Search

சுண்டாட்டம் விமர்சனம்

Sundattam

கேரம்-போர்ட் விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் என்பதை தான் ‘சுண்டாட்டம்’ என்ற தலைப்பு உணர்த்துகிறது.

படத்தின் களம் வடச் சென்னை என்பதிலிருந்தே கதையை யூகிக்கலாம்.

‘படத்தில்இரண்டு நாயகன்கள். ஒன்று இர்ஃபான். இன்னொன்று மது’ என சொல்லியுள்ளார் இயக்குநர் பிரம்மா G. தேவ். காசி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ள மதுவைநாயகன் என சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முதுகெலும்பு அல்லது மிக முக்கியமான கதாபாத்திரம் இவர் தான். அவரது போதையில் சொருகிய கண்கள், வசனம்உச்சரிக்கும் தொனி, தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் உடல்மொழி, உள்ளுக்குள் குமுறி அவமானத்தை வெறியாக வளர்த்துக் கொள்ளும் இயல்பு, செம்பட்டை தலைமுடி என மிரட்டுகிறார் மது.

கேரம் விளையாட்டில் பெரும் விருப்பம் கொண்ட நாயகன் பிரபாகரனாக இர்ஃபான். கையில் ஸ்ட்ரைக்கர் கிடைத்தால்.. அனைத்து காயின்களையும் குழிக்குள் கச்சிதமாக சுண்டி விட்டுவிடுவார். படத்தில் நடிப்பதற்காக ஏழு மாதங்கள் கேரம் விளையாடபயிற்சிப் பெற்றாராம். அவரது முதல்படமான பட்டாளம் பெற்றுத் தராத அங்கீகாரத்தை இப்படம் கண்டிப்பாக இர்ஃபானுக்கு பெற்றுத் தரும். விஜய் அலைவரிசையில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் பள்ளி மாணவனாக நடிக்கும் பொழுதே இவர் மட்டும் உயரமாய் தனித்துத் தெரிவார். அப்படி உயரமாக இருப்பதால், சுலபமாய் பிரபாகரன் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார். நாயகனும் அவரது நண்பர்களும் குடித்து விட்டு காவல்துறையினரிடமே செய்யும் அலப்பறை கலகலப்பூட்டுகிறது.

இர்ஃபானின் காதலி கலைவாணியாக அருந்ததி.பாடல்களுக்கு மட்டும் ஆடும் வழக்கமான நாயகி இல்லையெனினும்.. அழுத்தமாகமனதில் பதியுமளவு இல்லை அவரது நடிப்பு. பல விடயங்களையும் கவனித்து படமாக்கியிருக்கும் இயக்குநர், ஏனோ நாயகன் நாயகி தோன்றும் காட்சிகளில் அவ்வளவாக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இடையேயான காதலை இன்னும் அழகாக வெளிப்படுத்தி இருக்கலாம். படத்தில் திருப்பமும்,சஸ்பென்சும் இருக்க வேண்டுமென நாயகியின் சிரிக்க தெரியாத போலீஸ் அண்ணனாக ஒருவர் படத்தில் வருகிறார்.

ஆடுகளம், சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் தோன்றி, குணசித்திர வேடங்களில் சத்தமில்லாமல் கலக்குபவர் நரேன்.இந்தப் படத்தில் வட சென்னையின் முக்கியமான தாதாவாக வருகிறார். நாயகனின் திறமையைக் கண்டு அரவணைத்துக் கொள்வதால் இவர் நல்ல தாதாவாகி விடுகிறார்.இல்லையெனில் வெறுமென கொலைகள் செய்யும் கெட்ட தாதா. சமீப கால தாதாக்களில்இருந்து ரொம்ப மாறுபட்டு நரேன் அம்பாசிடர் உபயோக்கிறார். அடியாட்கள் எல்லாம் மாருதி ஆம்னியில் வருகின்றனர். சென்னை சாலைகளில் பச்சை வண்ண பல்லவன் பேருந்துகள் ஓடுகின்றது. காரணம் கதை 1990-இல் நடப்பது போல்படமாக்கப்பட்டுள்ளது. கேரம் விளையாட்டில் மக்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்த காலமது. அரத பழசான தொலைபேசி கருவியை உபயோகித்து ஒற்று வேலை செய்கின்றனர்.தொழில்நுட்ப வசதி இல்லா விட்டால் ஒரு கொலையைக் கூட சுலபமாக செய்ய முடியாதுபோல!! கொல்லப்பட வேண்டிய ஆள்.. தாம் காத்திருக்கும் சாலையில் வருவாரா மாட்டாரா என்ற அடியாள் ஒருவரின் பரிதவிப்பைப் படத்தில் அழகாகக் காட்டியுள்ளனர்.

படத்தின் முன்பாதி நேர்க்கோட்டில் பயணித்து சட்டென்று முடிகிறது. ஆனால் பின்பகுதியில் யாராவது யாரையாவது கொல்ல கத்தியுடனும், திட்டத்துடனும் விரக்தியோடு அலைந்த வண்ணம் உள்ளனர்.வாகனங்களிலும், தொலைபேசிகளிலும் 1990-ஐ கண் முன் கொண்டு வந்திடமுனைந்திருக்கும் இயக்குநர்.. நாயகனின் உடை விடயத்தில் மட்டும் பெரிதாய் கோட்டை விட்டு விட்டார். பாலகுருநாதனின் ஒளிப்பதிவும் LVK. தாஸின் படத்தொகுப்பும் கேரம்-போர்ட் விளையாட்டையும், சுற்றி நின்று வேடிக்கைப்பார்ப்பவர்களின் முகங்களையும் ரசிக்கும்படி செய்கிறது. பிரிட்டோ மைக்கேலின் இசையினில் சாவு வீட்டில் வரும் மரண கானா விஜியின் பாடல் ஈர்க்கிறது. படத்திற்கு அச்சு ராஜாமணியின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.விளையாட்டு போர் போலவும், கொலைகள் விளையாட்டாயும் சரவ சாதாரணமாய் நிகழ்கிறது. துயர சம்பவம் ஒன்றினோடு படத்தினை முடிப்பது.. தமிழ்த் திரைப்படங்களின் கட்டாய புது வழக்கமாய் மாறி வருகிறது போலும். நல்லவிதமாய் படத்தினை முடிக்க சூர்யவம்சத்து இயக்குநர் பழைய விக்ரமனனாய் மீண்டும் வந்து.. லாலாலல்லலாலா-க்களால் நம்மை குளிர்விக்கணும்.




Leave a Reply