Search

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

Mad Max Fury Road Tamil Review

MAD MAX: FURY ROAD

உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான்.

இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

ஃப்யூரியோஸாசார்லஸ் தெரான்ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா தனது பட நாயகன்களின் முகத்தை உருமாற்றுவதுபோல், சார்லைஸ் தெரான் இப்படத்திற்காக கனக் கச்சிதமாக உருமாறியுள்ளார். ஃப்யூரியோஸாவாக தன்னைப் பொருத்திக் கொள்வதற்காக, மொட்டையடித்துக் கொண்டு இயக்குநருக்கு தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இப்படம், ஒரு சூப்பர் ஹீரோயின் படம். நாயகனின் பங்கு சம அளவு இருந்தாலும், படத்தைச் சுமப்பது இவர்தான். படத்தில் மேலும் ஐந்து பெண்கள் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். ஆறு மாதங்கள், நமீபியா பாலைவனத்தில், சுமார் 600 ஆண்கள் (War Boys) சூழ நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்கள் பாலைவனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சிரமப்பட்டுள்ளனர்.

முள்ளம்பன்றி வாகனம் (Buzzards), புல்லட் ஃபார்மர்ஸ் (Bullet farmers), ஃப்யூரியோஸா ஓட்டும் வார் ரிக் (War Rig) என படம் முழுவதுமே விநோதமான வண்டிகளின் சேஸிங், மோதல்கள் என பாலைவன வெப்பத்தை அதிகப்படுத்தும் காட்சிகளே.! சார்லைஸ் தெரானின் வாகனமான 18 சக்கரங்கள் கொண்ட ‘வார் ரிக்’, படத்திலொரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது.

Fury Road War Rig

மேட் மேக்ஸாக டாம் ஹார்டி நடித்துள்ளார். மெல் கிப்சன் இல்லாத குறையை ஜார்ஜ் மில்லர் தன் திரைக்கதையால் பாதியும், டாம் ஹார்டி – சார்லைஸ் தெரான் இணை கொண்டு மீதியையும் போக்குகின்றார். தன் குடும்பத்தைக் காக்க முடியாத குற்றவுணர்வில் இருக்கும் மேக்ஸின் உள்ளுணர்வு, உயிர் வாழ்வது பற்றி மட்டுமே நினைக்கிறது (a man reduced to a single instinct: survive). தப்பிப் பிழைக்க, ஃப்யூரியோஸாவின் உதவி தேவை என்பதால் மேக்ஸ் அவர்களுடன் இணைந்து கொள்கிறான். மனிதனின் உயிர் வாழும் ஆசைக்கு ஒரு உதாரணமான மேக்ஸின் கதாப்பாத்திரத்தைக் கொள்ளலாம். ‘க்ரீன் பேலஸ்’ எனும் இடமிருப்பதாக நினைக்கும் ஃப்யூரியோஸாவின் நம்பிக்கையை தவறெனச் சொல்லும மேக்ஸ், மனம் மாறி ஃப்யூரியோஸாவுக்கு உதவுகிறான்.

படத்தில் நக்ஸ் (Nux) எனும் மிகவும் சுவாரசியமான ‘வார் பாய்’ கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. மிகக் கொடூரமாகத் தாக்கும் மணல் புயலைப் பார்த்து ரசிப்பது, தன் உயிரை மாய்த்து ஃப்யூரியோஸாவைத் தடுக்க நினைப்பது, தனது ரத்தப் பையான (Blood bag) ஆன மேக்ஸைப் பாராட்டுவது, வார் ரிக்கில் தடுமாறி விழுந்து ஜோவிடம் திட்டு வாங்குவது என நக்ஸாக நடிக்கும் நிக்கோலஸ் ஹோல்ட் ஈர்க்கிறார். கடைசியில் ஜோவின் மனைவி மீதே காதல் வயப்பட்டு, ஃப்யூரியோஸா குழுவுக்கு உதவுகிறார்.

இப்படத்திலும் அரசியலை அழுத்தமாகப் பேசியுள்ளார் இயக்குநர் ஜார்ஜ் மில்லர். நீர் ஆதாரத்தை யார் கையகப்படுத்துகின்றனரோ, அவர்கள்தான் எதிர்காலத்தில் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முடியுமெனத் தெளிவாகச் சித்தரிக்கிறார். தண்ணீர் கிடைக்கும் இடத்தின் பெயர் வல்ஹல்லா. வல்ஹல்லா என்பது, ஸ்கேண்டிநேவியன் தொன்மங்களில் சுவர்க்கத்தைக் குறிக்கும் சொல். எதிர்காலத்தில், தண்ணீர் கிடைக்கும் இடமே சுவர்க்கம்!