Search

வாகா விமர்சனம்

Wagah thirai vimarsanam

பாகிஸ்தான் பெண்ணான காணமைக் காதலிக்கிறான் இந்திய இராணுவ வீரனான வாசு. அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை.

ஹரிதாஸ் படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் அடுத்த படமிது. ஹரிதாஸ் ஈட்டிய புகழை மறக்காமல், எதிலும் கவனம் செல்லாத நாயகனுக்கு ஆட்டிசம் இருந்தது என ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். இலவசமாக மது கிடைக்குமென இராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் நாயகன். இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் அலட்சியத்தையும் படம் நெடுகே வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு. நாயகியைப் பார்த்ததும் லட்சியக் காதலனாகி விடுகிறார்.

நாயகியாக ரன்யா ராவ். கதாபாத்திரத்தின் பெயர் காணம் என்றாலும், நாயகன் காஜல் எனப் பெயரை மாற்றிக் கொள்கிறான். ஏன் காஜல் என்ற பெயரை நாயகிக்குச் சூட்டுகிறான்? காணம் என்ற பெயருக்கு என்னக் குறைச்சலென்றும் தெரியவில்லை. இத்தகைய குழப்பமும், தெளிவின்மையும் திரைக்கதை நெடுகேயும் உள்ளது.

கண்டதும் காதல் என்பதில்தான் கதை தொடங்குகிறது. ஆனால், அதற்கான வலுவான காட்சியை அமைக்காதது பெரும் குறை. கதைப்படி, நாயகனை ரன்யா ராவ் அசத்தியிருக்கலாம். பார்வையாளர்களை அசத்தவும், நாயகனின் காதலை அவர்கள் உணர வைப்பதிலும் இயக்குநர் தோற்று விடுகிறார். அதனால் மொத்த படமுமே பலவீனமான இழையில் பரிதாபமாகப் பயணிக்கிறது.

மூக்கு புடைப்பான விஜயகாந்த் பட வில்லன்களை மீட்டுருவாக்கம் செய்யாமல் இருந்திருக்கலாம் குமரவேலன். கண் முன்னே ஓடும் நாயகன், நாயகி மீது பாகிஸ்தானியர்கள் சகட்டுமேனிக்குச் சுடுகிறார்கள். குண்டுகள் அவர் மீது படாமல் சிதறுகின்றனவாம். இத்தகைய எதார்த்தமற்ற சண்டைக் காட்சிகள், கொஞ்சம் நஞ்சம் படத்தின் மீதான பிடிப்பையும் தளர்த்தி விடுகிறது. நாயகன் தப்பித்தாக வேண்டுமென்ற பதைபதைப்பை ஏற்படுத்தாமல், எப்படியும் நாயகன் தப்பி விடுவான் என விட்டேத்தி நிலைக்குப் பார்வையாளனைத் தள்ளி விட்டுவிடுகிறார் இயக்குநர்.

யாருமில்லாப் பிரதேசத்தில், வேலியைப் பார்த்தவாறு கடும் தனிமையில் இரண்டு மூன்று நாள் வேலை புரிவதால் ஏற்படும் இராணுவ வீரனின் மனநிலையை படம் ஒரு வசனத்தால் கடக்கிறது. மற்றபடி படத்தில் எந்தச் சுவாரசியமும் இல்லை. சதிஷ் குமார் தனது ஒளிப்பதிவால் கண்களுக்குக் குளிர்ச்சியான விருந்து படைத்துள்ளது சிறப்பு.