Search
bigg-boss-3-day-61

பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

bigg-boss-3-day-61

புதுப்பேட்டை படத்தில் இருந்து, ‘வர்றியா வர்றியா’ பாடலுடன் தொடங்கியது நாள். சாண்டியின் தயவில் பாய்ஸ் டீம் பட்டையை கிளப்பினார்கள்.

காலை உணவுக்கு கெலாக்ஸ் மாதிரி ஏதோ பண்ணிருப்பார்கள் போல். அதை வைத்து எல்லோரும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தனர். சாப்பிட முடியாத அளவுக்கு செய்த புண்ணியவதி யாரு என்று தெரியவில்லை. வேறு யாராவது இருந்தால் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து கிளம்பியிருக்கும்.

க்ளீனிங் டீமில் இருந்த தர்ஷனை சீண்டிக் கொண்டிருந்தார் ஷெரின். தர்ஷனும் சும்மா கலாய்த்துக் கொண்டிருந்தார். தர்ஷன் சொடக்கு போட்டுக் கூப்பிட்டதில் டென்சனாகி விட்டார் டார்லிங். சேரன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

அடுத்த கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. போட்டியாளார்களை மீதி இருக்கிறவர்கள் சேர்ந்து கேப்டனைத் தேர்ந்தெடுக்கின்ற மாதிரியான கேம். ஒரு பவுலில் இருந்து சீட்டு எடுக்கவேண்டும். யார் பேர் அதிகம் வருகின்றதோ அவர்கள் தான் இந்த வாரம் கேப்டன். சாண்டி, சேரன் இரண்டு பேருக்கும் தான் சீட்டு வந்து கொண்டே இருந்தது. இறுதியில் சேரன் வென்றுசு கேப்டன் ஆனார். கடைசியில் அது நடந்து விட்டது.

கேப்டன் ஆவறதுக்கு சேரன் ஏன் இவ்வளவு ஆசைப்படவேண்டும்? தேசிய விருது வாங்கின இயக்குநர் இப்படி ஒரு சின்ன விஷயம் கிடைக்காமல் போனதற்கு, இவ்வளவு வருத்தப்பட வேண்டுமா? நிறைய கிண்டல்கள். கேலிகள்.

ஆரம்பத்தில் பெரிதாக எதுவும் ஆசைப்படவில்லை. ஆனால் முதல் வாரத்தில் இருந்தே நாமினேஷனில் வந்து கொண்டே இருந்தார். இரண்டாவது நாமினேஷனில் இருக்கும் போது தான், சரி ஒரு தடவை கேப்டனாக இருந்தால், இதில் இருந்து ஒரு வாரமாவது தப்பிக்கலாம் என அவருக்குத் தோன்றுகிறது. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை, எந்தப் புகாரோ, முகச்சுளிப்போ இல்லாமல் செய்து, கேப்டன் பதவிப் போட்டிக்கான தகுதியோட தான் அதர்கு ஆசைப்படுகிறார். ஆனால் கேப்டன் பதவியை விடுங்க, அந்தப் போட்டிக்குக் கூட அவரால் போக முடியவில்லை. நடுவில் இருந்த க்ரூப் பாலிட்டிக்ஸ், இன்னும் சில விஷயங்கள் அவருக்குத் தடையாக இருக்கு.

‘நான் கடைசியாகப் பார்த்த வெற்றி ஆட்டோகிராப் தான்’ என இந்த நிகழ்ச்சியில் ஒரு தடவை சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். தொடர் தோல்விகள், தொடர் பிரச்சினைகளை பார்க்கும் போது, ‘ஒரு சின்ன விஷயம் கூட நமக்கு நல்லதா நடக்க மாட்டேங்குதே!’ என ஓர் ஆதங்கம் எல்லோருக்குமே இருக்கும். அப்படி நடக்காத போது, அதற்குக் கூட ஆயிரத்தெட்டு தடைகள் வரும்போது, விரக்தியில், ஒரு இயலாமையில் தான் சேரன் கேட்டது. பிரச்சினையாகும் சமயத்தில், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ என கடவுளிடம் கேட்கின்ற மாதிரி, ‘ஏன் என் பேரைச் சொல்ல மாட்டேங்கறிங்க?’ என சேரனும் கேட்டிருக்கிறார்.

நன்றாக வேலை செய்தும், தகுதிகள் இருந்தும் ஒரு சின்ன வெற்றிக்குக் கூட அவர் இத்தனை வாரம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. எல்லோருக்கும் சுலபமாகக் கிடைக்கின்ற ஒரு விஷயம், நமக்கு மட்டும் கிடைக்காமல் இருக்கும் போது, நமது மொத்த கவனமும் அதில் தான் இருக்கும். இங்கெ சேரனுக்கும் அது தான் நடந்துள்ளது. வனிதா, மோகன், சாக்ஷி, அபி, ரேஷ்மா, மது மற்றும் ஆண்களில் கவினைத் தவிர அனைவரும் கேப்டனாகி விட்டார்கள்.

ஆக, நேற்று சேரனுக்கு ஒரு பெரிய ஆசுவாசம் கிடைத்திருக்கும். கடந்த சில நாட்களாகச் சோர்வாக இருந்தவர், கொஞ்சம் உற்சாகத்தோடு இருந்த மாதிரி தெரிந்தது.

இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், சாக்ஷிக்கு இம்யூனிட்டி பவர் கிடைத்த அந்த வாரம் சாக்ஷி வெளியேறினார். மதுவும் கேப்டன் ஆன வாரமே அவுட்டு. இந்த வாரம் என்னாகுதெனப் பார்க்கலாம்.

ஆனால் இந்த பாய்ஸ் டீமுக்கு எதுவும் தேவையில்லை. என்ன சூழ்நிலை வந்தாலும், அதைக் கலகலப்பாக்கி அவர்களும் சிரித்து, நம்மையும் சிரிக்க வைத்து விடுகிறார்கள். காலையில் சாப்பிட்டது, சாண்டிக்கு ஏதோ வேலையைக் காட்டிவிட்டது. பாத்ரூமுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார் சாண்டி. ஸ்கூல் டாஸ்கில் செய்த கேரக்டரைத் தொடர்ந்து அப்பப்போ செய்து கொண்டே இருந்தார். பார்க்கிறவங்களுக்கும் ஒரு பெரிய ரிலீஃப்.

லாஸ் தூங்கிக் கொண்டிருக்க, துப்பாக்கி சுட்டது. ‘கேப்டன் ஆன முதல் நாளே ஆப்பு வைக்கறிங்களே!’ என சேரன் கலாய்ட்தது செம்ம.

தர்ஷன், ஷெரின் நடுவில் வந்த சின்ன ஊடலுக்குள் புகுந்து, அந்த விரிசலை பெரிதாக்கிக் கொண்டிருந்தார் வனிதா. தர்ஷன் விஷயத்தில் ஷெரின் யோசிக்கிறதே வித்தியாசமாக இருக்கு. ‘ஒருத்தர் என்னை ஹர்ட் பண்றாங்கன்னா, அவங்களுக்கு அந்த உரிமையை நான் கொடுத்திருக்கேன். அதனால முதல் தப்பு என் மேல தான்’ என ஷெரின் சொல்கிறார். அவர்கள் சண்டை, யார் முதல்ல வந்து பேசுவது என்கிற ஈகோவில் வந்து நிற்கிறது.

இரண்டு டாஸ்க் நடந்தது. முதல் டாஸ்க், ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணியாகப் பிரிந்து விளையாட வேண்டும். முதலில் அணிக்கு ஒருத்தராக விளையாடிய பிறகு, மொத்த அணியும் விளையாடும். இரண்டு அணியும் நன்றாக விளையாடினார்கள். கவின் – முகின், லாஸ் – ஷெரின், வனிதா – கஸ்தூரி, தர்ஷன் – சாண்டி என சமமான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தது அழகு.

இரண்டாவது டாஸ்க் நிப்பான் பெயின்ட்ஸ் வழங்கிய டாஸ்க். இந்தப் போட்டிக்கும் சேரன் தான் நடுவர். முகின், சாண்டி, ஷெரின், தர்சன் ஒரு அணி. நடுவர் குறிப்புகளை மறைத்து வைக்க, அதைக் கண்டுபிடித்து, அந்த டாஸ்க்கை முடிக்க வேண்டும். குறிப்புகள் பாடல் வடிவில் இருக்கும். முகின் குறிப்புகளைக் கண்டுபிடித்து, பாடல் வரிகளைச் சொல்லி தன் அணிக்கு உதவி செய்ய வேண்டும். எதிர் அணியில் இந்த வேலையை கஸ்தூரி செய்தார். குறிப்பைக் கண்டுபிடிக்கவே நிறைய நேரம் எடுத்துக் கொண்ட மாதிரி இருந்தது. ‘குறிப்பை பாட்டா பாடாம சொல்லுங்க’ என கவின் கதறியும் கஸ்தூரி கேட்கவில்லை. பாடிக் கொண்டே இருந்தார். டாஸ்க் முடிந்ததுக்கு அப்புறம் கவின் அதைப் பற்றிக் கேட்டார். ‘டி.வி.ல காட்டுவாங்க இல்ல. அதனால தான் பாடினேன்’ எனச் சொன்னார் பாருங்கள் ஒரு பதில். யய்யா பிக் பாஸ், சீக்கிரம் வெளியில் அனுப்பி விடுய்யா!

‘கோபப்படாம போய் பேசுடா’ என தர்ஷனுக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார் சேரன். தர்ஷன், ஷெரின் ஆகிய இருவர் மீதும் நல்ல மரியாதை வைத்துள்ளார் சேரன். அவர்களுக்கு இடையில் வந்த இந்த சின்ன சண்டை எக்காரணம் கொண்டும் பெரிதாகி விடக்கூடாது என நினைக்கிறார். நேற்று வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தர்ஷனிடமும், ஷெரினிடமும் பேசிக் கொண்டே இருந்தார். ‘ஈகோவை விட்டுட்டு போய் பேசுப்பா’ என சேரன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த வனிதா, ‘இப்ப போய்ப் பேசிப் பிரச்சினையைப் பெருசு பண்ணிடாத’ என அட்வைஸ் பண்ணினார். உன்னோடு இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும்.

இதில் ஒரே ஓர் ஆறுதல் என்னவென்றால், தர்ஷன் – ஷெரின் இரண்டு பேருமே மெச்சூர்டான நபர்கள். மூன்றாவது நபரால் அவர்களை இன்ஃப்ளூயன்ஸ் பண்ண முடியாது.

தர்ஷன் – ஷெரினுக்கும் நடுவில் இருக்கின்ற உறவு நட்புக்கும் காதலுக்கும் நடுவில் இருக்கு என சேரன் சொன்ன பாயின்டை ஷெரின் ஒத்துக் கொண்டார். இந்த ஃபீலிங்ஸ் அவர்களுக்கு பிடித்திருக்கு. அதே மாதிரி சேரனிடம் ரொம்ப உண்மையாக இருக்கார். அவரிடம் பேசுவது ரொம்பக் கம்ஃபர்ட்டபிளாக இருக்கிறதாகச் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடுவில் கவின் – லாஸ் ட்ராக் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருந்தது.

கஸ்தூரி, வனிதாவைத் தவிர மீதி இருக்கின்ற எல்லோரிடமும் ஒரு நல்ல புரிதல் வந்துவிட்டது. எல்லோருமே கடினமான போட்டியாளர்கள். வரும் வாரங்கள் சிறப்பாக இருக்குமென நம்புவோம்.

மகாதேவன் CM