Search

சரபம் விமர்சனம்

Sarabham Tamil review சரபம் விமர்சனம்

சரபம் – சிங்க முகம் கொண்ட பறவை.

ஒருவனின் ஆசையைத் தூண்டி, அவனை பகடையாக்கி விளையாடுகின்றனர் கோடீஸ்வர தந்தை ஒருவரும் அவரது மகளும். அந்த விளையாட்டின் முடிவுதான் படம்.

இது முழுக்க முழுக்க கதாநாயகி சப்ஜெக்ட். சிங்க முகத்தினைக் கொண்ட பறவை என படத்தின் தலைப்பான சரபமும் நாயகியின் அகத்தைத்தான் குறிக்கிறது போல! ஆனால் இந்தப் படத்திலுமேயே அசத்தலாக நடித்துள்ளார் நாயகன் நவீன் சந்திரா. சின்ன சின்ன முகபாவங்களில்கூட கவர்கிறார். பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்கான கோபங்கள் அவருக்குள் எழுந்தாலும், முடிவில் ஒரு சராசரியாகவே இருப்பது ஆறுதல்.

நாயகியாக சலோனி லுத்ரா. அறிமுகக் காட்சி முதலே படத்தின் ஓட்டத்திற்கு எண்ணெய் ஊற்றுபவராக உள்ளார். அந்நியமான முகம் என்றாலும் மனதில் சுலபமாகப் பதிகிறது. நடை, உடை, பாவனை என அனைத்திலும் ஒரு அசால்ட்டான தெனாவெட்டை வெளிபடுத்துகிறார்.

இயக்குநர் அருண்மோகன் நடிகர் அனுமோகனின் (படையப்பரே! பாம்பு புத்துக்குள்ள கை விட்டா கடிச்சிறாதுங்களா!?) மகன். கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணி புரிந்தவர். மூன்று பிரதான பாத்திரங்கள், குறைவான லோக்கேஷன்கள் என மிகக் கச்சிதமாக திரைக்கதை புனைந்து கதை எடுத்துள்ளார். அம்மூவரில் ஒருவரான ஆடுகளம் நரேன் அமர்க்களப்படுத்தி உள்ளார்.  ஒளிப்பதிவாளரான கிருஷ்ணன் வசந்த்தும், படத்தொகுப்பாளரான லியோ ஜான் பாலும் நேர்த்தியாக படத்தை உருவாக்க உதவியுள்ளனர்.

நாயகன் நாயகி இருவருக்குமே செலவு செய்யப் பிடிக்கும். அதுக்காக பணம் வேண்டுமென நினைக்கிறார்கள். இப்படித் தொடர்ந்து, நியாயமற்ற வழியில் பணம் சம்பாதிக்கும் கதையாகவே தொடர்ந்து தயாரிக்கிறார் தயாரிப்பாளர் C.V.குமார். ‘நானென்னப் பண்ண.. இயக்குநர்கள் அப்படி கதை சொல்றாங்க’ என்பது அவர் வாதம். இடைவெளியில் இருந்து படத்தில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட். ஆனால் நாயகனை ஏன் தூண்டிலாக உபயோகிக்க வேண்டுமென்பதற்கான வலுவான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை. அதைத் தவிர்த்து, பணம் சம்பாதிக்க என்ன தப்பு வேண்டுமானால் மாட்டிக்காமல் செய்யலாம் என்பதை விறுவிறுப்புடன் சொல்லியுள்ளனர்.