Search

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

Sawaari Movie

“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினார் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன்.

‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார்.

‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா செய்யலாம்’ எனச் சொல்லியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்ததோடு அன்றி, “நீங்க கிஷோர்க்கிட்ட போய் இந்த ஸ்க்ரிப்ட் கொடுங்க. அவருக்குக் கண்டிப்பா பிடிக்கும். உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க. டிமாண்ட் செய்ய மாட்டார். நான் கிஷோர்கிட்டப் பேசுறேன்” என்றும் குகனிடம் சொல்லியுள்ளார் செழியன்.

செழியன் கணித்தவாறே கிஷோரும் இப்படத்தை ஒத்துக் கொண்டுள்ளார். சவாரி படக்குழு இளையவர்களால் ஆனது. படத்தில் சைக்கோவாக நடித்திருக்கும் மதிவாணன், “இயக்குநருக்கு 24 வயதுதான் இருக்கும். ஆனா படம் செமயா வந்திருக்கு” என்றார்.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் குகன், “சிவப்பு ரோஜாக்களுக்குப்பிறகு, தமிழ்ல ஒரு நல்ல சைக்கோ படம் வரலை. அதே போல், டென்ஸ் ஃபாரஸ்ட் த்ரில்லரும், ரோட் த்ரில்லரும் தமிழில் வந்ததில்லை. ஜில் ஜங் ஜக்கிற்கு முன், ஒரு விண்டேஜ் காரை வச்சும் படம் வந்ததில்லை. இந்த மூனையும் இணைச்சுத்தான் சவாரி கதையை உருவாக்கினேன்” என்றார்.

“படத்தில் காண்டெஸா கார்தான் ஹீரோவும் வில்லனும். அந்தக் கார் எதுல ஓடுதுன்னே தெரில. லிட்டருக்கு 27 கி.மீ. போகுது” என்றார் படத்தில் நடித்ததோடூதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ள கார்த்திக் யோகி. சட்டம் படித்த கார்த்திக் யோகி, தனது நண்பரான வக்கீல் கார்த்திக் பாலனிடம் படத்தைக் காட்டியுள்ளார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டிக்கும் கலை இயக்கம் புரிந்த சதிஷ் குமார், “பெரிய இயக்குநர்களோட வேலை செய்ததை விட இந்த இளையவர்களிடம் வேலை செய்தது ரொம்ப நல்லாயிருந்தது. இந்தப் படம் வேற மாதிரி.!” என்றார்.