிறார். சரி தான், ஆனால் எந்த வீட்டில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் அடி வாங்காமல் வளர்கின்றனர்?

‘சிங் எ சாங்’ என்ற பாடலில் வரும் ஆங்கில ஆசிரியையான ஐஸ்வர்யா நிஜத்திலும் ஓர் ஆசிரியையே.! கதை விவாதக் குழுவில் அவரும் ஓர் அங்கம் என்பதோடு, இயக்குநர் பிரம்மாவின் மனைவியுமாவார். அதனால்தான் என்னவோ, மேனேஜ்மென்ட் பார்வையிலிருந்தும் இந்த விஷயத்தை அணுகும் விதத்தையும் பிரம்மாவால் காட்சிப்படுத்த முடிந்துள்ளது போலும். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம், அனைவருமே நல்லவர்கள், மீடியாக்களைத் தவிர்த்து. ‘செய்திகளை முந்தித் தரணும்’ என்ற அவர்களது எல்லை மீறிய அவசரத்தையும், ‘விவாதத்தில் அசை போட என்ன தலைப்பு கிடைக்கும்?’ என்ற செய்தி சேனல்களின் தேடலையும் வேண்டிய மட்டுக்குக் கலாய்த்துள்ளனர் (தேசிய விருது வாங்கிய காக்கா முட்டை படமும் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது).

சிறுவனின் மாமாவாக நடிக்கும் பாவெல் நவகீதன் திரையில் தோன்றும் போதெல்லாம் நடுக்கம் ஏற்படுகிறது. முதலில் ‘அறை’, பின்தான் பேச்சே! சிறுவனின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யாவும் அசத்தியுள்ளார். கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகளிலேயே பிரம்மா தனது வெற்றியை உறுதி செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. பள்ளி முதல்வரின் மனைவியாக தன் இழப்பை வெகு இயல்பாக எடுத்துச் சொல்லி கனக்க வைக்கும் துர்கா, பிறப்புறுப்புகளைப் பற்றி பாடமெடுத்து மாணவர்களிடம் கை தட்டல் வாங்கும் சயன்ஸ் டீச்சராக வரும் நிகிலா கேசவன் என அனைவருமே சிறப்பாகப் பங்காற்றியுள்ளனர். பள்ளி முதல்வராக நடித்திருக்கும் குலோத்துங்கன், மெர்லினின் கணவர் மணிகண்டனாக நடித்த சாய் ராஜ்குமார், மணிகண்டனின் ‘சிங்’ நண்பர், காவல்துறை பெண் அதிகாரி என ஒருவர் பாக்கியில்லாமல் படத்துக்கு நியாயம் செய்துள்ளனர். மணிகண்டனின் அற்புதமான ஒளிப்பதிவும், ஷங்கர் ரங்கராஜனின் இசையும் அற்புதமாக உள்ளது. 

செழியனாக நடித்திருக்கும் மாஸ்டர் அஜய்யையும், அவனது சேட்டையையும் அனைவருக்கும் பிடிக்கும். வகுப்பில் படிக்கும் சக மாணவிக்கு முத்தம் தரும் செழியனின் செய்கை மிக இயல்பானதெனச் சொல்லும் இயக்குநர்; அதே ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவியின் ‘போட்டுக் கொடுக்கும் குணம்’ மட்டும் இயல்பானதன்று என நாசூக்காய் இனச்சாயம் பூசி கைதட்டலை அள்ளுகின்றார். படம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், சுபமாய் முடிந்து நிறைவாய்த் தருகிறது. ஆயிரம் முறைக்கு மேல் வீதி நாடகங்களைப் போட்டிருக்கும் இயக்குநர் பிரம்மாவின் திரைப்பிரவேசம் தொடர் வெற்றிகளால் ஆனதாய் அமையட்டும்.