Search
bigg-boss-3 day-39

பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

bigg-boss-3 day-39

முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்‌ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்‌ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். ‘இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்’ எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்..

நாள் 39

“இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்” பாட்டைப் போட்டு எழுப்பி விட்டனர். குசும்புக்காகவே இந்தப் பாட்டைப் போட்ருக்கின்றனர். அதுவும் “இரு மணம் கொண்ட” வரி வரும் போது கவினையும், சாக்‌ஷியையும் கட் பண்ணி காட்டியவர்கள், “இடையினில் நீ ஏன்?” வரி வரும் போது லோஸ்லியாவைக் காண்பித்ததெல்லாம் வேற லெவல். எவனோ ஒருத்தர் எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கார். இதெல்லாம் நந்றாகத்தான் பண்றிங்க பிக் பாஸ், ஆனால் என்ன பண்ணுவது சட்டியில் ஒன்றும் இல்லையே!

எத்தனை தடவை தான் இதையே எழுதுவதெனத் தெரியவில்லை? ஆனாலும் முந்தைய நாள் என்ன நடந்ததோ அதே தான் இன்றும் நடந்தது.

சாக்‌ஷி

‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’ எனச் சொல்வாங்க. அது சாக்‌ஷிக்கு சாலப் பொருந்தும். ஷெரினும் ரேஷ்மாவும் அவ்வளவு தூரம் சொல்லியும், விடிந்ததும் மறுபடியும் அங்கேயே வந்து நிற்கிறார். ‘இப்படி ஏமாந்து போய்ட்டாரே!’ என சாக்‌ஷி மேல் ஒரு பரிதாப உணர்ச்சி இருந்தது. ஆனால் நேற்று நடந்ததைப் பார்க்கும் போது இது பழிவாங்கும் உணர்வோ என சந்தேகம் வருகின்றது. நேற்றே கவினையும் லோஸ்லியாவையும் சேர்த்து, தேரை இழுத்து தெருவில் விட்ட கணக்காகப் பஞ்சாயத்தில் நிறுத்தியாச்சு. ஆனாலும் திருப்பித் திருப்பி விளக்கம் கொடுக்கறேன் என ஒவ்வொரு தடவை பேசும் போதும், கவின் கூடத் தனிமையில் பேசினதை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

‘நமக்குக் கிடைக்கல, அதனால எவனும் நிம்மதியா இருக்கக்கூடாதுன்னு நினைக்கறாங்களோ!’ என ஐயம் எழுகிறது. இல்லையென்றால், ‘இவ்வளவு ஈசியா நம்மளை ஏமாத்திட்டானே! நாம யாருன்னு காட்டணும்’ என நினைத்துக் கூட கவினை இப்படி சுற்றலில் விடலாம். கவின், லோஸ்லியா கூட பேசினது, அவர் வெட்கப்பட்டுச் சிரித்தது, கை கோர்த்து நடந்தது, இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வெறியேறியுள்ளார் சாக்‌ஷி. இது எங்க போய் முடியுமோ?

கவின்

சாக்‌ஷி தன்னைப் பழி வாங்குகிறார் என நலந்றாகவே தெரிந்துகொண்டார். அவர் பேசினது எதுவும் பிரச்சினையாகக் கூடாதென்றுதான், ஏகப்பட்ட ரவுண்டு உட்கார்ந்து பேசி சமாதான உடன்படிக்கை எல்லாம் போட்டும், ஒன்றும் வேலைக்காகவில்லை. எப்படியாவது இதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டுமென நினைக்கிறார். ஆனால் சாக்‌ஷி விடுவதாக இல்லை. நாமிநேஷனில் தன் பெயரைச் சொன்னது தான் சாக்‌ஷியிடம் இருந்து விலகுவதற்குக் காரணமெனச் சொல்வதை நம்ப முடியவில்லை.

அதுவும் இல்லாமல் எதற்கு இத்தனை தடவை உட்கார்ந்து பேசவேண்டுமெனத் தெரியவில்லை. நேற்று அவ்வளவு பிரச்சினை நடந்த பிறகும் கூட, லோஸ்லியா கிட்ட தனியக உட்கார்ந்து பேசிக் கொண்டிருகிறார். இரண்டு பேர் கூட உறவில் இருந்து விட்டு, திடீரென ஒருத்தர் பக்கம் சாய்ந்து நிற்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயம். எல்லோர் முன்னாடியும் இப்படி மாட்டிகிட்டோம் என்கிற கோபம், கையறு நிலை, இதெல்லாம் அவனை யோசிக்க விடறதில்லை.

லோஸ்லியா

‘ஒரு விஷயம் புரியலைடா’ என கமல் எபிசோட் முடிந்ததும், இதே லோஸ்லியா தான் கவினிடம் பேசுகிறார். ‘ஒருத்தரோட பீலிங்ஸ் கூட விளையாடக்கூடாது. சாக்‌ஷி கூடக் கதைச்சது எல்லாம் வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் இல்லை. சாக்‌ஷி என்கிட்ட சொன்னாங்க. முதல்ல சாக்‌ஷி கிட்ட பேசி கிளியர் பண்ணுங்க. நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு, ஐயாம் டன்’ எனச் சொல்லிவிட்டுப் போனவர் தான் லோஸ்லியா.

‘நாங்க பழகற சொசைட்டில இப்படியெல்லாம் பொய் சொல்ல மாத்தாங்கடா!’ எனச் சொல்லும் லியா, நேற்று கொஞ்சம் கூடச் சம்பந்தமே இல்லாமல், “கவினுக்கும் சாக்‌ஷிக்கும் நடுவுல என்ன இருக்குனு எனக்குத் தெரியாது. நான் பாட்டுக்கு ஒரு வழில போய்ட்டு இருக்கேன்” என்றும், “என்கிட்ட வந்து சாக்‌ஷி சொல்லிருக்கணும்” எனப் பேசுகிறார். ஒரு நிமிடம் எனக்குத் தலையே சுற்றிவிட்டது. ‘இது என்னடா பித்தலாட்டமா இருக்கு?’ என்றிருந்தது.

சாக்‌ஷி சொல்கின்ற முக்கியமான குற்றச்சாட்டே, கவினும் லியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் இதற்கு இவர்கள் இரண்டு பேரும் என்ன பதில் சொல்றாங்க என்றால், “நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறதுல, ஃப்ரெண்ட்ஷிப்பா பழகறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என சாக்‌ஷி இரண்டு பேரிடமும் சொன்னாராம். ‘அதனால் தான் நாங்க இரண்டு மணிக்கு உட்கார்ந்து பேசினோம். ஆதலால் குற்றம் செய்தவரை விட, குற்றம் செய்யத் தூண்டிய சாக்‌ஷியே முதல் குற்றவாளி!’ என இரண்டு பேரும் விவாதித்தனர்.

இதில் வேறு, ‘எல்லாத்துக்கும் நான் தான் காரணம், யாரும் என்கிட்ட வந்து கதைக்க வேணாம்’ என சென்டிமென்ட் பெர்ஃபாமன்ஸ் செய்கிறார்.

அந்தப் பக்கம் இதே பெர்ஃபாமன்ஸைக் கவினும் போட்டுக் கொண்டிருந்தார். அதற்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த சாக்‌ஷி, ‘அனைத்து ராஜதந்திரங்களும் வீணாப் போய்டுமோ?’ எனனப் பயந்து, அதே பிட்டை அவரும் போட்டார்.

என்னங்கடா நடக்குது இங்க? அவார்டா கொடுக்கறாங்க! இப்படி நடிக்கறிங்க மொமென்ட்.

“தான் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்” எனச் சொன்ன உடனே ஷெரின், ரேஷ்மா, சேரன் எல்லோரும் டென்ஷன் ஆகிவிட்டனர். அதற்கப்புறம் ஷெரின் பேசினதெல்லாம் கோல்டு.

ரொம்ப நாள் கோமாவில் படுத்து எழுந்தவர் போல் தர்ஷன் ஒரு கேள்வி கேட்டார். “நைட் ரெண்டு மணிக்கு அப்படி என்ன ப்ரெண்ட்ஷிப் வேண்டி கிடக்கு?” எனக் கேட்டதுக்கு, “யாரைச் சொல்ற? சாக்‌ஷியையவா? லாஸையா?” என கவின் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி!!

“அடிங்…. #₹%%&&₹#@@#%&&” நியாயமாகப் பார்த்தால் இப்படித்தான் திட்டியிருக்கவேண்டும்.

“சாக்‌ஷியைக் கைவிட்ட உடனே லாஸ்லியா கையைப் பிடித்தது ரொம்ப தப்பு” என சரவணனும் சொன்னார். ‘எங்காத்தா முன்னமே சொல்லுச்சு’ கதையாக, “இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என சரவணன் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதற்கு நடுவில் சாண்டி வேறு சென்டிமென்ட் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார். ‘அவங்க என்ன கேட்டாங்க? இவன் என்ன சொல்றான் பாரு!’ மொமென்ட்.

கடைசியாக, “அனைத்தையும் மறந்துவிட்டு நல்லா தூங்கு” என சாக்‌ஷியிடம் ஷெரின் சொன்னது, ‘இதெல்லாம் ஒரு எபிசோட்ன்னு உக்காந்து பார்த்துட்டு இருக்கீங்களாடா? மூடிட்டுப் போய்த் தூங்குங்கடா நொண்ணைகளா!’ என நம்மிட. சொன்னது போலிருந்தது.

மகாதேவன் CM