Search
Anumanum-Mayilravananum-movie-review

அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்

Anumanum-Mayilravananum-movie-review

முதல்முறையாக இந்தியாவில் தயாராகியுள்ள இதிகாசக் கதையம்சம் உள்ள 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம், ‘அனுமனும் மயில்ராவணனும்’ ஆகும்.

இராமாயண போரின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில், தரையில் வீழ்ந்து கிடக்கும் ராவணனைப் பார்த்த ராமன், “நிராயுதபாணிகளைத் தாக்குவது தர்மம் ஆகாது. நீ இன்று போய் நாளை வா” என்கிறார். அன்றிரவு அவமானத்தில் பொறுமிக் கொண்டிருக்கும் ராவணனுக்கு, அவன் தலைகளில் ஒன்று, மாயாவி மயில்ராவணனைக் கொண்டு ராமனைக் கொல்வதற்கான யோசனையைச் சொல்கிறது.

அதற்கேற்ப மாயாவியான மயில்ராவணன், விபீஷ்ணனின் பலமான தற்காப்பை மீறி ராமனையும் லக்ஷ்மனனையும் கடத்தி விடுகிறான். தனியனாக அனுமன் எப்படி தன் பிரபுக்கள் இருவரையும் மீட்டார் என்பதே படத்தின் கதை.

இப்படத்தின் இயக்குநர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதைப் பயின்று, பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் பணியாற்றி, அந்த அனுபவங்களைக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்து மூல ஒவியங்களும் பெரும்பான்மையான கதைப்பலகைகளையும் எழில் வேந்தன் தன் IPAD கொண்டு வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலுமிருந்து எழு அனிமேஷன் கம்பெனிகள் இப்பட உருவாக்கத்தில் பங்கு பெற்றிருந்தாலும், சென்னையில் தான் பெரும்பான்மையாக உருவானது என்பது குறிப்படத்தக்கது.

சுற்றுப்புற சூழல் காட்சி வடிவமைப்பிலும் இதிகாசங்களில் காணப்படும் பிரம்மாண்ட கோட்டைகள், பாதாள உலகம் போன்ற மாயாஜால அரங்குகளை ஆங்கிலப்பட பாணியில் வடிவமைத்து இருக்கின்றனர். ‘ஸ்டார் வார்ஸ், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற படங்கள் மனதில் எழுப்பும் பாதிப்பை, நம் இதிகாசக் கதைகள் கொண்டு கண்டிப்பாக செய்திட முடியும்’ என்று திண்ணமாய் நம்புகிறார் இயக்குநர் டாக்டர் எழில்வேந்தன். சுற்றுச்சூழல் கணினி ஓவியம் என்ற துறையில் தலைமைப் பொறுப்பில் 10 வருடங்களுக்கு மேல் இங்கிலாந்தில் பணியாற்றியுள்ளார். சென்னையிலிருந்து கொண்டே வெளிநாட்டு/உள்நாட்டு கணினி ஓவியர்கள் கூடிய குழுவினை அமைத்து, வியப்பூட்டும் மாயாஜால அரங்குகளை சாமர்த்தியமாக அமைத்துள்ளார்.

அனுமன் தான் இப்படத்தின் கதாநாயகர். பாம்பு மனிதர், ஆளை விழுங்கும் ராட்சச புழுக்கள் என விசித்திரமான எதிரிகள் பலர் அனுமனுக்கு உண்டு. அவர்களைப் பந்தாடும் காட்சிகளிலும் வீர சாகச காட்சிகளிலும் சண்டைப் பயிற்சிக்கு முக்கியதவம் உள்ளதால் ஜப்பானில் உள்ள அனிமேஷன் கலைஞர்களை வைத்து அக்காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். முதன்முறையாக பத்துத்தலை இராவணன் புதுமையான ஒரு வடிவத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவரது பத்துத் தலைகளும் தனித்தனியே செயல்படுகிறது. கலிஃபோர்னியா அனிமேஷன் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர் ஒருவர் இந்தக் காட்சிகளை அனிமேட் செய்திருக்கிறார். தன் வேலையைச் சிறப்பாக முடித்த பின், “இராவணன் தான் நான் பார்த்த வில்லன் பாத்திரங்களிலேயே சிறந்த வில்லன்!” என்று கூறியுள்ளார்.

படக்குழுவின் இந்த நம்பிக்கை எதுவும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. படம் தனது தொழில்நுட்ப மேன்மையினால் கவரவே செய்கிறது. முப்பரிமாணத்தில் பார்க்கும் பொழுது, படக்குழுவின் உழைப்பு நன்றாகப் புலப்படும். அதனாலேயே, இந்தப் படத்தை, “சோட்டா பீம்” தயாரிப்பு நிறுவனமான க்ரீன் கோல்ட் (Green Gold Animations) வெளியிடுகிறது. இந்நிறுவனம் இப்படத்தை ஹிந்தியில் இந்தியாவெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுமன் பாதாள உலகம் செல்லும் பொழுது, பாதாள உலகின் காவலாளியான மகரத்வாஜனுடம் போரிட நேரும். அவர்களுக்கு இடையேயான போர் சம பலத்துடன் நிகழும். மகரத்வாஜனின் வீரத்தைக் கண்டு வியக்கும் அனுமன், ‘யார் நீ?’ என விசாரிக்கிறார். அவன் தன்னை, மாவீரனான அனுமனின் மகன் என அறிமுகம் செய்து கொள்வான். மகரவல்லபன், மட்சயந்தன் (மக்ஷயந்த அனுமன்), மகரத்வாஜன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவார் அனுமனின் மகன். பிரம்மச்சாரி என்று போற்றப்படும் அனுமனின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான இந்த நிகழ்வு, மயில்ராவணனன் அத்தியாயத்தில் தான் வருகிறது. ஆனால், இந்தக் கிளைக்கதை படத்தில் இணைக்கப்படாதது சிறிது ஏமாற்றமே!

>> Direction, Visual Design & Concept Art – Ezhil Vendan
>> Written, Music Direction & Produced by – Narayanan Vaidyanathan
>> Production – Rajiv Chilaka (Green Gold Animations)
>> Editing – Sabu Joseph
>> Lead Animators – Krishna Prasad CT, Jeff Clifton
>> Character Modeling – Ken Toney, Manmiaran Ganesan
>> Environment Modeling – Nithya Jeevan Munuswamy
>> VFX & Dynamics – Vedharathnam Radhakrishnan
>> Dialogue & Lyrics in Tamil – Rajesh Malarvannan
>> Video Editing – Nithesh Jadhav

படத்தில் பாடல்களும் உண்டு. ராமனும், சீதையும் பிரிவுத் துயரில் வாடுவதாக வரும் பாடல், வானரங்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பாசறையில் கொண்டாடுவதாக ஒரு பாடல். பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், அனிமேஷனிலேயே ராமன்-சீதை பிரிவுத் துயரைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருப்பதுதான் படத்தின் சிறப்பு. இந்தியாவிலும், சிறந்த முறையில் 3டி அனிமேஷன் படங்கள் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அனுமனும் மயில்ராவணனும்.