Search
Aruvi-review-fi

அருவி விமர்சனம்

Aruvi movie review

அருவியில் நனைவது போல் சிலர்ப்பூட்டும் விஷயம் வேறு ஏதேனும் உண்டா? அதன் அழகில் மயங்கி, கீழ் நோக்கிப் பாய்ச்சலாய் எழும் அதன் வேகத்தில் தலையை நுழைப்பது விவரிக்க இயலா ஆனந்தத்தைத் தந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டத் தொடங்கிவிடும். சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அருவியில் கரைவது குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இப்படமும் அத்தகைய உணர்வுகளையே ஏற்படுத்துகிறது. அருவி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கை, அதன் பாதையில் இருந்து விலக நேர்கிறது. எங்கோ தொடங்கி எப்படியோ முடிகிறது அருவியின் வாழ்க்கை.

ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைச் ’சொல்வதெல்லாம் சத்தியம்’ எனச் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்துள்ளனர். மீம்ஸ் யுக மேம்போக்கான கிண்டல் இல்லை. அவர்கள் தரப்பு சங்கடங்களையும் பதிந்துள்ளது சிறப்பு. ஒவ்வொரு எபிசோடையும் பிளான் செய்ய, ஆட்களை ஒருங்கிணைக்க, தொகுப்பாளரின் பந்தாவையும் இயக்குநரின் குடைச்சலையும் எப்படி அசிஸ்டென்ட் சமாளிக்க வேண்டியிருக்குமென மிக அழகாகப் பதிவு செய்துள்ளனர். வயிறைப் புண்ணாக்கும் செம கலகலப்பான காட்சிகள் அவை. சின்னச் சின்ன விஷயங்களையும் மிக நுணக்கமாகச் செதுக்கியுள்ளனர். உதாரணத்திற்கு, “ரோலிங் சார்ர்ர்” என்ற குரல் வரும் காட்சிகள் எல்லாம் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.

அனைத்து விதத்திலுமே படம் அற்புதமான அனுபவத்தைத் தந்தாலும், படத்தில் ஐந்து விஷயங்கள் மிக அருமையாக அமைந்துள்ளன. படத்தொகுப்பு, வசனம், நாயகி அதிதி பாலன், படத்தில் இழையோடும் பாசிட்டிவிட்டி, கதாபாத்திரத் தேர்வு எனப் படம் தரும் மிக ஃப்ரெஷான உணர்வுக்கு இவை ஐந்துமே காரணம். தர்ஷினி எனும் குழந்தை தான் படத்தின் ஒட்டுமொத்த மூடை-யும் (mood) செட் செய்கிறாள். அவளது க்ளோஸ்-அப் காட்சிகளில் மனம் கொள்ளை போவதில் இருந்தே, படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. மனதில் மாயம் நிகழ்த்தும் மிகக் கச்சிதமான படத்தொகுப்பு படத்தின் மிகப் பெரிய பலம். ரேமண்ட் டெபிக் கிராஸ்டா தான் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட்டின் மாண்டேஜ்களை எடிட்டர் கையாண்டுள்ள விதம் மிகவும் அருமை.

Aruvi movie review

விஷூவலாய் ஈர்த்துக் கொண்டிருக்கும் படம், ஓரிடத்தில் அருவி பேசும் நீளமான வசனத்தில் டாப் கியர்க்கு எகிறுகிறது. “இந்தச் சமூகம் என்ன சொல்லுது? நீ என்ன வேணா வேலை செய். எவனை வேணா சுரண்டித் தின்னு; காக்கா பிடி; அடிமையாயிரு; ஊழல் பண்ணு; லஞ்சம் வாங்கு; குத்து, அடி, மிரட்டு, கொலை பண்ணு, ரேப் பண்ணு, எத்தனை பேர் வயித்துல வேணாலும் மிதி; எவ்ளோ பேரை வேணாலும் முட்டாளாக்கு; பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணத்தை வேணா கொள்ளையடி – யாரும் உன்னைத் தூக்கிப் போட்டு மிதிக்க மாட்டாங்க; இங்க ஒரே ரூல் தான். பணம் சம்பாதிச்சா இந்தச் சமூகம் உன்னை மதிக்கும், பணம் சம்பாதிக்கலைன்னா இந்தச் சமூகம் உன்னை மதிக்காது” என்ற இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் நாயகி அதிதி பாலன். இது தனது முதற்படமென இயக்குநர் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. அப்படியொரு படமிது! ஆனால், அம்மணி போன்ற படம் தந்த ஒரு படைப்பாளியைத் திட்டமிட்டு அசிங்கப்படுத்துவதற்கு என்றே தொகுப்பாளர் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதற்குக் கண்டனங்கள்.

ஒரு பெண்ணை இருவர் ரேப் செய்து விடுகின்றனர்; ஒருவன் பணத்தேவையை உபயோகித்து அனுபவிக்கிறான். அதிலொருவன், ‘என்னைக் குற்றவாளி ஆக்குவது பெருமாளையே சந்தேகிப்பது போல்’ எனச் சொல்கிறான். இக்கயவன்களை வகையாகத் திணறச் செய்கிறாள் அருவி. ஆனால், அவர்கள் மேல் உங்களுக்குக் க்ளைமேக்ஸின் பொழுது எந்தக் கோபமும் எழாத வகையில் மிக மெச்சூர்டாகப் படம் முடிகிறது. இன்னும், தமிழ் சினிமா எப்படியெல்லாம் வில்லனைக் கொல்லலாம், பழி வாங்கலாம் என மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இளம் இயக்குநரான அருண் பிரபு புருஷோத்தமன் அதிசயிக்க வைக்கிறார். இசையமைப்பாளர்கள் பிந்து மாலினியும், வேதாந்த் பரத்வாஜும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர்.

‘சொல்வதெல்லாம் சத்தியம்’ இயக்குநராக கவிதா பாரதி, தொகுப்பாளராக லக்ஷ்மி கோபால ஸ்வாமி, துணை இயக்குநர் பீட்டராக பிரதீப் ஆண்டனி, ஆஃபீஸ் பாயாக வருபவன், வாட்ச் மேனாக வரும் பெரியவர், திருநங்கை எமிலியாக வரும் அஞ்சலி வரதன், சிறுமி அருவியாய் பிரனிதி, அருவியின் அப்பா என அனைத்துப் பாத்திரங்களையும் மிகக் கச்சிதமாகத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், இப்படமும் போலீஸைக் காமெடியாகத்தான் சித்தரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை உயரதிகாரியாக வரும் மொஹம்மது அலி பெய்கிற்குப் பெரிதாக வேலையில்லை என்பதால் ஈர்க்கவில்லை.

அருவியாக அதிதி பாலன். லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் நயன் தாராவிற்கே, பன்னிரெண்டு வருடங்களுக்குப் பின் தான் அறம் போன்றதொரு படம் வாய்த்துள்ளது. ஆனால், அதிதி பாலனுக்கு அப்பேரதிர்ஷ்டம் முதல் படத்திலேயே கிடைத்துள்ளது. அதை மிக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ரேப் செய்தவனைக் கூட இயல்பாக அருவியால் கடக்க முடிகிறது. ஆனால், அன்பான தந்தை தன்னை நம்பவில்லை என்பது ஒரு மகளுக்கு எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்பதை அதிதி பாலன் மிக அற்புதமாக தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஹெச்.ஐ.வி. நோய் முற்றிய நிலையில், அவர் வெளியிடும் காணொளி மனதைக் கலங்கச் செய்துவிடுகிறது.

இன்னும் கூட நம்பக் கஷ்டமாய் உள்ளது. அருவியில் நனைவது போல் சிலிர்ப்பான அனுபவத்தைத் தரும் ஒரு படம் மீண்டுமொரு முறை அமையுமா என்பது ஐயமே!